Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' கருவியை வீட்டில் வைத்திருப்பது அவசியமா?

கொரோனா வைரஸ் தாக்கி ஆக்சிஜன் குறைபாட்டினால் மூளை, இதயம் ஆகிய பகுதிகள் செயலிழந்து நோயாளிகள் அபாயக் கட்டத்தை எட்டி உயிரிழக்கின்றனர்.

'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' கருவியை வீட்டில் வைத்திருப்பது அவசியமா?

Wednesday June 17, 2020 , 3 min Read

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் பன்மடங்காக அதிகரித்து வரும் நிலையில் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிப்பது வேதனையளிக்கிறது.


சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படாமல் போவதால் வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறியமுடியாமல் போகிறது.


இதனால் நோய் தீவிரமடைந்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. அதன் பிறகே நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இதன் விளைவாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் ஆரம்பத்தில் முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் போன்றோர் அதிகம் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது இளம் வயதினரும் இந்த நோய் தாக்கத்தால் பலியாகி வருகின்றனர்.

இந்த வைரஸின் தன்மை குறித்துத் தொடர்ந்து ஆராயப்பட்டு புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு ‘ஹைபோக்ஸியா’ முக்கியக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Pulse oximeter

ஹைபோக்ஸியா என்றால் என்ன?

ஒருவரது ரத்தத்தில் சாதாரணமாக 95 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் இருக்கவேண்டும். இந்த அளவு குறைவது ஹைபோக்ஸியா எனப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தொற்று காரணமாக அவர்களது நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்கிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து ஹைபோக்ஸியா ஏற்படுகிறது.


ஹைபோக்ஸியா ஏற்பட்டிருப்பதை உடனடியாகக் கவனித்து மருத்துவ உதவி பெறாமல் போனால் ஆக்சிஜன் குறைபாட்டினால் உடலின் உள்ள மற்ற உறுப்புகள் செயலிழக்க நேரிடும். முக்கியமாக மூளை, இதயம் ஆகிய பகுதிகள் செயலிழந்து, உடனடியாக உயிர் போகும் அபாயம் உள்ளது.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ஏன் அவசியமாகிறது?

ஹைபோக்ஸியா ஏற்படாமல் தடுக்க உடலில் உள்ள ஆக்சிஜன் அளவைத் தொடரந்து கண்காணிப்பது அவசியமாகிறது. ஒருவருக்கு ஹைபோக்ஸியா உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் கருவிதான் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ ‘Pulse Oximeter'.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ஒரு கையடக்கக் கருவி. இந்தக் கருவியைக் கொண்டு ஆக்சிஜன் செறிவடையும் தன்மை குறைவதைக் கண்டறியலாம். இந்தக் கருவியை விரலில் பொருத்தினால் போதும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. அவர்களது ஆக்சிஜன் அளவு அபாயகரமான அளவை எட்டிய பின்னரே அறிகுறிகள் தென்படுகின்றன.


இதனால் முன்கூட்டியே இதைத் தெரிந்துகொள்ள ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவுகிறது.

ஆரம்பகட்டத்திலேயே இவ்வாறு கண்காணித்து ஆக்சிஜன் அளவு குறைவதை கவனித்தால் அபாயகட்டத்தை எட்டுவதற்கு முன்பே மருத்துவ உதவியைப் பெறமுடியும். இதனால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும், என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் அளவு கண்காணிக்கப்படும். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு சோதனை செய்யப்படாத பட்சத்தில் அபாயகட்டத்தை எட்ட வாய்ப்புண்டு.


எனவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைக் கொண்டு ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மையைக் கண்காணிக்கலாம். அவர்கள் வீட்டிலேயே இந்தக் கருவியின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்சிஜன் அளவை சோதனை செய்யலாம்.

ஆக்சிஜன் அளவு குறைவதால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் இந்தக் கருவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தனிமைப்படுத்தப்படுபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் கருவியை வாங்கி வீட்டில் வைத்து ஆக்சிஜன் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதால், இந்த அளவில் ஏதேனும் மாறுபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறமுடியும்.


இதற்கான சிகிச்சையாக மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் ஆக்சிஜன் கொடுக்கப்படும். ஆரம்பகட்டத்திலேயே மருத்துவ உதவி பெறுவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

கருவியின் விலை

ஹைபோக்ஸியா இருப்பதைக் கண்டறிந்து, எச்சரிக்கை மணி எழுப்பி நம் உயிரைக் காக்கக்கூடிய இந்தக் கருவியின் விலை 1,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அவரவரின் தேவைக்கேற்ப இதை வீட்டில் வாங்கிவைத்துக் கொள்ள சில மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க இதுபோன்ற உயிர்காக்கும் கருவிகள் ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. அரசாங்கமும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்துவது போன்று கண்ணுக்குத் தெரியாத இந்தக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.


நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஒருபுறம் எடுக்கும் நிலையில் இதுபோன்ற கருவிகளைக் கொண்டு நோய் தீவிரமடையும் முன் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.