‘நட்பின் இலக்கணம்’ - பீடா கடைக்காரரை நேரில் சந்தித்த விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா!
“விண்வெளிக்கு சென்று வந்தவர், இந்திய மற்றும் ரஷ்ய அரசாங்களின் பாராட்டுகளை பெற்றவர், என்னைத்தேடி வந்து 45 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதை நம்பவே முடியவில்லை”.
விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையின் முதலாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டு, 1984 ஏப்ரல் 2ம் தேதி, அவர் சோயுச் டி-11 ராக்கெட்டில் பயணித்து விண்வெளிக்குச்சென்ற முதல் இந்தியரானார்.
இத்தனை புகழுக்குச் சொந்தக்காரரான ராகேஷ் சர்மா, அண்மையில் தன் நீண்ட நாள் கடித நண்பரான பீடா கடைக்காரர் கிஷன் சிங் சவுஹானை அவரது வீடு தேடி வந்து சந்தித்தார் என்றால் அதை யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அந்த சந்திப்பு நிகழ்வு அகமதாபாத் நகரின் முக்கியச் செய்தியானது தான் உண்மை.
ராகேஷ் சர்மா விண்வெளி சென்ற ஆண்டு அப்போதையை பிரதமராக இருந்த இந்திரா காந்தி, விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி இருந்தது எனக்கேட்ட போது, அவர், தயக்கம் இல்லாமல் ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனப்பாடி அந்த பாடலுக்கு மேலும் புகழ் சேர்த்தார்.
விண்வெளியில் ஏழு நாட்கள், 21 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்தார். அங்கிருந்து பூமி திரும்பியதும், அவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் மனதில் நாயகராக பதிந்தார்.
அவர் மீது அபிமானம் கொண்டிருந்த இந்தியர்களில், அகமதாபாத்தைச்சேர்ந்த கிஷன் சிங் சவ்ஹானும் ஒருவர். சவ்ஹான் மூன்றாவது மட்டுமே படித்திருந்தாலும், வான சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.
சர்மா, விண்வெளிக்கு சென்று சாதனை படைத்ததும். சவ்ஹான் துடிப்புடன் அவருக்கு வாழ்த்து கடிதம் எழுதினார். இந்த சாதனையின் முதலாண்டு நிறைவின் போது, இந்த பீடா கடைக்கார் ராகேஷ் சர்மாவுக்கு பாராட்டு கடிதம் எழுதினார்.
“மூன்றாவது வரையே படித்திருந்தாலும் எனக்கு எப்படியோ வான சாஸ்திரத்தில் ஆர்வம் இருந்தது; என அகமதாபாத் மிரர் நாளிதழிடம் சவ்ஹான் கூறியுள்ளார்.
“எனக்கு நீல் அம்ஸ்ட்ராங்கை தெரியும். விக்ரம் சாராபாயை தெரியும். அதன் பிறகு தான் விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று வந்த இந்தியரை அறிந்தேன். ராகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதத் தீர்மானித்தேன். என் செய்தியை குஜராத்தியில் எழுதினேன். ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் அதை ஆங்கிலத்தில் எழுதி தந்தார். ஏப்ரல் 3 அவருக்கு கிடைக்கும் வகையில் மார்ச் 31 அதை அனுப்புனேன்’ என்றும் சவ்ஹான் கூறியுள்ளார்.
முதல் கடிதம் சர்மாவின் வீட்டு முகவரிக்கு அனுப்பப் படவில்லை. சர்மாவின் முகவரி தெரியாததால், இந்திய விமானப்படை முகவரிக்கு அனுப்பி வைத்தார். தில்லியில் சர்மா பணியாற்றிக்கொண்டிருந்தார்.
எனினும் சர்மாவுக்கு கடிதம் சரியான நேரத்தில் கிடைத்தது. அப்போது அவருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து கொண்டிருந்தாலும், அவர் சவ்ஹான் கடிதத்திற்கு பதில் அனுப்பி தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார்.
சர்மாவிடம் இருந்து பதில் வந்த போது சவ்ஹானுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் தொடர்ந்து எழுத அருமையான ஒரு நட்பு உருவானது.
ராகேஷ் சர்மா பிறந்த நாள், விண்வெளிக்கு சென்று திரும்பிய நாள் மற்றும் புத்தாண்டு என ஆண்டுக்கு மூன்று முறை சவ்ஹான் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு கடிதத்திற்கும் சர்மா பதில் எழுதுவார்.
இந்த நட்பு குறித்து அவர் பேட்டிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
2009ம் ஆண்டு சவ்ஹான், பார்சல் ஒன்றை சர்மாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த பார்சலில் சர்மா படமும் இருந்தது, பீடா கடையின் அருகே இருந்த கடையின் தொலப்பேசி எண்ணும் இருந்தது.
சர்மா அந்த எண்ணை அழைத்து பேசினார். 25 ஆண்டுகள் கடிதம் மூலம் பேசிக்கொண்ட நண்பர்கள், முதல் முறையாக போனில் பேசினர்.
அதன் பிறகு, சவ்ஹானுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 2010 ஜூலை மாதம், சர்மா நண்பர்களுடன் அகமதாபாத் வந்தார். அப்போது நண்பர்களிடம் அவர் முதலில் சவ்ஹான் இருப்பிடத்திற்கு செல்லுமாறு கூறினார்.

சவ்ஹான் முகவரியை குறித்து வைத்திருந்தவர் ஆச்சர்யம் அளிப்பதற்காக தகவல் அளிக்காமல் அவர் வீட்டிற்கு சென்று நின்றார். விண்வெளிக்கு சென்று வந்த வீரர், தன்னுடன் கடித தொடர்பு கொண்டிருந்த நபரின் வீட்டின் முன் சென்று கைகூப்பி அறிமுகம் செய்து கொண்டார்.
“கடைக்கு சென்ற போது அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. என்னுடைய தோற்றம் மற்றும் தலை முடி அமைப்பு மாறியிருந்தது, என்னை அறிமுகம் செய்து கொண்ட போது, அவர் நெகிழ்ச்சியில் அழுதுவிட்டார்,” என இந்த சந்திப்பு பற்றி சர்மா நினைவு கூர்கிறார்.
அதன் பிறகு அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
“விண்வெளிக்கு சென்று வந்தவர், இந்திய மற்றும் ரஷ்ய அரசாங்களின் பாராட்டுகளை பெற்றவர், என்னைத்தேடி வந்து 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதை நம்பவே முடியவில்லை,” என்று சவ்ஹான் இந்த அனுபவம் பற்றி கூறுகிறார்.
சர்மா தன் பங்கிற்கு, அகமதாபாத் வரும் போதெல்லாம் அவரை வந்து பார்ப்பதாக கூறி மேலும் நெகிழ வைத்துள்ளார்.
சர்மா தனது சாதனை மூலம் நாட்டை பெருமை பட வைத்துள்ளதோடு, அதை கொண்டாடும் சக மனிதர்களைப் போற்றி மதிப்பதன் மூலம் மிகச்சிறந்த முன்னுதாரண மனிதராக திகழ்கிறார்.
“நட்பை யாரும் அதிகம் மதிக்காத இந்த காலத்தில், ராகேஷ் சர்மா என்னைப் போன்ற எளிய மனிதரை சந்திக்க வந்தார் என்றால் என் அன்பு தான் அவரை ஈர்த்ததாக உணர்கிறேன்,” என்று சவ்ஹான் நெகிழ்கிறார்.
செய்தி- பெட்டர் இந்தியா | தமிழில்-சைபர்சிம்மன்