உங்க செல்ல நாய்களின் கால்களில் காயம்படாமல் இருக்க கலர்புல் ஷூ வந்தாச்சு!
அனீஷா பிள்ளை, தீபக் குப்தா இருவரும் இணைந்து தொடங்கிய Zoof Pets செல்ல நாய்களின் கால்களில் காயல்படாமலும் அழுக்காகாமலும் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
அனீஷா பிள்ளை, தீபக் குப்தா இருவரும் மும்பையைச் சேர்ந்த ஆலோசகர்கள். 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை எல் & டி, ரிலையன்ஸ் குழுமம் போன்ற நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை இணைத்துக்கொள்ள இவர்கள் உதவி வந்தார்கள்.
இவர்கள் இருவரும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள். இவர்களுக்கு பிராடக்ட் டிசைனிங் மற்றும் கிரியேஷனில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அது விரைவிலேயே நிறைவேறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
நாய்களுக்கான தனித்துவமான ஷூக்களை இவர்கள் வடிவமைத்தார்கள். செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மத்தியில் அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
“நாங்கள் முன்வடிவம் உருவாக்கி பிராடக்ட் டெவலப்மெண்ட் வேலைகளையும் முடித்தோம். மக்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு தனித்துவமான பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பினோம்,” என்கிறார் அனீஷா.
பிராடக்ட் முடிவு செய்வதற்கு முன்பு இதுபற்றி பலரிடம் பேசினார்கள். அவர்களில் ஒருவர் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வந்தார். அவரிடம் பேசினார்கள். அடுத்தடுத்த நபர்களிடம் இவர்களது உரையாடல் நீண்டுகொண்டே போக, ஒருகட்டத்தில் நாய் வளர்க்கும் கிட்டத்தட்ட 200 குடும்பங்களுடன் பேசி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார்கள்.
நாய்களின் பாதங்களில் கல், கண்ணாடித் துண்டுகள் போன்றவை காயம் ஏற்படுத்துவதாக பெரும்பாலானோர் கவலை தெரிவித்தார்கள். வெளியில் ஆசையாக அழைத்து செல்ல விரும்பினாலும் இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்கமுடிவதில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். மேலும் நாய்களின் பாதங்கள் அழுக்காகிவிடுவதால் வீடும் நாசமாகிவிடுவதை சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
நாய்களுக்கு அழகிய காலணிகள்
நாய்களுக்கென பிரத்யேகமாக ஷூ வடிவமைத்தால் பயன்படுத்த முன்வருவீர்களா என்று கேட்டுள்ளனர். இந்த யோசனை புதிது என்பதால் பலர் தயக்கம் காட்டியுள்ளனர். இருப்பினும் இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண முழு முனைப்புடன் இருவரும் களமிறங்கினார்கள்.
அனீஷா, தீபக் இருவரும் நாய்களின் பாதங்களைச் சுற்றிலும் பலூன் பயன்படுத்தினார்கள். இதனால் தண்ணீரும் உள்ளே செல்லாது அதேசமயம் கால்களும் அழுக்காகாது என நினைத்தனர்.
இயற்கையான ரப்பர் பயன்படுத்தி Zoof Boots என்கிற பெயரில் முதல் முன்வடிவத்தை டிசைன் செய்தார்கள். நாய்களின் கால்களில் காயம் படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த ஷூ தயாரிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் சேர்ந்து Zoof Pets ஸ்டார்ட் அப் நிறுவினார்கள். இந்தியாவிலேயே நாய்களுக்கான ஷூக்களை டிசைன் செய்து தயாரிக்கும் முதல் ஸ்டார்ட் அப் Zoof Pets என்கின்றனர் இந்நிறுவனர்கள்.
ஆரம்பகட்டம்
2019-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 100 Zoof Boots வடிவமைத்து கைகளாலேயே தயாரித்தனர். இன்ஸ்டாகிராமில் விற்பனையை ஆரம்பிக்க இரண்டே நாட்களில் விற்பனையாகிவிட்டது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து அனீஷாவின் அம்மா வீட்டிலேயே கூடுதலாக ஷூக்களைக் கைகளாலேயே தயாரித்தார்கள். இன்ஸ்டாகிராமில் விற்பனையைத் தொடங்கிய மூன்று மாதங்களில் சொந்தமாக வலைதளத்தைத் தொடங்கினார்கள்.
