'ஆரோக்கியமான இந்தியா' பெற ’Fit India' இயக்கம் துவங்கினார் பிரதமர்!
நாம் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்வது, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை தடுக்க உதவும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தினசரி வாழ்க்கையில், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் தேசிய அளவிலான உடல் தகுதி இந்தியா ’ஃபிட் இந்தியா’ 'Fit India' இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்தியாவின் தற்காப்புக் கலைகள், நடனங்கள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவை அரங்கேறிய வண்ணமயமான நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், தொழில்நுட்பம் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறைக்கு வித்திட்டிருப்பதாக தெரிவித்தார்.
”உடல் தகுதி இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஆனால் இப்போது உடல்தகுதியில் ஆர்வம் இல்லை. சில தசாப்தங்களுக்கு முன் ஒருவர் தினமும் 8-10 கிமீ சைக்கிளில் சென்றார்,” என்று பிரதமர் மோடி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
”தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உடற்பயிற்சி குறைந்திருக்கிறது. இப்போது நாம் குறைவாக நடக்கிறோம். இதே தொழில்நுட்பம் நாம் போதிய அளவு நடக்கவில்லை என தெரிவிக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ராஜு மற்றும் இந்த ஆண்டு விளையாட்டு விருது வென்றவர்கள் கலந்து கொண்டனர்.
“இந்தியர்கள் உதவியோடு இந்த இயக்கத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். நம்முடைய ஹாக்கி வித்தகர் தியான் சந்த் பிறந்த தினத்தன்று இந்த இயக்கம் துவங்குவது குறித்தி மகிழ்ச்சி,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுத்துறையில் விருது வென்றவர்களை பாராட்டிய பிரதமர் , விளையாட்டு சாதனைகளையும் பாராட்டினார்.
“பாக்சிங், பாட்மின்டன், டென்னிஸ் என எந்த விளையாட்டிலும் நம்முடைய வீரர்கள், வீராங்கனைகள் புதிய உயரம் தொட்டு வருகின்றனர். அவர்கள் பதக்கங்கள் கடின உழைப்பின் அடையாளம் மட்டும் அல்ல, புதிய இந்தியாவின் நம்பிக்கையின் அடையாளம்,” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வாழ்வியல் நோய்கள் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர், வாழ்வியல் முறை மாற்றம் மூலமே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இந்தியாவில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கூறியவர், வாழ்வியல் முறை மாற்றம் இவற்றுக்கான தீர்வு என்றார்.
உடல்தகுதி இந்தியா இயக்கம், மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் என கூறிய பிரதமர், மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார்.
”வெற்றி மற்றும் உடல் தகுதி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை, வெற்றிகரமானவர்கள், உடல்தகுதி மிக்கவர்களாக இருக்கின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழில்: சைபர்சிம்மன்