தூக்கி எறியப்படும் தேசியக் கொடிகளை சேகரிக்கும் பேச்சுக் குறைபாடு உள்ள இந்த தேசபக்தர்!
நடைபாதைகள், குப்பைக்கிடங்கு, சாக்கடைகள் போன்ற இடங்களில் வீசப்பட்டுள்ள தேசியக்கொடிகளை ஒன்பது வயது முதல் சேகரித்து வருகிறார் இவர்.
நாம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் உற்சாகமாகக் கொண்டாடினாலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பான பல்வேறு சட்டங்களைப் பலர் அறிந்திருக்கவில்லை. இந்த சட்டங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இருப்பினும் கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசியக் கொடிகள் பொறுப்பின்றி சாலைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் தூக்கியெறியப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
இந்தச் சூழலை மாற்ற விரும்புகிறார் 32 வயதான ப்ரியரஞ்சன் சர்கார். உண்மையான தேசபக்தரான இவருக்கு பேச்சுக் குறைபாடு உள்ளது. இவர் பொதுவெளியில் தூக்கி எறியப்படும் தேசியக் கொடிகளை சேகரித்து வருகிறார்.
மேற்குவங்கத்தின் பாலி பகுதியைச் சேர்ந்த இவர் தனது ஒன்பது வயது முதலே தேசியக்கொடிகளை சேகரித்து வீட்டில் உள்ள ஒரு பெரிய பெட்டியில் சேமித்து வைத்துள்ளார்.
ப்ரியரஞ்சன் சாலைகள், நடைபாதை, குப்பைகிடங்கு, சாக்கடை போன்ற பகுதிகளில் இருந்து தேசியக் கொடிகளை சேகரித்து வருகிறார். இவரது இந்த முயற்சியை மக்கள் நாட்டுப்பற்றுமிக்க செயலாக பார்க்கவில்லை. பலர் இவரை மனநிலை சரியில்லாதவர் என்றும் குப்பைபொறுக்குபவர் என்றும் கூறியுள்ளனர்.
தற்போது நிலைமை மாறியுள்ளது. இவரைப் போன்றே ஒத்த சிந்தனை கொண்ட சிலர் இந்த உன்னதப் பணியில் இவருடன் கைகோர்த்துள்ளனர். பான் கறைகள், ஷூ தடங்கள் போன்ற எதுவும் இந்தத் தன்னார்வலர்களின் பணிக்கு தடையாக இருக்கவில்லை என Efforts for Good தெரிவிக்கிறது.
சிறுவயது முதலே தேசப்பற்று
ப்ரியரஞ்சனின் குழந்தைப் பருவம் போராட்டம் நிறைந்ததாக இருந்துள்ளது. பேச்சுக் குறைபாடு இருந்ததால் பள்ளியில் சேர்வது கடினமாக இருந்தது. அவருக்கு மூன்று வயதிருக்கையில் அவரது அம்மா சாலையில் கிடந்த ஒரு தேசியக்கொடியை எடுப்பதைக் கண்டதாக Loksatta தெரிவிக்கிறது. இது குறித்து அவர் தனது அம்மாவிடம் கேட்டபோது,
”தேசியக்கொடி என்பது இந்தியத்தாயின் புடவை. எனவே நீ இதுபோன்று சாலையில் தேசியக்கொடி கிடப்பதைப் பார்த்தால் உடனே அதை சேகரிக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவமே தேசியக்கொடி மீது சிறுவயதிலேயே ஒரு ஈர்ப்பு வரக் காரணமாக அமைந்துள்ளது. இந்திய ராணுவம் குறித்து தெரிந்துகொண்ட பிறகு அவரது நாட்டுப்பற்று மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் உயிர் நீக்கவும் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சாமனியராக குறைந்தபட்சம் சாலையில் கிடக்கும் தேசியக்கொடியை சேகரிக்கும் முயற்சியில் தான் ஈடுபடுவதாக ப்ரியரஞ்சன் தெரிவிக்கிறார்.
”நாட்டுப்பற்று காரணமாக நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணைந்திருக்கவில்லை,” என்று ப்ரியரஞ்சன் தெரிவித்ததாக Loksatta குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA