கம்யூனிஸ்டுகளை தெறிக்க விட்ட ரம்யா சேச்சி: பாட்டிலே மக்கள் மனதை வென்று எம்பி ஆனது எப்படி?
கேரள மாநிலத்தின் பிரதான மக்களவைத் தொகுதியான ஆலத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 36 வருட வெற்றியை முடிவுக்கு கொண்டு வந்து எம்பியாகியுள்ளார் 32 வயது ரம்யா ஹரிதாஸ்.
மக்களவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட கேரள மாநில வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் தான் 32 வயது ரம்யா ஹரிதாஸ். அந்த மாநிலத்தில் மிக முக்கியத் தொகுதியாக பார்க்கப்படும் ஆலத்தூரில் போட்டியிட ரம்யா சரியான வேட்பாளரே என்பதை வெற்றியின் மூலம் உணர வைத்துள்ளார்.
36 வருட கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை இங்கு சிபிஎம் சார்பில் ஒரு சாதாரண வேட்பாளர் நின்றால் கூட வெற்றி நிச்சயம் என்று அதீத நம்பிக்கையுடன் இருந்த அந்தக் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் ரம்யா ஹரிதாஸ்.
தனக்குக் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் வார்த்தை ஜாலங்களால் பேசி மயக்காமல் பாட்டாவே பாடிடுறேன் என்று தனது காந்தக் குரலால் வாக்காளர்களின் மனதை வசிகரித்து முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை ருசித்து எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
“தேர்தல் பிரச்சாரங்களின் போது பாட்டு மூலம் வாக்களர்களிடம் சில விஷயங்களை கொண்டு சேர்ப்பது எளிதாக இருந்தது. பாடல் மூலம் பிரச்சாரம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்,” என்று கூறுகிறார் ரம்யா.
இசை என்பது ரம்யாவின் சிறு வயது முதலே அவருடன் இணைந்து பயணித்து வருகிறது. கூலித் தொழிலாளியின் மகளான ரம்யாவிற்கு முறையாக வகுப்புகளுக்கு சென்று இசை கற்றுத் தரும் அளவிற்கு அவரது குடும்பத்தின் பொருளாதார சூழல் ஒத்துழைக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நாங்கள் பசியால் வாடக்கூடாது என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கஷ்டப்பட்டு உழைத்து எங்களை வளர்த்தனர் என்கிறார் ரம்யா.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெருமைபடக்கூடிய எம்பியாக உருவாகியுள்ள ரம்யா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிதாஸின் மகள். இவரின் தாயார் ராதா டெய்லராக இருந்து கொண்டே காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். இவர்களது பரம்பரையே காங்கிரஸ் பரம்பரை. இதனால்தானோ என்னவோ ரம்யாவிற்கு தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸின் மீது பற்று இருந்துள்ளது. துருதுரு பெண்ணான ரம்யா சமூக சேவகியாக வலம் வந்துள்ளார்.
கல்லூரிகளில் படிக்கும்போதே ராகுலின் சிறப்புத் திட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸின் அடுத்தகட்ட தலைவர்கள் பட்டியலில் உயர்ந்தார். பட்டப்படிப்பை முடித்த பின்னர் தான் இருக்கும் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராட ஆரம்பித்தார். தன்னால் முடிந்த உதவிகளை அந்த மக்களுக்குச் செய்ய வேண்டும் எனச் செயல்பட்டு வந்தார். மக்களின் மனங்களை வென்ற சேச்சிக்கு குன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவி தேடி வந்தது. ஒருபுறம் இதிலும் மறுபுறம் கட்சியின் வளர்ச்சியிலும் பம்பரமாக சுழன்றவரை நம்பிக்கையுடன் வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி. .
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை, அவமானங்களைச் சந்தித்தார் ரம்யா. கையில் இருக்கும் அம்பின் குறி கனியை பறிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வில்வித்தகர்கள் சொல்வது போல எந்த ஏளனங்களையும் ஒரு பொருட்டாகவே ரம்யா கருதவில்லை.
