'இந்த கடினமான காலங்களில்தான் புரட்சிகரமான தீர்வுகள் உருவாகும்’ – ரத்தன் டாடா!
இளம் சமூகத்தினர் தங்களது படைப்பாற்றல் மற்றும் நெறிமுறையுடன்கூடிய நடத்தையுடன் இந்தியாவை பொருளாதார ரீதியாக வலுவாக நாடாக உருவாக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ரத்தன் டாடா.
உலகளவில் நிலவும் தற்போதைய நெருக்கடியான சூழல் குறித்து டாடா ட்ரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா கூறும்போது இதுபோன்ற சூழல்களில் நாம் தீர்வுகளை ஆராயவேண்டும் என்றார்.
“இது நமக்கு பரிச்சயமில்லாத சூழல்… நாம் புதுமையான விதங்களில் தீர்வுகளை கண்டறிய வேண்டும்,” என்று ‘யுவர்ஸ்டோரி லீடர்ஷிப் டாக்’ நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான நேர்காணலில் குறிப்பிட்டார்.
ரத்தன் டாடா உடனான லீடர்ஷிப் நேரலை உரையில் சுமார் 40,000 பேர் பங்கேற்றனர். இதில் கோவிட்-19 நெருக்கடி சூழல், தனது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், நெறிமுறைகள் மற்றும் லாபம், தனிப்பட்ட முதலீடு போன்ற பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நெறிமுறைகள் மற்றும் லாபம்
இளம் தொழில்முனைவோர்கள் லாபம், வணிக நோக்கம் ஆகிய இரண்டிற்கும் இடையே முக்கியத்துவம் அளிக்க சிரமப்படுவதுண்டு. ஒரு நிறுவனம் அதன் திறனையும் லாபத்தையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுவதே இதற்கு முக்கியக் காரணம். இதுபோன்ற எண்ணிக்கைகள் நிறுவனத்தின் பணிக் கலாச்சாரத்தையும் நெறிமுறைகளையும் மறைத்துவிடுகின்றன. ரத்தன் டாடா கூறும்போது,
“நாம் அனைவரும் வெற்றியடையவே விரும்புவோம். அந்த வெற்றிக்கு லாபமே அளவுகோலாக இருக்கிறது,” என்றார்.
எந்த ஒரு வணிகத்திற்கும் லாபம் ஈட்டுவதே முக்கிய நோக்கம் என்றாலும் அதை எப்படி அடைகிறோம் என்பது முக்கியமானது. இளம் தொழில்முனைவோர் தங்களது வணிக நோக்கத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்கிறார் ரத்தன் டாடா.
“வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பங்கு வகிப்போர்கள் என அனைவருக்கும் சேவையளிப்பதற்காகவே நீங்கள் தொழில் புரிகிறீர்கள். அதில் நெறிமுறையுடன் ஈடுபடுங்கள்,” என்றார்.
தொழில்முனைவோர் சில நேரங்களில் தவறாக முடிவெடுப்பதுண்டு. சில நேரங்களில் கடினமான சூழல்களை சந்திப்பதுண்டு. அப்படிப்பட்ட சூழல்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை கவனிப்பது முக்கியம் என்கிறார் ரத்தன் டாடா.
தற்போதைய கோவிட்-19 சூழலில் இருந்து தப்பித்து ஓடி ஒளியமுடியாது என்கிறார் ரத்தன் டாடா.
“வாழ்வாதாரத்திற்கு அவசியம் எனும் பட்சத்தில் நீங்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு தற்போதைய சூழலையே தொடரமுடியாது,” என்றார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தப் பெருந்தொற்று சமயத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. “இது பிரச்சனைக்கு தீர்வாகாது. வணிகங்கள் தங்களது ஊழியர்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்,” என்றார்.
ஸ்டார்ட் அப்களில் முதலீடு
கடந்த இரண்டாண்டுகளாக 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். ஓலா, பேடிஎம், IdeaChakki, ஓலா எலக்ட்ரிக், நெஸ்ட்அவே, ஸ்நாப்டீல், ஜியோமி, அர்பன் லேடர் போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார்.
நேரலை உரையாடலின்போது பணிச்சூழலில் மறக்க முடியாத தருணங்கள் குறித்து கேட்டபோது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைத் தேர்வு செய்யமுடியாது என்றும் பல்வேறு அனுபவங்களின் தொகுப்புகளே தனது பணி வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியதாக பதிலளித்தார்.
தனிப்பட்ட முறையில் முதலீடு செய்வதும் ஸ்டார்ட் அப்களை ஆதரிப்பதும் தனக்கு கற்றல் அனுபவமாக இருந்து வருவதாக ரத்தன் டாடா விவரித்தார்.
“நிறுவனரின் தரப்பில் இருந்து பார்க்கும்போது ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ள நிறுவனங்களையும் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டே நிறுவனங்களைத் தேர்வு செய்து ஆதரவளித்து வருகிறேன்,” என்றார்.
இளம் தலைமுறையினர்
ரத்தன் டாடா நாட்டின் இளம் தலைமுறையினர்களுடன் அதிகம் தொடர்பில் இருந்து வருகிறார். இவர்களில் பலரும் ரத்தன் டாடா உடன் உரையாடிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
யுவர்ஸ்டோரி லீடர்ஷிப் டாக் உரையின்போது டாடா, “இன்று இந்தியாவின் இளம் சமூகத்தினர் குறித்து பேசி வருகிறோம். பல நாடுகளில் இளம் சமூகத்தினரே மக்கள்தொகையில் பெரும்பங்களிக்கின்றனர். புதுமையான சிந்தனைகள் கொண்டவர்கள் நம்மிடையே உள்ளனர். இவர்கள் இளம் வயதிலேயே வெற்றியை வசப்படுத்துகின்றனர். இதை நினைத்து பெருமைப்படுகிறேன். இளம் சமூகத்தினர் தங்களது படைப்பாற்றல் மற்றும் நெறிமுறையுடன்கூடிய நடத்தையுடன் இந்தியாவை பொருளாதார ரீதியாக வலுவாக நாடாக உருவாக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.
“கடினமான காலங்களில்தான் சுவாரஸ்யமான, புரட்சிகரமான தீர்வுகள் உருவாகும். நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது… தீர்வுகள் கண்டறிய முற்படுபவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார் ரத்தன் டாடா.
ஆங்கில கட்டுரையாளர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா