துணை கலெக்டர் ஆகும் முதல் கேரள ஆதிவாசிப் பெண் ஐஏஎஸ்!
கரையான் அரித்த வீட்டில் வாழ்ந்த ஆதிவாசிப் பெண்ணின் லட்சியம் நிறைவேறிய கதை இது...
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ், கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்ற முதல் ஆதிவாசிப்பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
அவருக்கு தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பணியில் சேர ஆணை கிடைத்துள்ளது. லாக்டவுன் முடிந்ததும் தேதி அறிவிக்கப்பட்டதுடன் ஸ்ரீதன்யா கோழிக்கோடு துணை கலெக்டராக பணியில் சேருவார் என தெரிகிறது.
தற்போது லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் நிர்வாகம் தொடர்பான பயிற்சி மேற்கொண்டு வரும் ஸ்ரீதன்யா, தன் கனவான சிவில் சர்வீஸ் பணியில் தன் சொந்த மாநிலத்தில் சேரவிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவர், 2018ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 410வது இடம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரையான் அரித்த வீட்டில் வாழ்ந்த ஆதிவாசிப் பெண்ணின் லட்சியம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சுரேஷ்- கமலம் தம்பதியினர். குருச்யா என்ற ஆதிவாசி பிரிவைச் சேர்ந்த இவர்களின் மகள் ஸ்ரீதன்யா (26). ஏழ்மை காரணமாக குடிசை வீட்டில் வசித்து வரும் தன்யாவுக்கு, சிறு வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.
ஓரு முறை அந்த ஊருக்கு வந்த வயநாடு பெண் கலெக்டரின் நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் மரியாதையால் ஈர்க்கப்பட்ட தன்யா, தானும் இதே போன்ற நிலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.
இதற்காக சிறு வயதில் இருந்தே தீவிரமாக படித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் முதன்மையாக வந்தார். வீட்டில் செய்தித்தாள் வாங்கித் தரக்கூட இயலாத அளவிற்கு வறுமை. ஆனாலும், தன் இலக்கில் இருந்து விலகிச் செல்லவில்லை அவர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள போராடினார்.
தீவிர உழைப்பின் பலனாக, தேர்வுகளில் வெற்றி பெற்று, ஒரு வழியாக ஐஏஎஸ் நேர்காணல் செல்வதற்கு தேர்வானார் தன்யா. ஆனால், டெல்லி செல்லக்கூட கையில் காசில்லை. தன் நண்பர்கள் பலரிடம் கடனாகப் பெற்ற ரூ.40 ஆயிரத்துடன் டெல்லி சென்றார்.
வறுமை தன் கனவைத் தின்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தன்யா, நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தார்.
பின்னர் மீண்டும் சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீதன்யா, நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க, தன் பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். சமீபத்தில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடைந்த கையோடு தன் பெற்றோருக்கு இயன்ற உதவிகளைச் செய்து வந்தார் அவர்.
இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் ஸ்ரீதன்யா 410வது இடம் பெற்று வெற்றி பெற்றார். தேர்வு முடிவுகளால் தன்யாவும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தன்யாவின் வெற்றியை தங்களது வெற்றியாக அப்பகுதி மக்கள் கொண்டாடினர்.
காரணம், கேரளாவில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை ஆகும். தங்கள் இன மாணவர்கள் செல்ல புதிய பாதையை போட்டு வைத்த ஸ்ரீதன்யாவிற்கு அவர்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தன்யாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் காங்கிரஸ் தலைவர் ராஹுல் காந்தி வரை பலரும் பாராட்டுக்களையும், தேவையான உதவிகளையும் செய்ய முன்வந்தனர்.
தற்போது துணை கலெக்டராக சேர பணி ஆணை கிடைத்துள்ள இச்சமயத்தில், 'சமுதாயத்தில் பல சவால்களை எதிர்த்து போராடி வெற்றி கண்ட ஸ்ரீதன்யாவின் சாதனை பிற மாணவர்களுக்கும், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் பெரும் ஊக்கமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தன்யா, தனது வெற்றி குறித்து கூறுகையில்,
'சாதிப்பதற்கு எந்த சூழ்நிலையும் தடை இல்லை. என்னுடைய வெற்றி இன்னும் பல பேருக்கு உந்து சக்தியாக இருக்கும்,' என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஆல் தி பெஸ்ட் ஸ்ரீதன்யா...