படிடா!! கேட்டாலே அதிர வைக்கும் ரஜினி 'பன்ச்'கள்: தொழில் முனைவோர்க்கு கற்று தரும் வெற்றி பாடங்கள்!
எளிமையில் எஜமான், விவேகத்தில் எந்திரன், வீரத்தில் முரட்டுக் காளை, கொடுப்பதில் கோச்சடையான், கோபத்தில் அண்ணாமலை, மனம் கவர்ந்த மாப்பிள்ளை, மகனாய் மிஸ்டர் பாரத், மகானாய் ஸ்ரீ ராகவேந்திரா, மக்களின் மன்னன், தர்மத்தின் தலைவன்.
எளிமையில் எஜமான், விவேகத்தில் எந்திரன், வீரத்தில் முரட்டுக் காளை, கொடுப்பதில் கோச்சடையான், கோபத்தில் அண்ணாமலை, மனம் கவர்ந்த மாப்பிள்ளை, மகனாய் மிஸ்டர் பாரத், மகானாய் ஸ்ரீ ராகவேந்திரா, மக்களின் மன்னன், தர்மத்தின் தலைவன், நட்பில் குசேலன், நல்லவனுக்கு நல்லவன்; படிக்காதவன், பணக்காரன், வேலைக்காரன் என மூன்று முகம்; படையப்பா, பாட்ஷா, பாபா, அருணாச்சலம், முத்து, தர்மதுரை, ராஜாதி ராஜா, லிங்கா, சிவாஜி, கபாலி, ஆகியவை பெயர்கள் மட்டுமல்ல இவரது பட்டங்கள் கூட.
நேற்றுவரை தளபதி இன்று தமிழினத் தலைவராய் உருவெடுத்துள்ள கபாலி, இவர் ஓர் அதிசய பிறவி மட்டுமல்ல, இவர்தான் நம் அன்புள்ள ரஜினிகாந்த்.
தன் சாதாரண பண்பாலும் கடின உழைப்பாலும், உலகின் கோடிக்கணக்கான மக்களை உத்வேகப்படுத்தியவர். ஸ்டைலுக்கு என்றே பிறந்தவர் போல, வாழும் மாமனிதராய் தனித்தன்மை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் சிவாஜி ராவ் கேக்வாத்.
பல நாட்கள் காத்திருந்து சமீபத்தில் வெளியாகியுள்ள ரஜினிகாந்த்-இன் கபாலி திரைப்படம் ஆனது நாடெங்கும் திருவிழாப் போல கொண்டாடப்பட்டு இருந்தாலும், இவரது நம்ப முடியாத குடிசையில் இருந்து கோபுரம் வரையிலான வாழ்க்கைப் பயணம், நம்மை என்றுமே இவரை தலைவணங்க வைக்கிறது. என்னதான் இவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பதிவுகளில் சாதனை புரிந்திருந்தாலும், இவரது இளமை குறையாத மாஸ் லுக் தான் இவரை மிக பிரபலமாக்கியது. இவரது ஒவ்வொரு படமும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு பாடம் சொல்லித் தருகிறது. அவற்றுள் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு குறிப்புகள் இதோ!
1. நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னமாதிரி!
இது 1995 இல் வெளியான 'பாட்ஷா' படத்தின் பிரபலமான பன்ச் டயலாக் ஆகும். தொழில் முனைவோர்களுக்கு பிடித்தமான தகுதிகளில் ஒன்றான உறுதி மற்றும் நம்பிக்கையைப் பற்றி இந்த வரிகள் பேசுகிறது. எதிர்பாராத வாழ்க்கை பயணத்தை அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதால், நாம் சொல்லும் சொற்களும் செய்யும் சத்தியங்களும் கவனத்திற்குரியவை, அதுவும் தொழில் முனைவோர்களுக்கு வாக்கு கொடுப்பதென்பது செயலின் வலிமையை காட்டும்.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஒரு தனி மனிதனின் சொற்கள் யாவும் குறித்து கொள்ளப்பட்டு, அது அவர்கள் கொள்கையாய் வெளிப்படும்; அதனால் வாக்குகளில் வலிமையும் நம்பிக்கையும் குடி இருப்பது அவசியம்.
2. என் வழி, தனி வழி!
இம்மன்னனின் மாபெரும் வெற்றி கண்ட மற்றொரு படம் தான், 'படையப்பா'. இதில் இவர் கூறிய "என் வழி, தனி வழி!" வரிகள், ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து, இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு தொழில் முனைவோர்களையும் படைப்பாற்றல் எனும் உலகத்தின் ஆழம் வரை அழைத்து சென்று, தனிப்பட்ட வழியில் வாழும் வியூகத்தை கடைப்பிடிக்க சொல்லி சவால் விடுகிறது. தனித்து தெரிய போராடும் புது ஊழியர்கள் மற்றும் துறையில் போட்டிபோடும் போட்டியாளர்களுக்கு மத்தியில், தனிப்பட்ட வழிமுறைகளை ஸ்மார்ட் ஆக கையாள்வது, கடினமான ஒன்றாகும்.
3.கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்களா தான் வரும்!
ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் எதிரிகளிடம் சொல்லும் பன்ச் டயலாக் இது. ஒருவனுக்கு நல்ல குழு இருந்தாலும், அவனுடைய தனிதன்மை வாய்ந்த குணநலன்கள் மட்டுமே அவனை போரில் சிறந்து செயல்பட வைக்கும். நம்பிக்கையும் சொல்லிய வாக்கும், தொழில் முனைவோனின் முக்கிய அம்சங்கள். போராட்டங்களும் தோல்விகளும் தொழில் முனைவோர் வாழ்க்கையின் ஒரு பங்காகும்; ஆனால் ஒருவனுக்கு அவன் மேல் இருக்கும் தன்னம்பிக்கை தான், அவனின் நிகழ் கால பயணத்தை வாழ்க்கை அனுபவமாக மாற்றும்.
4. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னிக்கும் நிலைக்காது!
எல்லா வெற்றிக்கும் ஒரு தோல்விதான் காரணம். ஆனால் ஒரு தொழில் முனைவோராய், கடின உழைப்பு தானே உங்களுக்குள் இருக்கும் வல்லமையை வெளி கொண்டு வருகிறது?
தொழில் முனைந்த போது அபத்தங்களை சந்திக்காத தலைவர்கள் யாரும் இல்லை. விடாமுயற்சியையும் முழு ஈடுபாட்டையும் விதைத்தால் மட்டுமே, யாரேனும் வெற்றிக்கனியை எட்டி பறிக்க முடியும்.
'அருணாச்சலம்' படத்தில் ரஜினிகாந்த் மொழிந்த இந்த வார்த்தைகள், வெற்றிக்கு குறுக்கு வழி தேடும் அனைவருக்கும் ஒரு நினைவூட்டலாய் இருக்கும். ஒருவரின் சாதனை வெகுமதியை, கடின உழைப்பால் மட்டுமே தந்து, சிறந்து செயல்பட ஊக்குவிக்கும்.
5. நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாதையும் செய்வேன்!
ஒரு புதுவிதமான ஐடியா எடுத்து, அதனை தக்க வைத்து செயல்படுத்துவது, தொழில் முனைவோர்கள் பிரியத்திற்குரிய செயல் அல்லவா?
1992 இல் வெளியான 'அண்ணாமலை' படத்தில் ரஜினி கூறிய இந்த வாக்கியம், ஒரு தலைவன் என்றுமே அவன் சத்தியத்தை காப்பான், சொல்லாததையையும் சாதித்து காட்டுவான் எனும் உண்மையை எடுத்துரைக்கிறது. தொழில் முனைவோர்கள் கடைபிடிக்கும் வார்த்தைகள் இது. அவர்கள் செய்யும் செயல்கள் நமக்கு புரியாது; ஆனால் அவர்களின் திட்டங்களும் செயல்களும் அவர்களது ஊழியர்களுக்கு நல்ல அடையாளத்தை தருமாறு இருக்கும். பேசும் போது, அவர்கள் குறிக்கோள் வெளிப்படும், சொல்லை செயலில் காட்டும் முக்கியத்துவம், அவர்கள் செய்கைகள் மூலம் பிரகாசிக்கும்.
6. ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விடமாட்டான்!
தொழில் முனையும் பயணம் யாவும், திருப்பங்கள் நிறைந்த ஒரு போராட்டம் ஆகும். அதில் தொட்டதெல்லாம் தங்கமாய் மாறும் காலமும் வரும்; தோல்வி தோழனாய் இருக்கும் காலமும் வரும். ஒருவன் எல்லாம் இழந்து நின்றாலும், அவனது ஞானம் மட்டும் தான் காலத்தை வெல்ல உறுதுணை புரியும்.
நீங்கள் ஒரு தொழில் முனைவோர் ஆயின், உங்களுக்கு வரும் தோல்விகள் அனைத்தும், நீங்கள் சாதிக்க உங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் ஆகும்.
இதைதான் 1995 இல் வெளிவந்த 'பாட்ஷா' படத்தில், "ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விடமாட்டான், கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான், ஆனா கடைசியில கை விட்டுவான்" என்று ஸ்டைலாக பேசி, மக்களை கவர்ந்தார் ரஜினி.
தலைவரின் கபாலி திரைப்படம் நாடெங்கும் வெளியாகியுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் வெள்ளம் கொண்டு அலை மோதிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் பின்பற்றி வரும் கொள்கைகளும், பண்புகளும் ஈடு இணையற்றது. மேலும் அவருக்கு புகழ் தேடி கொடுத்த பெருமைக்குரிய பட கதாபாத்திரங்களின் டயலாக்குகள், சிறிய வரிகள் ஆயினும் சக்தி வாய்ந்த மொழிகள் ஆகும். உத்வேகப்படுத்தும் இவரது வாழ்க்கை பயணத்தை முன்மாதிரியாய் கொண்டும் பின்பற்றும் தொழில் முனைவோர்களின் வெற்றிகளும், இவரது சாதனைகள் போலவே தொடரும்.
ஆக்கம்: ஷ்ருதி மோஹன் | தமிழில்: நந்தினி பிரியா