கணிசமான ஆர்டர் அளவு கிடைத்ததும் தொழிற்சாலை ஒன்றை வாடகைக்கு எடுக்கத் தீர்மானித்தனர். 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தேவையான பொருட்களை வாங்கி, ஊழியர்களை பணியமர்த்திய சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த முயற்சியில் தொய்வு ஏற்படமால் தொடரத் தீர்மானித்தனர். வேலைகளை அவர்களே பகிர்ந்துகொண்டனர். அனீஷாவின் பெற்றோர் பேக்கிங், ஷிப்பிங் போன்ற வேலைகளில் கைகொடுத்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொழிற்சாலையில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2021-ம் ஆண்டு சொந்தமாக இயந்திரத்தை தயாரித்து Zoof Pets நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான Zoof Boots தயாரிப்புப் பணிகளை தானியங்கிமயமாக்கினார்கள். இதர ஷூக்கள் இண்டஸ்ட்ரியல் தையல் இயந்திரம் கொண்டு தயாரிக்கப்பட்டன.
இன்று இந்த ஸ்டார்ட் அப், நாய்களுக்கான ஐந்து வகையான ஷூக்கள், ஒரு வகை ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் காலர்ஸ், லீஷஸ், நாய்களின் கால்களுக்கு பயன்படுத்தப்படும் பாம் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
சுகமான, சுத்தமான பாதங்கள்
மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவரான தீபாந்தி கர்க். இவரது செல்ல நாயின் பெயர் கிளாடோ.
“என் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் செல்லப்பிராணிக்கு அடிபட்டுவிட்டது. அதேபோல் கிளாடோவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வருத்தத்தில் இருந்தேன்,” என்கிறார் தீபாந்தி.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் Zoof Pet பற்றி தெரிய வந்ததும் உடனடியாக வாங்கிவிட்டார். இதுவரை கிளாடோவிற்காக 25 செட் ஷூக்களை வாங்கியிருக்கிறார்.
டெக்ஸ்டைல் டிசைனரான நிதி கோயல் சொந்தமாக வணிகத்தை நடத்தி வருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு Zoof Pets காதலர் தினத்தன்று ஒரு போட்டி வைத்திருந்தது. போட்டியில் நிதி கோயல் வெற்றி பெற்றதால் Zoof Boots பரிசாகக் கிடைத்திருக்கிறது.
”இந்தியாவில் இப்படி ஒரு தயாரிப்பை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. நாயின் பாதங்களின் அளவைக் கணக்கிடுவது மிகவும் சிரமமான விஷயம். இதுபோன்ற நுணுக்கமான விவரங்களைக் கேட்டறிந்து தரமான ஷூக்களைக் குறைந்த விலையில் வழங்குகிறார் அனீஷா,” என்று நிதி கோயல் பாராட்டினார்.
பாதங்கள் அழுக்காகாமலும் காயம் படாமலும் Zoof Pets தடுக்கிறது. அதுமட்டுமல்ல நாய் உண்ணி, தொற்று போன்றவை ஏற்படாமலும், ஹிப் டிஸ்பிளாசியா போன்ற நோய்கள் தாக்காமலும் தடுக்கிறது.
“நாய்க்கு சிகிச்சையளிக்கத் தேவைப்படும் தொகையைக் காட்டிலும் ஷூக்களின் விலை மிகவும் குறைவு என்பதால் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பலனடையலாம்,” என்கிறார் அனீஷா.
“குழந்தைகள் முதல் முதலாக ஷூக்களைப் போட்டுக்கொள்ளும்போது எப்படி ஆரம்பத்தில் சற்று தடுமாறுவார்களோ அப்படித்தான் நாய்களும். சரியான அளவில் பொருத்தமான ஷூக்களைப் போட்டுக்கொண்டால் விரைவிலேயே பழகிவிடும். நடப்பது, ஓடுவது என நாய்கள் இயற்கையாக செய்யும் வேலைகளுக்கு எந்தத் தடையும் இருக்காது,” என்கிறார்.