மக்களுக்குச் சேவை செய்வது எனக்கு பிடிக்கும். அதற்கான வாய்ப்பு இது எனவே நான் பின்வாங்க மாட்டேன் என்று பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். தான் போட்டியிடுவது மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டை 2 முறை எம்பியாக இருந்த பி.கே.பிஜூவை எதிர்த்து போட்டியிடுகிறோம் என்றெல்லாம் ரம்யா அஞ்சவில்லை.
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்கிற ரீதியில் தன்னை நோக்கி வந்த அரசியல் நாகரீகமற்ற குற்றச்சாட்டுகளை சிக்ஸர்களாக பறக்க விட்டு தேர்தல் களத்தை ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
ரம்யாவை சாதாரணமாக நினைத்தது சிபிஎம், அவர் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்வதைக் கூட கேலி செய்தனர். இந்த விமர்சனங்களே ரம்யா மக்கள் மனதில் ஆழப்பதியக் காரணமாகிப் போனது. எந்த சர்ச்சைகளுக்கு மனம் கலங்காமல் சோர்ந்து போய் தேர்தல் களத்தில் இருந்து விலகி விடாமல் உறுதியோடு மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பாட்டு பாடி அவர்களின் மனதை கரைத்துள்ளார் ரம்யா.
ரம்யாவை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்பது அவர் 3.2 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதில் இருந்தே புரிகிறது. ஆலத்தூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர்.
எந்த ஒரு விஷயத்தையுமே சரியான முறையில் அணுகுவது, கள நிலவரத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்றுதல் இவையே ரம்யாவின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
“நான் பாட்டுக்காரி என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படவில்லை. நான் பாடுவதால் மக்கள் சந்தோஷப்படுகின்றனர். அவர்களுக்காக நான் பாடுவேன் என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காகவே உழைப்பேன். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். மக்களின் தேவை என்ன என்பது தெளிவாகத் தெரியும். எம்பியாக என்னை தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகள் என்னவென்பதை நாடாளுமன்றத்தில் முன்வைப்பேன் என்று ரம்யா தெரிவித்துள்ளார்.
எம்பியான பின்னர் தனக்குக் கிடைக்கும் சம்பளம் முழுவதையும் மக்களுக்காகவே செலவிடப் போவதாகவும் ரம்யா கூறியுள்ளார். எனக்கென்று எந்த ஆடம்பர செலவும் கிடையாது. எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆடம்பரமான பழக்கம் என்றால் அது மோகன்லால் படங்களை பார்ப்பது மட்டுமே. மற்றபடி பெரிதாக எந்த செலவும் இல்லை. எனக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்னர் 3 சேலைகளில் மட்டுமே மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பேன். என்னிடம் அந்த 3 சேலைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தேர்தல் பிரச்சாரம் முடியும் போது என்னிடம் 56 சேலைகள் இருந்தன. இவை அனைத்தும் மக்கள் எனக்கு அன்போடு கொடுத்தவை.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவு செய்யக் கூட என்னிடம் பணம் இல்லை கிரவுட்ஃபண்டிங் முறையில் பணத்தை திரட்டி கொடுத்தனர். பலர் தங்களது பென்ஷன் பணம், சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்தார்கள். என் மீது இத்தனை அன்பு வைத்திருந்த மக்களுக்கு என் சம்பளப் பணம் முழுவதையும் செலவு செய்வதே சரியாக இருக்கும் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் ரம்யா.
கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் 19 பேரில் இவர் மட்டுமே பெண் எம்.பி அதுமட்டுமின்றி கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் இரண்டாவது பட்டியலினத்து பெண் ரம்யா. அடித்தட்டு நிலையில் இருந்து நாடாளுமன்றம் சென்றுள்ள ரம்யா ஹரிதாஸ் தாழ்த்தப்பட்ட மக்களின் வலி, அந்த சமூக பெண்களின் முன்னேற்றத்திற்கான குரல்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி