கார்கில் போரில் உயிரிழந்த 25 வயது ராணுவ வீரரின் பெருமைமிகு தாய்!
’kargil Day' முன்னிட்டு கார்கில் போரில் உயிர் இழந்த ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் தலை வணங்குவோம்!
25 வயது கேப்டன் ஹனீஃப் உதின் கார்கில் போரில் உயிரிழந்தார். பல்வேறு குண்டுகள் துளைக்கப்பட்ட அவரது உடல் பனிபடர்ந்த துர்துக் பகுதியிலேயே 40 நாட்களுக்கும் மேலாக இருந்தது. இது குறித்து நான் முதநூலில் பதிவிட்டபோது அந்தப் பதிவு மக்களிடையே வைரலாக பரவும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஹனீஃபின் அம்மா ஒரு கிளாசிக்கல் பாடகர். நான் கார்கில் போர் தொடர்பான என்னுடைய புத்தகத்திற்காக ஆய்வு மேற்கொண்டபோது அவரைச் சந்தித்தேன். அதன்பிறகே அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டேன்.
ஹனீஃப் உயிரிழந்தபோது தலைமை ராணுவ ஜெனரலாக இருந்த விபி மாலிக் ஹனீஃபின் அம்மாவான திருமதி ஹேமா ஆசிஸிடம் எதிரிகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் ஹனீஃபின் உடல் அங்கேயே இருப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் தனது மகனின் உடலை மீட்க முயற்சி செய்து மேலும் ஒரு இராணுவ வீரர் உயிரிழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதைத் தெரிந்துகொண்டு நான் மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன்.
ஹனீஃபிற்கு எட்டு வயதிருக்கையில் அவரது அப்பா உயிரிழந்துள்ளார். ஹனீஃபின் அம்மா அவரை தனியாகவே வளர்த்துள்ளார். ஹனீஃப் பள்ளிப்படிப்பு மேற்கொண்ட சமயத்தில், அவருக்கு அப்பா இல்லாத காரணத்தால் பள்ளியில் அவருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. ஹனீஃபின் அம்மா அதைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என மகனுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில், ஹனீஃப் உயிரிழந்த பிறகு பெட்ரோல் பங்க் நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டபோது அதையும் மறுத்துவிட்டார்.
”என்னுடைய அம்மா பணிபுரிகிறார். அவரால் சீருடை வாங்கித்தர முடியும் என்று உன் ஆசிரியடம் சொல்லிவிடு,” என ஹனீஃப் இடம் அவரது அம்மா கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் குறைவான வருவாய் ஈட்டும் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அதைப் பெற தகுதியானவர் இல்லை எனவும் விவரித்துள்ளார். ஹனீஃபின் அம்மா ஹனீஃபைப் போன்றே துணிச்சல் நிறைந்தவர் என்பதை நான் தெரிந்துகொண்ட பிறகு என் நண்பர்களும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டேன்.
நான் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இத்தகைய விஷயங்கள் குறித்து எழுதி வருகிறேன். ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்தத் தகவல் குறித்து அதிகம் பேர் ஆர்வம் காட்டினர். என்னுடைய லேப்டாப்பில் அவரது புகைப்படத்திற்கு கீழே மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களைப் பார்த்து வியந்தேன். அந்தப் புகைப்படத்தில் ஹனீஃப் கேமிராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். பாலைவன மணலில் சாய்ந்திருக்கிறார். ஒரு கை அவரது தலையைத் தாங்கிப்பிடித்திருந்தது. மற்றொரு கையில் மணலை நிரப்பி வைத்திருந்தார். அதிலிருந்து கீழே விழும் மணல் காற்றில் மெல்ல பறக்கும் விதத்தில் அந்தப் புகைப்படம் அமைந்திருந்தது.
இந்தியா பல கோடி ரூபாய் செலவிலான திருமணங்கள், திரை நட்சத்திரங்கள், முறைகேடுகள், ஊழல் அரசியல்வாதிகள், சாதி, இன அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் மோசமான தலைவர்கள் போன்றவற்றால் நிறைந்துள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவரின் பங்களிப்பையும் அவரது அம்மாவின் தியாகத்தையும் மக்கள் அங்கீகரித்துள்ள நிகழ்வு என் மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்து மதத்தைச் சேர்ந்த அம்மாவிற்கும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அப்பாவிற்கும் பிறந்த இந்த இளம் ராணுவ வீரர் குறித்த எண்ணற்ற கருத்துக்கள் மக்களின் மனம் விரிவடைந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது. இது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களில் (கார்கில் போரில் மட்டும் 527 பேர்) முஸ்லீம், சீக்கியர்கள், கிரிஸ்தவர்கள், இந்துக்கள் என பலரும் அடங்குவர். இவர்கள் அனைவருமே ராணுவ வீரர்கள் என்பதால் நாம் இதை கவனிப்பதில்லை. அவர்களும் இதை கவனிக்காத காரணத்தினாலேயே நமக்காக போருக்கு சென்றனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள்.
கேப்டர் ஹனீஃப் உதின் உயிர் நீத்தபோது 11 ராஜ்புடனா ரைஃபிள்ஸ் படையில் இருந்தார் என்பதை என் பதிவில் நான் குறிப்பிடவில்லை. அவர் ’ராஜா ராம் சந்திரா கீ ஜெய்’ என போர் முழக்கமிட்டுள்ளார்.
இசைக்கலைஞரான ஹனீஃபின் தம்பி சமீர் உதின் தனது சமூக ஊடக பதிவில் ஹனீஃபின் வாழ்க்கை குறித்துப் பகிர்ந்துகொண்டார். நான் அந்தக் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். அவர் குறிப்பிடுகையில்,
“வீரர்களின் கதைகள் வலியும் இழப்பும் நிறைந்தது. மனிதர்கள் சாதி, மதம், வர்க்கம் போன்றவற்றால் பிளவுபடாமல் இருக்கும் பட்சத்தில் இத்தகைய கதைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது,” என்றார்.
நமக்குள் இருக்கும் வேற்றுமைகள் நம்மிடையே சுவரை எழுப்ப அனுமதிக்காமல் அதைக் கொண்டாட கற்றுக்கொண்டோமானால், நாட்டின் எல்லைப் பகுதியில் தினமும் உயிர் நீத்துக்கொண்டிருக்கும் ஹனீஃப் மற்றும் அவரைப் போன்ற இளம் ராணுவ வீரர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். இது போன்ற கதைகளை எழுதவேண்டிய அவசியம் இருக்காது. உலகம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.
ஆங்கில கட்டுரையாளர் : ரச்னா பிஷ்ட்