இந்த 8 பிரபல சீன ஆப்’கள் இல்லாத போன்களே இல்லை தெரியுமா?
இந்திய-சீன எல்லை பிரச்சனைக் காரணமாக #BoycottChina, #RemoveChinaApps என ட்ரெண்ட் ஆகி வரும் வேளையில் நம் ஸ்மார்ட்போன்களை ஆக்கிரமித்துள்ள சீன ஆப்’கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் மொபைல், கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஸ்கிரீன் டைம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு ஆன்லைனில் செலவிடும் நேரம் சராசரியாக 1.5 மணி நேரமாக இருந்தது. இது நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
2020 முதல் காலாண்டில் ஆப் பதிவிறக்கங்களில் இந்தியாவும் பிரேசிலும் இரண்டு மிகப்பெரிய சந்தையாக இருப்பதாக App Annie அதன் சமீபத்திய குளோபல் மார்க்கெட் இண்டெக்ஸில் தெரிவித்துள்ளது. மேலும் டிக்டாக் செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் iOS தளங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சென்சார் டவர் அறிக்கையின்படி சீன மற்றும் அமெரிக்க ஆப்’களே அதிகம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. இது தொடர்பான பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்தில் ஒன்பது செயலிகள் இந்த இரண்டு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானது.
டிக்டாக் ஆப் விவாதத்திற்குறிய பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெட்டிசன்கள் #BoycottTikTok என்கிற பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சீன செயலியான டிக்டாக் ரேட்டிங் குறைந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.
மேலும் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக சமீபத்தில் சீனாவிற்கு எதிரான போக்கு நாட்டில் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பயனர்கள் சீன செயலிகளை புறக்கணிப்பதற்காக 'ரிமூவ் சைனீஸ் ஆப்ஸ்’ என்கிற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ப்ளேஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை கூகுள் நீக்கிவிட்டது.
இத்தகைய சர்ச்சைகள் உள்ளபோதும் இந்தியர்களிடையே சீன செயலிகள் தொடர்ந்து பிரபலமாகவே உள்ளது. இன்றளவும் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சில சீன செயலிகள் இதோ:
ஹலோ (Helo)
பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹலோ செயலி 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அதன் சேவையைத் தொடங்கியது. இது இந்திய மொழிகளில் கவனம் செலுத்துகிறது. இந்த செயலிக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். 14 இந்திய மொழிகளில் கிடைக்கும் இந்தச் செயலி பயனர்கள் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தங்களது தாய்மொழியில் இணைந்திருக்க உதவுகிறது.
ஷேர் இட் (ShareIt)
ஆண்ட்ராய்ட், iOS, PC, Mac என பல்வேறு தளங்களில் பயன்படுத்த உகந்த ஷேர் இட் செயலி பயனர்கள் வீடியோக்கள், புகைப்படங்கள், இசை, தொடர்புகள், செயலிகள், ஆவணங்கள் போன்றவற்றை பரிமாற உதவுகிறது. இந்த செயலி ஒரு பாதுகாப்பான இணைப்பு நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.
இதில் ப்ளூடூத், NFC ஆகியவற்றைக் காட்டிலும் விரைவாக பரிமாற முடியும். உலகளவில் இந்தச் செயலிக்கு 1.8 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். 600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் உள்ளனர்.
விமேட் (VMate)
UCWeb 2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்திய செயலி விமேட். இது குறுகிய வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் தளம். பயனர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வளர்ந்து வரும் வீடியோ செயலி சந்தையில் செயல்படுவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அலிபாபா இந்த செயலியீல் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
டிக்டாக் (TikTok)
ஆறு மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் குறுகிய வீடியோ உருவாக்கும் செயலியான டிக்டாக் 1.5 பில்லியன் முதல் இரண்டு பில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில்தான் டிக்டாக் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 611 மில்லியன் வாழ்நாள் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. இது டிக்டாக் செயலியின் ஒட்டுமொத்த பதிவிறக்கங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியாகும்.
மே மாதத்தில் விளையாட்டு அல்லாத செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட பட்டியலில் டிக்டாக் முன்னணி வகிப்பதாக சென்சார் டவர் தெரிவிக்கிறது.
பப்ஜி (PUBG)
பப்ஜி மொபைல் மிகவும் பிரபலமான மொபைல் விளையாட்டு செயலிகளில் ஒன்று. 600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். கடந்த மாதம் இந்த விளையாட்டுச் செயலி உலகளவில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
இந்தச் செயலி மே மாதம் 226 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீதம் அதிகமாகும்.
UC Browser
UCWeb உருவாக்கியுள்ள UC Browser ஒரு மொபைல் ப்ரௌசர். கூகுள் க்ரோமைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னணி மொபைல் ப்ரௌசராக விளங்குகிறது. மொபைல் சாதனத்தில் விரைவாக பதிவிறக்கம் செய்ய உதவுகிறது.
அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான இந்த ப்ரௌசர் 2010 முதல் 2019-ம் ஆண்டு வரை அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் ஆப் பட்டியலில் 8ம் இடம் வகித்தது.
J2ME செயலியாக 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி, OS, iOS, விண்டோஸ் ஃபோன், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உள்ளிட்ட எண்ணற்ற தளங்களில் கிடைக்கிறது.
கேம் ஸ்கேனர் (CamScanner)
கேம் ஸ்கேனர் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்ய உதவும் செயலி. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தச் செயலியில் போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவானது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பியூட்டி ப்ளஸ் (BeautyPlus)
சீன நிறுவனமான Meitu உருவாக்கியுள்ள பியூட்டிப்ளஸ் ஃபோட்டோ எடிட்டர் மற்றும் செல்ஃபி ஃபில்டர் செயலி. பயனர்கள் செல்ஃபி எடுக்கும்போது இந்தச் செயலி கொண்டு தங்களது புகைப்படங்களை எடிட் செய்துகொள்ளலாம்.
50 சதவீத பயனர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிடுவதற்கு முன்பு இந்தச் செயலியைப் பயன்படுத்தி எடிட் செய்துகொள்வதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கில கட்டுரையாளர்: த்ரிஷா மேதி | தமிழில்: ஸ்ரீவித்யா