யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நீலகிரி மலைக் கிராம படுகர் இனப்பெண்!
சிறிய மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த மல்லிகா, தினமும் 12 மணி நேரம் படித்து தொடர் முயற்சியால் யூபிஎஸ்சி-ல் 621-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா என்கிற சிறிய மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. 26 வயதான இவர் யூபிஎஸ்சி தேர்வில் 621-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீலகிரியில் உள்ள படுக இனத்தைச் சேர்ந்த மல்லிகா யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அந்த மலைகிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
26 வயது மல்லிகாவின் அம்மா சித்ரா தேவி. அப்பாவின் பெயர் சுந்தர். அவர் அந்த மலைகிராமத்தில் சிறிய தேயிலைத் தோட்டத்தில் டீ இலை விவசாயம் செய்பவர். தாய் சித்ரா தேவி கிராமத்தில் நர்சாக பணிபுரிந்து ரிடையர் ஆனவர். மல்லிகாவைப் பற்றி அவரது அம்மா கூறும்போது,
“மல்லிகாவிற்கு நாலு வயதிருக்கும்போதே அவரது பள்ளி ஆசிரியை மல்லிகாவின் குணாதிசியங்களைப் பாராட்டினார். அவர் சக மாணவர்களுடன் அன்பாக பழகுவதாகவும் அக்கறை காட்டுவதாகவும் என்னிடம் தெரிவித்து பரிசும் கொடுத்து வாழ்த்தினார். இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது போன்றே உள்ளது. எங்க பகுதியில முதல் ஆளா மல்லிகா தேர்ச்சி பெற்றிருப்பது மகிச்சியளிக்கிறது. அவர் எல்லோருக்கும் தயங்காமல் உதவி செய்யக்கூடியவர். பெரிய பதவிக்கு வந்து கஷ்டப்படுபவர்களுக்கு அவர் உதவவேண்டும் என்பதே எங்களது விருப்பம்,” என்று விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மல்லிகாவிற்கு விவசாயம் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் 2011-ம் ஆண்டு கோயமுத்தூர் வேளாண் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு படித்தபோதுதான் யூபிஎஸ்சி தேர்வு குறித்து அறிந்தார். ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று தீர்மானித்தார்.
2015-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு சென்னை கிளம்பினார். சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்விற்குத் தயாரானார். தனது தேர்வில் வெற்றி பெற்றது குறித்து கூறும்போது,
“நான் முழு நேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். குறைந்தது 12 மணி நேரமாவது படிப்பேன். ஐந்து வருட கடின உழைப்பின் பலனாக 621-வது ரேங்க் எடுத்துள்ளேன்,” என்றார்.
கிடைக்கும் சர்வீஸை ஏற்றுக்கொண்டு ஐஏஎஸ் கனவை நோக்கி தொடர்ந்து முன்னேறவேண்டும் என்பதே இவரது லட்சியம். மல்லிகாவின் கனவு நனவாக அவரது பெற்றோர் முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
“எனக்குத் தெரிந்ததெல்லாம் தேயிலைத் தோட்டம் மட்டும்தான். அதிகம் படிக்கவில்லை. என் மகளின் துணிச்சலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கிராமச் சூழலில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது லட்சியத்திற்காக சென்னை, டெல்லி என பயமின்றி பயணிக்கிறார்,” என்றார் மல்லிகாவின் அப்பா சுந்தர்.
இந்தத் தேர்வெழுத விரும்புபவர்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை ஆகியவை கட்டாயம் இருக்கவேண்டும் என்கிறார் மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் மல்லிகா.
தகவல் மற்றும் பட உதவி: விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ்