சம்பளப் பணத்தில் ஹாக்கி பயிற்சி; கிராமப் பெண்களின் வாழ்வை மாற்றும் பஞ்சாயத்து தலைவி!
ஒரு கிராமத்து பெண்ணாக சிறுவயதில் ஹாக்கி விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அதே கிராமத்திலிருந்து மாநில மற்றும் தேசிய ஹாக்கிப் போட்டிகளுக்கு படையெடுக்கும் பெண்கள் அணியை உருவாக்கி வருகிறார் நீரு யாதவ். கிராமத்தார் அவரை அழைப்பதோ 'ஹாக்கி சர்பஞ்ச்'.
ஒரு கிராமத்து பெண்ணாக சிறுவயதில் ஹாக்கி விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அதே கிராமத்திலிருந்து மாநில மற்றும் தேசிய ஹாக்கிப் போட்டிகளுக்கு படையெடுக்கும் பெண்கள் அணியை உருவாக்கி வருகிறார் நீரு யாதவ். கிராமத்தார் அவரை அழைப்பதோ 'ஹாக்கி சர்பஞ்ச்'. (சர்பஞ்ச் என்றால் இந்தியில் பஞ்சாயத்து தலைவர் என்று பொருள்) ஆம்,
பஞ்சாயத்து தலைவராக தன் கடமையை செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், கிடைத்த சந்தர்பத்தை எல்லாம் கிராமத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டதாலே அப்பெயர் பெற்றார். அப்படி தான் அவரது சம்பள பணத்தை ஹாக்கி பயிற்சியாளரின் சம்பளமாக்கினார்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள லாம்பி அஹிர் கிராமத்தை சேர்ந்தவர் நீரு யாதவ். அவர் சிறுவயதில் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்பட்டுள்ளார்.
ஆனால், அதற்கு அனுமதிக்க மறுத்த அவரது பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்த கூறியுள்ளனர். அதே போலே, அவரும் பி.எட் மற்றும் எம்.எட் பட்டப்படிப்புகளுடன் கணிதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள யாதவ், தற்போது பி.ஹெச்டி படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், ஹாக்கி கனவு கலைந்ததில் நீருவுக்கு தீரா வருத்தம் என்றும் மனதில் நிலைத்திருந்தது.
2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்துள்ளது. அதிலும், லாம்பி அஹிரி தொகுதி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீருவிற்கு உள்ளாட்சி நிர்வாகம் பற்றிய முன்னறிவு ஏதுமில்லை என்பினும், சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், சமூகத்துக்கு ஏதேனும் செய்வதற்கு பதவியில் வகிப்பது நன்வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
அடுத்தக் கட்ட பணியாக, கிராமத்தின் மேம்பாடு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த அவருக்கு, கிராமத்தில் உள்ள பெண்களின் விளையாட்டு வீரர் கனவு பொய்த்து போகிறது என்னும் செய்தி கிட்டியுள்ளது. சிறுவயதில் அவருடைய கனவு சிதைந்ததை போல் பிறருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்று தீர்மானித்த அவர், அதற்கான வேட்கையில் இறங்கினார். அவரது சொந்த சம்பளத்தை அளித்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார்.
"கிராமத்தில் விளையாடுவதற்கு மைதானம் இல்லாததால், அருகில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் விளையாட ஆரம்பித்தோம். சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து, நல்ல டீமை உருவாக்க ஒரு பயிற்சியாளர் நிச்சயம் அவசியம். அதற்கு என் சம்பளப் பணத்தை பயிற்சியாளருக்கு சம்பளமாக்கினேன். இன்று, எங்கள் கிராமத்திலே சொந்தமாக ஒரு மைதானத்தை உருவாக்கியுள்ளோம்," என்றார்.
இன்று, மாநில, தேசிய ஹாக்கி போட்டிகளில் வெற்றியை குவிக்கும் விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கி அவர்களது வெற்றியில் அவரது கனவை மெய்பித்தார். அன்று முதலே 'ஹாக்கி சர்பஞ்ச்' என்று அனைவராலும் அடையாளம் காணப்பட்டார்.
இப்புகழ் பரவியதில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கவுன் பனேகா குரோர்பதி' எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அறிவுச்சார்ந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து ரூ.6,70,000 பணத்தை வென்றார்.
சிறுமிகளின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காகவும் அப்பணத்தை பயன்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். பெண்களின் எதிர்கால நலனுடன் அவர் நிறுத்திவிடவில்லை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 'விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பை' தொடங்கியுள்ளார்.
"விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். கிராமத்தில் இருந்து 10 கி.மீ.க்கு மேல் பயணித்து விதைகள் அல்லது உரங்கள் வாங்க செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அந்நிலையை தீர்க்கும் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு. இதன்மூலம் உரங்கள் மற்றும் விதைகளை விவசாயிகள் வாங்கிக் கொள்வதுடன், அரசாங்கத் திட்டங்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வர்."
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தின் கீழ் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி, திறன் பயிற்சியை வழங்கினார். இன்று அதன் பலனாய் ஜெய்ப்பூரில் பல்வேறு வேலைகளில் அவர்களது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலே கழிவுநீர் தொட்டிளை அமைத்ததுடன், மழைநீர் சேகரிப்பு மற்றும் சாலைகளை அமைத்துள்ளார்.
"ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடன் கைக்கோர்த்து, பெண்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழுள்ள நிதித் திட்டங்கள் பற்றியும் மொபைல் ஃபோன்களில் யுபிஐ-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் கற்பித்துள்ளோம். திருமண நிகழ்ச்சிகளில் அதிகளவிலான பிளாஸ்டிக் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. அவற்றை தவிர்க்க அவரது கிராமத்தில் கழிவு இல்லா திருமணத் திட்டத்தையும் தொடங்கியுள்ளார். அதன்படி, திருமண நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு மாற்றாக சில்வர் பாத்திரங்களை வழங்கும் 'பாத்திர வங்கி'யை துவங்கினோம்," என்றார்.
"அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆண்கள் அதிக கருணை காட்டுவதால், ஒரு பெண் பஞ்சாயத்து தலைவியாக முடிவெடுப்பதில், தலைமைத்துவத்தை வரையறுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கிராமத்தில் ஆண்கள் சேர்ந்து ஏதேனும் முடிவுகளோ, தீர்மானங்களோ எடுக்கையில் அவ்விடத்தில் ஒரு ஆண் பஞ்சாயத்து தலைவரின் நிழல் நிச்சயம் இருக்கும். நான் பதவியில் பொறுப்பேற்றதும் ஈகோ மோதல்கள் இருந்தன. சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், நான் செய்து கொண்டிருந்த வேலையின் முடிவுகளை அவர்கள் பார்த்ததும், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு வென்றாலும் அவர்களது கணவன்மார்கள் பதவிக்கு பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்னவெனில், பெண்களே தேர்தலில் போட்டியிட்டு, வென்றுக்காட்டுவதுடன் ஆட்சியும் செய்யும் தகுதி உடையவர்களே!
அமைச்சர் மற்றும் தொகுதி மட்டங்களில் பெண்கள் தங்கள் கணவர்களின் தலையீடு இல்லாமல் ஆட்சி செய்தால், பஞ்சாயத்து அளவிலும் மாற்றம் ஏற்படும்," எனும் அவர் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது சமூகம் சரியான திசையில் செல்வதற்கான ஒரு படியாகும் என்றார்.
பெண்கள் நேர மேலாண்மை மற்றும் மல்டி டாஸ்டிங்கில் திறமையானவர்கள், உணர்வுப்பூர்வமானவர்களாக இருப்பதால் நல்ல தலைவர்களாக இருக்க உதவும். கிராமசபைகளில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் பகிர்ந்து கொண்டார்.
அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், லாம்பி அஹிர் கிராமத்தை மாற்றுவதற்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுள்ளார் அவர்.
"கிராமத்தில் ஒரு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. கிராமத்தில் உள்ள பெண்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு இடமில்லை. அவர்கள் பயிலுவதற்கு ஒரு நூலகம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். இவையெல்லாம் தான் எனது அடுத்த இலக்கு. எங்கள் கிராமத்து வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பெறும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று பெருமிதத்துடன் கூறி முடித்தார் நீரு.
தமிழில்: ஜெயஸ்ரீ
‘நமக்கான பிரச்சனைகளுக்கு நாமே தீர்வை கொண்டு வரவேண்டும்’ - 20 வயது பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!