ஏராளமான வகைகள்
இந்த ஸ்டார்ட் அப் பூட்ஸ், கேஷுவல்ஸ், ப்ளாப்ஸ், கிரிப்ஸ், எத்னிக் என ஐந்து வகையான ஷூக்களைத் தயாரிக்கின்றன. கேஷுவல் ஷூக்கள் சாஃப்டாகவும் சறுக்காமலும் இருக்கும். அத்துடன் காற்றோட்டமாகவும் கூலாகவும் இருக்கும் என்கிறார் அனீஷா.
“கிரிப் ஷூக்கள் மார்பிள் அல்லது டைல்ஸ் தரையில் வழுக்காமல் இருக்கும். இதுபோன்ற தரைகளில் செல்லப்பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் போய்விடும். இதைத் தவிர்க்க கிரிப் ஷூக்கள் உதவும்,” என்கிறார் அனீஷா. ஹிப் டிஸ்பிளாசியா, ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்சனை இருக்கும் நாய்களுக்கும் கிரிப் ஷூக்கள் உதவும்.
எட்டு பீஸ்கள் செட்டாக விற்பனை செய்யப்படும் Zoof Boots ஆரம்ப விலை 799 ரூபாய். நாய்களின் பாதத்தின் அளவைப் பொருத்து விலை மாறுபடும். பிளாப்ஸ், கேஷுவல்ஸ், கிரிப் ஆகியவை நான்கு செட்களாக 1,499 மற்றும் 1,999 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஷூக்கள் வடிவமைப்பு எளிதல்ல
சரியான மெட்டீரியல் வாங்குவது, சரியான அளவில் டிசைன் செய்வது என ஷூக்களின் வடிவமைப்பு சவாலான வேலையாகவே இருந்திருக்கிறது. வெவ்வேறு இன நாய்களுக்கு ஏற்றவாறு டிசைன் குழுவினர் ஷூக்களை வடிவமைத்திருந்தனர்.
முறையாக ஆய்வு செய்யப்பட்டு முன்வடிவம் தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 25 பேருக்காவது முன்வடிவம் அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படுகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 10,000 செட் ஷூக்களை Zoof Pets விற்பனை செய்திருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் ஒரு மாதத்திற்கு சராசரியாக 400-500 ஷூக்களை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு மாதமும் 20-25% வளர்ச்சி இருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. 19-25% வாடிக்கையாளர்கள் திரும்ப வாங்குகின்றனர்.
சுயநிதியில் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட் அப் சிறப்பாக வருவாய் ஈட்டு வருகிறது.
“தற்போது வணிகத்தை நடத்தப் போதுமான நிதி உள்ளது. வருங்காலத்தில் நிதி திரட்டுவோம்,” என்கிறார் அனீஷா.
Zoof Pets குழுவில் 23 பேர் உள்ளனர். 17 பேர் தயாரிப்புப் பணிகளிலும் 3 பேர் வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பாகவும் செயல்படுகின்றனர். ஒருவர் ஆர்&டி பிரிவிற்கு தலைமை வகிக்கிறார். மார்க்கெட்டிங் செயல்பாடுகளில் 7 ஃப்ரீலான்ஸர்கள் உதவுகின்றனர்.
வருங்காலத் திட்டங்கள்
இந்நிறுவனத்தின் பட்டியலில் அடுத்தபடியாக அட்வென்சர் ஷூக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
“ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு விதமாக நடக்கும், ஓடும். இதற்கான முன்வடிவத்தில் சென்சார்களை இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் பிரெஷர் பாயிண்டுகளைப் புரிந்துகொள்ளமுடியும். சிறப்பான டிசைன் உருவாக்க இந்தத் தரவுகள் உதவும்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: வித்யா சிவராமகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
நாய், பூனை மட்டும் இல்ல; மண்புழுவும் செல்லப்பிராணிதான் – 'Worm Rani’ எனும் வாணி மூர்த்தி!