'பணம் ஈட்டுவது தவறல்ல, ஆனால் அதை அறத்துடன் செய்ய வேண்டும்’– ரத்தன் டாடா!
‘வணிகம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வாடிக்கையாளர்கள் மற்றும் பங்கு வகிப்போரின் தேவைகளை அறம் சார்ந்த செயல்பாடுகளுடன் பூர்த்தி செய்யவேண்டும்' - ரத்தன் டாடா
“லாபம் அடைவதற்காக செயல்படுவது தவறல்ல. ஆனால் அதை அடைவதற்கான செயல்பாடுகள், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைகள், அறம் சார்ந்த தொழில் பயணம் போன்றவையே முக்கியம்,” என்று 'யுவர்ஸ்டோரி லீடர்ஷிப் டாக்’ உரையாடலில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
லாபம், நோக்கம் ஆகியவற்றிடையே நிறுவனங்கள் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று யுவர்ஸ்டோரி சிஇஓ மற்றும் நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா கேள்வியெழுப்பியபோது அதற்கு பதிலளிக்கும் வகையில் ரத்தன் டாடா,
“நாம் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும் வெற்றியடையவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றியை அளவிடுவதே வழக்கமாக இருந்து வருகிறது. அதிக வருவாய் ஈட்டி நாமும் ஒரு வெற்றிக்கதையை உருவாக்கவே விரும்புவோம். லாபம் என்பது நாம் மறந்து கடந்துசெல்லக் கூடிய ஒரு விஷயம் அல்ல,” என்றார்.
“ஆனால் வணிகம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வாடிக்கையாளர்கள் மற்றும் பங்கு வகிப்போரின் தேவைகளை அறம் சார்ந்த செயல்பாடுகளுடன் பூர்த்திசெய்யவேண்டும்,” என்றார்.
வணிகத் தலைவர்கள் தங்களையும் தங்களது தீர்மானங்களையும் தாங்களே மதிப்பிடவேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்துவதாக ரத்தன் டாடா குறிப்பிட்டார். கடினமான முடிவாக இருப்பினும் சரியான முடிவை எடுக்கிறார்களா என்பதே முக்கியம் என்றார்.
“நாம் தவறுகள் இழைப்போம். பரவாயில்லை. ஒவ்வொரு நிலையிலும் சரியான விஷயத்தை செய்யவேண்டும். மோசமானவற்றிலும் சரியான விஷயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் கடினமான தீர்மானங்களைத் தவிர்த்துவிடக்கூடாது,” என்றார்.
தலைமைத்துவத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் 'யுவர்ஸ்டோரி லீடர்ஷிப் டாக்’ பிரத்யேக அமர்வில் வணிகத் தலைவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள், புதுமையான சிந்தனைகளுக்கும் இந்த நெருக்கடியான சூழல் வழிவகுப்பது, ரத்தன் டாடா தனது பயணத்தில் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் போன்ற பல்வேறு பயனுள்ள அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் ஊக்கமுடன் பணியாற்ற நிறுவனத் தலைவர்கள் அதிகார பலத்தைக் கையிலெடுக்கக்கூடாது. மாறாக அவர்களது சூழலையும் பிரச்சனைகளையும் புரிந்துகொண்டு பரிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றார் ரத்தன் டாடா.
“உங்கள் நிறுவனம் குறித்து நீங்கள் பெருமைக் கொள்கிறீர்களா? வாடிக்கையாளார்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்கிறீர்களா? கடினமான சூழல்கள் ஏற்படும்போது நிர்வாகம் துணிச்சலாக செயல்படுகிறதா? இந்தக் கேள்விகளுக்காக பதிலே சிறப்பு கவனம் பெறும்,” என்றார்.
“ஒரு நிறுவனம் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதே வழக்கமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. நிறுவனத்திற்குள் நடப்பவற்றை இது மறைத்துவிடுகிறது. நிறுவனத்தில் மகிழ்ச்சியான, நிறைவான சூழலாக இருக்கலாம். அதேசமயம் மோசமான சூழலாகவும் இருக்கலாம். துரதிர்ஷ்ட்டவசமாக நிதி சார்ந்த கண்ணோட்டங்களைப் பொறுத்தவரை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுகிறார்களா, மேலாளர்கள் ஊழியர்களிடம் நியாயமான முறையில் நடந்துகொள்கிறார்களா போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முழுமையான அணுகுமுறையுடன் அல்லாமல் லாபம் மற்றும் எண்ணிக்கைகளிலேயே கவனம் செலுத்தப்படுகிறது,” என்றார் டாடா.
ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா