'மக்களுடன் தொடர்பில்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது’– ரத்தன் டாடா
ரத்தன் டாடா கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அனுபவம் குறித்தும் சூழலை ஒருங்கிணைத்து வெல்வது குறித்தும் யுவர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.
“என்னுடைய தொழில் வாழ்க்கையில், பயணமும் மக்களுடனான உரையாடல்களுமே வணிக வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியுள்ளது. உங்களுடைய யோசனைகளுக்கேற்ப ஒத்த கருத்துடைய மக்களுடன் தொடர்பில் இருந்து உரையாடுவது அற்புதமான அனுபவமாக இருக்கும்… அதை தற்போதைய சூழலில் மிஸ் செய்கிறேன்,” என்று டாடா ட்ரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான பிரத்யேக உரையாடலில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் மக்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் போவதை நினைத்து வருந்துவதாக ‘யுவர்ஸ்டோர் லீடர்ஷிப் டாக்’ ஆன்லைன் நேர்காணலில் ரத்தன் டாடா பகிர்ந்துகொண்டார். இந்த உரையாடலில் 40,000 பேர் நேரலையில் இணைந்திருந்தனர்.
“மக்களுடன் பழகுவது, புதிய உத்திகளை வகுப்பதில் பங்களிப்பது, துணிந்து ஆபத்துகளை எதிர்கொள்வது போன்றவை வெற்றிக்கு வழிவகுக்கிறது,” என்கிறார் தொழிலதிபராகவும் உந்துலகளிக்கும் வணிகத் தலைவராகவும் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக வணிக உலகில் கொடி கட்டிப் பறக்கும் ரத்தன் டாடா.
“முன்பு வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன். படகுகள், தனி வீடுகள், பெரிய எஸ்டேட்கள் போன்ற ஆடம்பரச் சூழலை நான் குறிப்பிடவில்லை. உங்களுடைய யோசனைகளுக்கேற்ப ஒத்த கருத்துடைய மக்களுடன் உரையாடுவது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதுதான் தற்போதைய சூழலில் கிடைக்கவில்லை,” என்றார்.
“மெய்நிகர் சந்திப்புகள் அதைப் போன்ற அனுபவத்தை வழங்க முற்பட்டாலும் நேரடியாக தொடர்புகொள்வதற்கு இணையாகாது. அதனால்தான் மக்களுடன் தொடர்பில் இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்றார் டாடா.
“இதுபோன்ற மோசமான நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறேன்,” என்றார் டாடா. மனிதகுலம் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நெருக்கடியான சூழலை எதிர்த்து சிறப்பாக போராட உதவும் வகையில் நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் பங்களிக்க உள்ளதையே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளைக் கொண்ட டாடா ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் ரத்தன் டாடா. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்த உலகத் தலைவர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலம் சந்தித்த மிகவும் மோசமான நெருக்கடி என்கிறார் டாடா.
“நாம் ஒற்றுமை, பரிவு, புரிதல் ஆகியவற்றுடன் இதை எதிர்த்துப் போராடவேண்டும். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் வெற்றியடைய நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும்,” என்றார்.
கோவிட்-19 காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிவது, நேரடி தொடர்புகளற்ற உரையாடல்கள் போன்ற புதிய முறைகள் பின்பற்றப்படுவது குறித்து ரத்தன் டாடா கூறும்போது,
“அசௌகரியமான சூழலும் சுணக்கமும் சோம்பலான மனநிலையும் ஏற்பட வாய்ப்புண்டு. வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டு வீட்டில் இருந்தே பணிபுரியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே என்னவென்று விவரிக்க இயலாத ஒரு குறிப்பிட்ட அம்சம் உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருந்து உங்களைப் பிரித்துள்ளது,” என்றார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தனது சொந்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“இது ஒரு விநோதமான அனுபவமாக உள்ளது. நான் வீட்டில் சௌகரியமாகவே உணர்கிறேன். சிறிய தோட்டம் உள்ளது. என் நாய்கள் ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்காமல் அங்கு ஓடி விளையாடுகின்றன. கொரோனா என்கிற மிகவும் கொடிய வைரஸ் தொற்று தாக்கி உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் அல்லது உயிரிழக்கும் அபாயம்கூட ஏற்படும் சூழல் உள்ளது. ஆனால் நேரடியாக தொடர்பில் இருக்கும் உணர்வுதான் சுவாரஸ்யமானது. அதை இந்த வைரஸ் பறித்துவிட்டது. என்ன கிழமை என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ யாரையாவது சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறேனா?” என்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யுவர்ஸ்டோரி தளத்தில் நடைபெற்ற உரையாடலின் மூலம் நாட்டில் உள்ள இளம் சமூகத்தினரை தொடர்புகொண்ட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார். ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில்,
“நான் எப்போதும் துடிப்பான, ஆர்வமுள்ள இளம் சமூகத்தினருடன் இணைந்திருக்க விரும்புவேன். அவர்களிடம் உள்ள ஆற்றல் மற்றவர்களுக்கும் பரவிவிடக்கூடியது. எனக்கு வயதான உணர்வே ஏற்படாது. 33,000 இளம் சிந்தனையாளர்களுடன் யுவர்ஸ்டோரியில் நடைபெற்ற இன்றைய வெபினார் மிகவும் உற்சாகமூட்டக்கூடிய உரையாடலாக இருந்தது. அவர்களது வெற்றிப் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உலகளவில் இந்தியாவை பொருளாதார ரீதியாக வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் அவர்கள் பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.