Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'குரங்கு முகம் என கிண்டல் செய்த மக்கள்' - பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த தீப்தி ஜீவன்ஜி!

பிறந்தது முதலே தன் முக அமைப்பால் கேலி கிண்டலுக்கு ஆளான தீப்தி ஜீவன்ஜி, இன்று பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தன்னை வெறுத்தவர்களுக்கு தனது வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

'குரங்கு முகம் என கிண்டல் செய்த மக்கள்' - பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த தீப்தி ஜீவன்ஜி!

Monday September 09, 2024 , 3 min Read

பாரிஸ் பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்ற, அறிவுசார் குறைபாடு மற்றும் உருவகேலியால் பாதிக்கப்பட்டவரான தீப்தி ஜீவன்ஜி, பிரதமர் மோடி உட்பட பலரும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

deepthi jeevanji

பாராலிம்பிக் போட்டிகள்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடையவர்கள் என சுமார் 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் களமிறங்கியுள்ளனர்.

ஒலிம்பிக்கில் இந்தியா தவறவிட்ட பதக்கங்களை பாராலிம்பிக்கில் மீட்டெடுத்து, இந்தியாவின் பெருமையை பாராலிம்பிக்கில் நிலை நாட்டி வருகின்றனர் நம் வீரர், வீராங்கனைகள். ஆனால், இந்த வெற்றியை அவர்கள் எளிதாகப் பெற்றுவிடவில்லை என அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் சொல்ல முடியாத, சொல்லி முடியாத ஆயிரம் கதைகள் உள்ளன.

அப்படி தடைகளை வென்று சாதனை படைத்தவர்களில் ஒருவர்தான் தீப்தி ஜீவன்ஜி. இவர் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

deepthi jeevanji

யார் இந்த தீப்தி ஜீவன்ஜி?

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஜீவன்ஜி யாதகிரி - ஜீவன்ஜி தனலட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர்தான் தீப்தி ஜீவன்ஜி. பிறவியிலேயே அறிவுசார் குறைபாடுடையவராக பிறந்த தீப்தியை, அவரது உருவத்தை வைத்தும் சக கிராமத்தினர் கேலியும், கிண்டலும் செய்து வந்துள்ளனர்.

வெளியில் தலை காட்டினாலே தன்னை கேலி செய்கிறார்கள் என்பதை அந்த குழந்தையால் எளிதில் அறிந்து கொள்ளமுடிந்தது. வெளியில் விளையாடச் சென்றால்கூட அழுது கொண்டு வரும் அளவிற்கு தீப்தியை துரத்தி, துரத்தி மனதளவில் துன்புறுத்தியுள்ளனர் அவரைச் சுற்றி இருந்தவர்கள்.

“சூரியக் கிரகணத்தின்போதுதான் தீப்தி பிறந்தார். அவர் பிறக்கும்போதே அவருடைய தலை மிகவும் சிறியதாக இருந்தது. உதடுகள் மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அவரைப் பார்த்த எங்களது உறவினர்களும், கிராமத்தினரும் மனவளர்ச்சி குன்றியவர் என்றும், குரங்கைப் போன்ற முக அமைப்பை உடையவர் என்றும் கூறி, அவர் மனம் புண்படும்படி கேலி செய்தனர். அத்துடன், அவரை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம்.. ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி விடுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அந்த தவறைச் செய்யவில்லை."
deepthi jeevanji

எப்போதும் என் மகள், அமைதியாகத்தான் இருப்பார். தெருவிலுள்ள பிற குழந்தைகள் அவரை கேலி செய்தால் வீட்டுக்குள் வந்து அழுவார். நான் உடனே அவருக்கு இனிப்பு கொடுத்து ஆறுதல்படுத்துவேன். இன்று அவர் வெளிநாட்டில் போய் சாதித்து, தான் ஒரு சிறந்த பெண் என்பதை அவர்களுக்கெல்லாம் நிரூபித்துள்ளார், என தன் மகள் தீப்தி குறித்து முன்பொரு பேட்டியில் அவரது தாயார் தனலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு வித்திட்டவர்கள்

தனலட்சுமி கூறியதுபோல், மற்றவர்களால் வெறுக்கப்பட்டாலும், துரத்தி அடிக்கப்பட்டாலும், அங்கிருந்தே தனது வரலாற்றிற்கான விதையை விதைக்க ஆரம்பித்துள்ளார் தீப்தி. மக்கள் துரத்தி துரத்தியே என்னவோ, அவர் ஓட்டத்தில் சிறந்து விளங்கத் தொடங்கினார்.

தீப்தியின் இந்தத் திறமையை முதலில் அடையாளம் கண்டவர் அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர்தான். வாராங்கல்லில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தீப்தியிடம் ஒளிந்திருந்த திறமையைக் கண்டுகொண்டதோடு, அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றதும் அவரது விளையாட்டு ஆசிரியர்கள்தான்.

விவசாயம் பொய்த்துப் போகும் போது, கூலி வேலைக்குச் செல்லும் தீப்தியின் பெற்றோரும் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்கள்.

deepthi jeevanji

வெண்கலம் வென்ற தீப்தி

அதன்பயனாக, தன்னுடைய பயணத்தை மெல்லமெல்ல மெருகேற்றிய தீப்தி, கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீ. டி20 பிரிவில் தங்கம் வென்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 400 மீ. டி20 பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 55.07 வினாடியில் கடந்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றிகளினால், பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதி அவருக்குக் கிடைத்தது. இந்தப் போட்டியிலும் நிச்சயம் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோல் தற்போது, பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார் தீப்தி. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பலரும் தீப்திக்கு சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

deepthi jeevanji

பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார். மேலும், அவருக்கு குரூப்-2 பிரிவில் வேலையும், வாராங்கலில் நிலமும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர, தீப்தியின் பயிற்சியாளரான ரமேஷுக்கும் ரூ. 10 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார் தெலுங்கானா முதல்வர்.

நம்பிக்கை நட்சத்திரம்

இந்தப் பாராட்டுகளும், பரிசுகளும் அவர் பதக்கம் வென்றதற்காக மட்டுமல்ல.. உடல், மனம் என எதில் மற்றவர்கள் குறையைக் கண்டாலும், அவற்றை நம்பிக்கை எனும் ஒற்றை வார்த்தையால் உடைத்துவிட முடியும் என சாதித்துக் காட்டியதற்காகவும் தான். தீப்தியைக் கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது தங்களது செய்கையை எண்ணி, நாணி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வகையில், தன் வெற்றி முகத்தை உலகத்திற்கே காட்டி ஜொலித்து வருகிறார் தீப்தி.