நாய், பூனை மட்டும் இல்ல; மண்புழுவும் செல்லப்பிராணிதான் – 'Worm Rani’ எனும் வாணி மூர்த்தி!
பெங்களூருவில் மாடித்தோட்டம் வைத்திருக்கும் வாணி மூர்த்தி இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டிருக்கிறார்.
வாணி மூர்த்தி என்கிற பெயரைக்காட்டிலும் ’மண்புழு வாணி’ (Worm Rani) என்கிற பெயர் இன்ஸ்டாகிராமில் பிரபலம். வாணியின் வீடு பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. இவரது மாடித்தோட்டத்தில் பிரம்மி, ரோஸ்மேரி, பேசில் போன்ற மூலிகை செடிகள் இருக்கின்றன. கத்திரி, எலுமிச்சை, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகளும் தோட்டத்தில் நிறைந்துள்ளன.
இந்த பசுமையான செடிகளுக்கு சற்று தள்ளி ஒதுக்குப்புறமாக சிறிதும் பெரிதுமாக சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நேரடியாக சூரிய வெளிச்சமோ காற்றோ படாமல் அந்த மூட்டைகளில் உரம் வைக்கப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமா? இந்தத் தோட்டத்திற்கு ஏகப்பட்ட விருந்தாளிகள் வந்து செல்கின்றனர். யார் தெரியுமா? அணில், காக்கா போன்றவை மட்டுமல்ல குரங்குகளும் வந்து செல்கின்றன. குரங்குகள் வந்தால் செடிகளையும் காய்கறிகளையும் நாசம் செய்துவிடாதா என்று வாணி மூர்த்தியிடம் கேட்டபோது,
“குரங்குகள் வந்து போவதை நான் பிரச்சனையாகவே பார்ப்பதில்லை. பசிக்கும்போது வந்து சாப்பிடுகிறது. சாப்பிடட்டுமே! அதனாலென்ன? ஒன்று நான் காய்கறிகளைப் பறித்து பயன்படுத்துகிறேன், அல்லது குரங்குகள் சாப்பிடுகின்றன. எப்படியிருந்தாலும் இந்த செடிகளால் பலன்தானே?,” என்று பதில் கேள்வியெழுப்புகிறார்.
வாணிக்கு சுற்றுச்சூழல் மீதிருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். இவர் தனது சமையலறையில் உற்பத்தியாகும் ஈரக்கழிவுகளில் ஒரு துளியையும் வீணாக்குவதில்லை.
வாணி மூர்த்திக்கு மண்புழுக்கள் செல்லப்பிராணிகள். மண்புழு உரம் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் வெறும் கைகளை இவர் வைக்க, இவரது செல்லப்பிராணிகளான மண்புழுக்கள் கைகளில் ஏறி கொஞ்சி விளையாடுகின்றன.
தன்னம்பிக்கை பொங்க இவர் பேசும் ஸ்டைல் பலரைக் கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இவரை 2,00,000-க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.
வெளியுலக அனுபவம்
“நான் அதிகம் பேசமாட்டேன். அதுதான் என் சுபாவம். வீட்டில் இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் வேறு எதைப் பற்றியும் யோசிக்கக்கூட நேரம் இல்லாமல் போனது,” என்கிறார் 61 வயது வாணி மூர்த்தி.
வாணி மூர்த்தி 40-களில் இருந்த சமயத்தில் உள்ளூர் நகராட்சி அமைப்பில் தன்னார்வலராக இணைந்துகொண்டார். இதுதான் தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது.
“எத்தனையோ பெண்கள் பொது நலனில் ஈடுபடுத்திக்கொள்வதையும் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் பார்த்தேன். மெல்ல எனக்கு உத்வேகம் பிறந்தது. நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். எனக்குப் பொருத்தமான வேலை எதுவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தேன்.”
பிரபல மகளர் மருத்துவர் டாக்டர் மீனாட்சி பரத் இவரைப் பெரிதும் கவர்ந்துள்ளார். டாக்டர் மீனாட்சி பரத் திடக்கழிவு மேலாண்மை நிபுணரும்கூட. பெங்களூவைச் சேர்ந்தவர். இவர் தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக வாணி மூர்த்தி தெரிவிக்கிறார்.
இப்படி கழிவு மேலாண்மை பிரிவில் ஆர்வம் கொண்ட பலரது அறிமுகம் கிடைத்திருக்கிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக இணைந்துள்ளனர்.
“ஒரு விஷயத்தில் சிறப்பிக்க வேண்டுமானால் முறையாக கல்வியோ தகுதியோ முக்கியமில்லை. அதில் ஆர்வம் இருக்குமானால் தானாக கற்றுக்கொள்ள ஆரம்பிப்போம்,” என்கிறார்.
ஊரடங்கு சமயத்தில் வாணி சமூக வலைதளங்கள் பற்றி அதிகம் தெரிந்துகொண்டுள்ளார்.
“பெருந்தொற்று பரவலுக்கு முன்பு எனக்கு 2000 ஃபாலோயர்ஸ் மட்டுமே இருந்தார்கள். பெருந்தொற்று சமயத்தில் என் உறவுக்காரப் பெண்ணிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அதன் பிறகு என்னுடைய பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்கிறார்.
தனித்திறனைக் கண்டறியவேண்டும்
இன்று வாணி மூர்த்தி சமூக வலைதளங்களில் நல்ல செல்வாக்குள்ளவர்.
“குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். பொறுப்புகளும் குறைந்துவிட்டது. என்னுடைய ஆர்வத்தில் கவனத்தை திசை திருப்பி நேரம் ஒதுக்கி வருகிறேன்,” என்கிறார்.
சமூக வலைதளங்களில் செல்வாக்கு கிடைப்பது அத்தனை எளிதல்ல. இதை எப்படி சமாளிக்கிறார் என்று கேட்டபோது,
”ஒவ்வொருக்கும் ஒரு பலம் இருக்கும். என் வாழ்க்கையில் நான் எதையும் உருப்படியாக செய்யவில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் திடீரென்று இந்த எண்ணம் மாறியது. புதிய விஷயத்தை கையிலெடுத்தேன். படிப்படியாக நான் தேர்வு செய்த பகுதியில் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மற்றவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று யோசிக்காமல் எனக்கான பாதையைத் தேர்வு செய்துகொண்டேன்,” என்கிறார்.
வெளியுலக அனுபவம் அதிகமில்லாமல், வீட்டிலேயே முடங்கியிருந்த கூச்ச சுபாவமுடைய வாணி இன்று சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவராக மாறியிருக்கிறார்.
”போட்டி நிறைந்த இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள் அமைதியான மனநிலையுடன் தங்கள் மீது அக்கறை காட்டவேண்டும். இயற்கையே என்னை அமைதிப்படுத்துகிறது. நல்ல உணவை உட்கொள்கிறேன். நல்ல உணவை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்,” என்கிறார்.
கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு வாணி தனது மாடித்தோட்டத்தில் இருந்த ஒரு புழுவைப் பற்றி ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இது வைரலாகி பலர் அதைக் காப்பாற்றுமாறு பதிவிட்டிருந்தனர். பல குழந்தைகள் இந்த வீடியோவை ரசித்துள்ளனர்.
“குழந்தைளை சிறு வயதிலேயே நெறிப்படுத்த முடியும். ஒரே ஒரு செடிகூட நட்டு பழக்கமில்லாத எனக்குள் ஒரு விவசாயி ஒளிந்திருப்பது எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகே வெளிப்பட்டிருக்கிறது. என்னால் முடியும் என்றால் எல்லோராலும் முடியும். குழந்தைகள் வளரும் வயதிலேயே பூமியுடனும் இயற்கையுடனும் மண்ணுடனும் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் வருங்காலம் சிறப்பாக இருக்கும்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா