பழங்குடியினக் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களான காவல்துறை அதிகாரிகள்!
விதுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் கேரளாவின் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்க உதவுவதற்காக மோசமான நிலப்பரப்புகளையும் மலைப்பகுதிகளையும் கடந்து செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நாடு முழுவதும் உள்ள காவல் துறையினர் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க முன் களப் பணியாளர்களாக அயராது உழைத்து வருகின்றனர். பொதுமக்கள் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடவும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறவும் காவல் துறையினர் உதவியுள்ள எத்தனையோ சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டுள்ளோம்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விதுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக செய்து முடிப்பதுடன் அருகிலுள்ள காட்டுப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பாடம் எடுக்கின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வகுப்பெடுக்க இந்த அதிகாரிகள் கடினமான நிலப்பரப்புகளையும் மலைப்பகுதிகளையும் கடந்து செல்வதாக `தி நியூஸ் மினிட்’ தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு விதுரா காவல் நிலையங்கள் ஒன்று குழந்தைகளுக்கு ஏற்ற பகுதியாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. இதை கேரள காவல்துறை டிஜிபி லோக்னாத் பெஹரா திறந்துவைத்தார். மின்னணு கற்றல் மற்றும் ஆன்லைன் கல்விக்கான அனைத்து வசதிகளும் இந்த நிலையத்தில் உள்ளன. குறிப்பாக கல்லூப்பரா பழங்குடியைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தேவையான படிப்பு வசதிகள் உள்ளன.
ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டும் வகுப்பிற்கு பதிவு செய்திருந்த ஒன்பது மாணவர்களால் இந்த இடத்தை வந்தடைய முடியவில்லை. அவர்களது இடத்திலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலையம் அமைந்துள்ளது.
எனவே இந்த காவல் அதிகாரிகள் பழங்குடியினர் குழந்தைகளின் வீடுகளுக்கு அருகிலேயே நேரடியாக வகுப்பெடுக்கத் தீர்மானித்தனர். சப் இன்ஸ்பெக்டர் எஸ் எல் சுதீஷ், பழங்குடி ஆர்வலர் தன்யா ராமன், ஏடிஜிபி மனோஜ் அப்ரகாம் ஆகியோர் இந்தப் பகுதியிலேயே மாணவர்கள் படிப்பதற்கான மையத்தை அமைக்க உதவியுள்ளனர்.
வகுப்பெடுக்கத் தேவையான புரொஜெக்டர், டிவி, மேஜை, நாற்காலி, போர்ட் போன்றவற்றை டிஜிபி லோக்னாத் பெஹெரா உதவியுடன் வாங்கப்பட்டது. ஸ்டூடண்ட் போலீஸ் கேடட் (SPC), அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரும் உதவியுள்ளனர்.
“அனைவரது ஆதரவுடனும் சாதனங்களை ஏற்பாடு செய்தோம். உள்ளூர் மக்கள் குறைந்த நேரத்தில் 300 சதுர அடியில் வகுப்பறைகள் கட்டினார்கள். படிப்பதற்கான மையத்தை ஏற்பாடு செய்தோம்,” என்றார் விதுரா காவல் நிலைய அதிகாரி எஸ் ஸ்ரீஜித்.
“காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் உயர்நிலைப் பள்ளியின் ஒரு சில ஆசிரியர்களும் வகுப்பெடுக்கின்றனர். குழந்தைகள் எங்களுடன் இருப்பதை விரும்கின்றனர். எங்களுக்கும் அவர்களுடன் நேரம் செலவிடுவது பிடித்துள்ளது,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA