‘மனுசன் எல்லோரையும் அழ வைத்து விட்டார்’ - ரமேஷ் சென்னிதலாவின் கண்ணீர் பதிவு!
சமீபத்தில் நாய் ஒன்றை காரின் பின்புறம் கட்டி, சாலையில் தர தரவென இழுத்துச்செல்லும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் வெளியாக அதிர்ச்சியளித்தன. இதுதொடர்பாக ரமேஷ் சென்னிதாலா வெளியிட்டுள்ள பதிவு எல்லாரையும் நெகிழ வைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நாய் ஒன்றை காரின் பின்புறம் கட்டி, சாலையில் இழுத்துச்சென்ற இதயமற்ற செயல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள நெடும்பாசேரி பகுதியில் வசிக்கும் யூஸப் என்பவர்தான் இந்த இதயமற்ற செயலில் ஈடுபட்டார். கல் நெஞ்சம் கொண்ட யூஸப், தனது கார் பின்புறத்தில் நாயை கட்டி வைத்து சுமார் 600 மீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளார். சொல்லபோனால், சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை நாயை இழுத்துச்சென்றுள்ளார்.
அந்த வழியாக பைகில் சென்ற அகில் என்ற இளைஞர், வாயில்லா ஜீவனில் பரிதவிப்பை கண்டு, தனது மொபைலில் இந்த காட்சியை வீடியோ எடுத்தது மட்டுமின்றி, யூஸப்பிடம் வாக்குவாதம் செய்தார். அகிலின் தீவிர முயற்சியால், யூஸப் காரில் கட்டப்பட்ட நாயை அவிழ்த்து விட்டுவிட்டு சென்றார். இருப்பினும், யூஸப்பின் இந்த இதயமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் நாய் பரிதவிப்பை கண்டும் பல்வேறு தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, யூஸப்பை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையிடம், குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு அந்த நாயை பிடிக்காததால், வெளியில் கொண்டுபோய் விடுவதற்காக இப்படி செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, ரத்த காயத்துடன் மீட்கப்பட்ட நாயை ‘தயா’ என்ற விலங்குகள் நல அமைப்பினர் தத்தெடுத்துள்ளனர். அந்த அமைப்பின் துணைத்தலவர் கிருஷணன் என்பவர்.
அந்த நாய்க்கு ‘அபாக்க’ என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநில எதிர்கட்சித்தலைவருமான ரமேஷ் சென்னிதாலா, தனது ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
“நான் கண்ணூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, வளர்ப்பு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் குறித்து அறிந்துகொண்டேன். அந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. காசர்கோட்டில் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள எனது வீட்டுக்கு வந்தேன். அப்போது, நான் வளர்க்கும் நாயான ஸ்கூபி என்னிடம் ஓடிவந்து அன்பு காட்டியது.”
என்னுடைய இளைய மகன் ரமித் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்கூபியை எங்கள் வீட்டின் உறுப்பினராக்கினான். வெகு சீக்கிரமே எங்களுடன் அந்த நாய் ஒட்டிக்கொண்டு அன்பு செலுத்தியது. ஸ்கூபி என சத்தமாக அழைத்ததும், அது வேகமாக வந்து என் மனைவி அனிதா மீது இடித்து நிற்பதை கவனித்தோம்.
ஏன் இப்படி வந்து இடிக்கிறது என சந்தேகித்தோம். அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது தான் ஸ்கூபிக்கு கண்பார்வை இல்லை என்பது தெரியவந்தது. கேட்டதும், எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.
”தொடர்ந்து, அதன்மீது இன்னும் அன்பு காட்டத்தொடங்கினோம். சக உயிரினங்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். நாம் காட்டும் அன்பை, இரண்டுமடங்காக திருப்பித்திரும் பிராணிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல; அவர்களுக்கும் சொந்தமானதுதான்,” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.