'அடுத்தாண்டு முதலிடம் பிடிக்க முயற்சிப்பேன்' - நாசா காலண்டரில் இடம்பெற்ற பழனி மாணவியின் ஓவியம்!

நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது. 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதித்தது எப்படி என மாணவி நித்திகா தெரிவித்துள்ளார்.

'அடுத்தாண்டு முதலிடம் பிடிக்க முயற்சிப்பேன்' - நாசா காலண்டரில் இடம்பெற்ற பழனி மாணவியின் ஓவியம்!

Wednesday January 25, 2023,

2 min Read

நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதித்தது எப்படி என மாணவி தித்திகா நம்மிடம் தெரிவித்துள்ளார்.

முடியாது என்று எதுவும் கிடையாது. முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியுடன் போட்டியில் பங்கேற்றதாகக் கூறும் மாணவி தித்திகா, இன்று நாசா காலண்டர் போட்டியில் வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளார்.

பழனி மாணவி சாதனை:

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவிலான ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. இதில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா சார்பில் வெளியிடப்படும் காலண்டரில் அச்சிடப்படுகின்றன.

அதன்படி, 2023ம் ஆண்டுக்கான காலண்டர் ஓவியப்போட்டியை நாசா சில மாதங்களுக்கு முன்பு அறிவிந்திருந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Nasa

இதில் இந்தியாவைச் சேர்ந்த 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வாகின. அதில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகாவின் ஓவியம், 10 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு பிரிவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போல் தித்தகா வரைந்து அனுப்பிய ஓவியம் நாசா காலண்டரில் இடம் பிடித்துள்ளது.
Nasa

நாசா காலண்டரில் பழனி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் ஓவியம் இடம் பெறுவது தொடர்ந்து நான்காவது முறையாகும். உலக அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தித்திகாவிற்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலதரப்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

யார் இந்த தித்திகா?

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் அருண்குமார், உமா தேவி தம்பதியின் மகள் தித்திகா. பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு மற்றும் விளையாட்டில் படுசுட்டியான தித்திகாவிற்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம்.

ஆயில் பெயின்டிங், பென்சில் ஆர்ட், வாட்டர் பெயிண்டிங் வரைவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வரும் தித்திகாவிற்கு, எதிர்காலத்தில் ஓவியத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

Nasa

இதுகுறித்து மாணவி தித்திகா கூறுகையில்,

“எனக்கு 3 வயதில் இருந்தே ஓவியம் வரைய பிடிக்கும். தொடர் பயிற்சி மூலமாக மெருகேற்றி வருகிறேன். இயற்கை காட்சிகள், கார்டூன் பொம்மைகள், கடவுள் படங்களை வரைவது மிகவும் பிடிக்கும். வீட்டில் படிப்பு போக மீதமுள்ள நேரத்தை ஓவியம் வரைவதில் தான் செலவிடுவேன். எனது ஓவியம் நாசா காலண்டரில் இடம் பிடித்துள்ளது எனக்கும், எனது பெற்றோருக்கும் அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது,” எனத் தெரிவித்தார்.

உலக அளவில் நடக்கும் ஓவியப் போட்டியில் பங்கேற்பது குறித்து தித்திகாவிற்கு சிறிய தயக்கம் இருந்துள்ளது. ஆனால், அவரது பள்ளி தலைமையாசிரியரும், ஓவிய ஆசிரியரும் கொடுத்த ஊக்கமும், பெற்றோர் தந்த உற்சாகமுமே அவர் போட்டியில் பங்கேற்க தூண்டுகோலாக அமைந்துள்ளது.

Nasa
“நான் நன்றாக ஓவியம் வரைவேன் என்றாலும், நாசா காலண்டர் போட்டியில் பங்கேற்பது குறித்து சிறிது தயக்கம் இருந்தது. எனது பள்ளி தலைமையாசிரியரும், ஓவிய ஆசிரியரும் தான் நான் போட்டியில் பங்கேற்க உற்சாகப்படுத்தினர். தோல்வி அடைவதை விட முயற்சித்து பார்க்காமல் பின்வாங்கக் கூடாது என்பதால் தான் போட்டியில் பங்கேற்றேன். எனது பெற்றோரும் அதையே தான் வலியுறுத்தினர். அதன் பின்னர், கிட்டதட்ட 7 நாட்கள் முயற்சி செய்து, விண்வெளி வீரர் கூடைப்பந்து விளையாடுவது போன்ற ஓவியத்தை வரைத்து அனுப்பினேன்,” என்றார்.

எந்த ஒரு போட்டியிலும் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளக்கூடாது. தோற்றாலும் பரவாயில்லை மறுபடியும் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் எனக்கூறும் தித்திகா, அடுத்த ஆண்டும் நாசா காலண்டர் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வெல்ல முயற்சி செய்வேன் என்கிறார்.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற