காய்கறி பராத்தாக்களை நொடியில் தயாரிக்கும் ரெடிமேட் கோதுமை மாவு உற்பத்தி செய்யும் நிறுவனம்!
பீட்ரூட் மற்றும் கீரை கோதுமை மாவு வகைகளை வெறும் 65 ரூபாய்க்கு வழங்குகிறது தேசி ஆட்டா கம்பெனி. சாதாரண பராத்தாக்களைப் போன்றே இந்த மாவு வகைகளைக் கொண்டு காய்கறி பராத்தாக்களை எளிதாகத் தயாரிக்கலாம்.
தேசி ஆட்டா கம்பெனியின் ரித்திகா பஹேதி பஜாஜ், ஸ்ரீதர் தபாரியா இருவரும் ஒரு முறை அவர்களது அலுவலகத்தில் இருந்தபோது உடன் பணியாற்றும் ஊழியர்கள் மதிய உணவிற்கு என்ன கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறித்து யோசித்தனர். அவர்களில் ஒருவர் ஜிம் செல்லத் துவங்கியிருந்ததால் ஆரோக்கியமான காய்கறி பராத்தாக்களை மதிய உணவாகக் கொண்டு வந்தது நினைவிற்கு வந்தது.
”இந்தக் காய்கறி பராத்தாக்கள் தயாரிப்பு நீண்ட செயல்முறைகளைக் கொண்டது. எனவே இதை ஏன் எளிதாக்கக்கூடாது என்று ரித்திகா தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்,” என்றார் ஸ்ரீதர்.
கடையிலிருந்து வாடிக்கையாளர் கோதுமை மாவை வாங்குவதற்கு முன்பே அதில் காய்கறிகளை கலக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியமானால், வாடிக்கையாளர்கள் மாவில் தண்ணீரை சேர்த்து பிசைந்து பராத்தாக்களைத் தயார் செய்தால் போதும்.
ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிராண்டான ’தேசி ஆட்டா கம்பெனி’ 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு கோதுமை பொருட்களையும் இன்ஸ்டண்ட் மிக்ஸ்களையும் விற்பனை செய்து வருகிறது. தேசி ஆட்டா கம்பெனி உறுப்பினர் ரித்திகா கோதுமை மாவு தயாரிப்பில் பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி நிறுவனத்தின் முதல் கோதுமை உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தார்.
எனவே காய்கறி பராத்தா தயாரிப்பை எளிதாக்கும் வாய்ப்பினை ஆராய்ந்தபோது பீட்ரூட், கீரை என இரண்டு வெவ்வேறு காய்கறிகளைக் கொண்டு கோதுமைமாவு தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் ஒருவர் சாதாரண பராத்தா தயாரிக்கும் அதே முறையில் பீட்ரூட் அல்லது கீரை பராத்தாவை தயாரிக்கலாம். இதை அடுப்பில் வைத்து சமைக்கும்போது பீட்ரூட் பராத்தா சிகப்பு நிறத்திலும் கீரை பராத்தா பச்சை நிறத்திலும் மாறிவிடும்.
இந்த வகையில் பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ரித்திகா முக்கிய பங்கு வகித்துள்ளர் என்றார் ஸ்ரீதர். அதன் பிறகு 2016-ம் ஆண்டு நிறுவனப் பொறுப்புகள் ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் 25 தயாரிப்புகளுடன் செயல்பட்ட தேசி ஆட்டா கம்பெனியை 55-க்கும் அதிகமான தயாரிப்புகளுடன் வளர்ச்சியடையச் செய்தார்.
தற்போது ஸ்ரீதரின் தலைமையில் செயல்படும் தேசி ஆட்டா கம்பெனியின் தனித்துவமான தயாரிப்புகளாக பீட்ரூட் மற்றும் கீரை ஆட்டா வகைகள் உள்ளது. இந்நிறுவனம் ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் தயாரிப்புகளுக்கும் மேல் விற்பனை செய்து ஆண்டிற்கு 24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
ஆரோக்கியமான, காய்கறி சார்ந்த கோதுமை மாவு மட்டுமல்லாது புரோட்டீன் நிறைந்தவை, நார்சத்து அதிகம் நிறைந்தவை, க்ளூட்டன் ஃப்ரீ தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தயாரிப்புகளையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுடன் இணைப்பு
காய்கறி சேர்க்கப்பட்ட கோதுமைமாவு வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஸ்ரீதர் விவரிக்கையில்,
“பீட்ரூட் மற்றும் கீரை பராத்தாக்களை தயாரிக்கும் முறை எளிதாக்கப்பட்டிருப்பதால் உங்களது நேரம் மிச்சமாகும். நாங்கள் எங்களுடைய தயாரிப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள் எதையும் சேர்ப்பதில்லை. இருப்பினும் ஒன்பது மாதங்கள் வரை இவை கெட்டுப்போகாமல் இருக்கும். வழக்கமான தயாரிப்புகள் சுமார் மூன்று மாதங்கள் வரை மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும்,” என்றார்.
பராத்தாக்கள் கண்களைக் கவரும் வகையில் சிகப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருப்பதால் குழந்தைகள் இதை விரும்புவார்கள். அதேபோல் பீட்ரூட் மற்றும் கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
காய்கறிகள் கலந்த இந்த தனித்துவமான கோதுமை மாவு தயாரிக்கும் செயல்முறையின் ரகசியத்தை ஸ்ரீதர் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் மாவு, காய்கறிகள் இரண்டையும் ப்ராசஸ் செய்த பிறகு அவற்றை ஒன்றாகக் கலக்க சில குறிப்பிட்ட சிக்கலான முறை இருப்பதை நம்மால் யூகிக்கமுடிகிறது.
பீட்ரூட் மற்றும் கீரை கோதுமை மாவு உள்ளிட்ட தேசி ஆட்டா கம்பெனியின் தயாரிப்புகள் பிக்பஜார், ஈஸி டே போன்ற ஃப்யூச்சர் க்ரூப் ஸ்டோர்களில் இந்தியா முழுவதும் கிடைக்கிறது.
500 கிராம் பீட்ரூட் கோதுமை மாவின் விலை 80 ரூபாய். 500 கிராம் கீரை கோதுமை மாவின் விலை 65 ரூபாய். இவை தேசி ஆட்டா கம்பெனியின் வலைதளத்திலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின் வணிக தளங்களிலும் கிடைக்கிறது.
இருப்பினும் நேரடியாக விற்பனை செய்வதிலும் சில்லறை விற்பனை பிரிவில் ஃப்யூச்சர் க்ரூப் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதால் அதைப் பயன்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
”சில குறிப்பிட்ட வகைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் கிடைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்த பிறகு இந்த விற்பனை முறையைத் தேர்வு செய்தோம். மின் வணிக தளங்களில் காய்கறி சார்ந்த தயாரிப்புகளைத் தேடி வாங்குவதைக் காட்டிலும் ஸ்டோர்களில் இவைகள் எளிதாக மக்கள் பார்வையில் படும்,” என்றார்.
இந்த கோதுமை மாவு ஒரு கிலோ பாக்கெட்டுகளிலும் கிடைக்கிறது. “எங்களது கோதுமை மாவு வகைகள் சிறிய அளவுகளில் விற்பனை செய்யப்படுவதால் பல சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் ஐந்து அல்லது ஆறு வெவ்வேறு வகை மாவுகளை வாங்குகிறனர். எங்களது தயாரிப்புகள் தனித்துவமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஒரே தயாரிப்பை ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகளாக்வோ அல்லது ஒரே ஒரு பெரிய பாக்கெட்டையோ வாங்குவதில்லை,” என்றார்.
சவால்கள் மற்றும் வாய்ப்புகள்
தற்சமயம் தேசி ஆட்டா கம்பெனியின் தொழிற்சாலைகள் மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ளது. இந்தூரில் ஒரு தொழிற்சாலையை அமைத்து அதன் உற்பத்தித் திறனையும் சில்லறை வர்த்தகத்தையும் விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
”தொழிற்சாலையை அமைக்கும்போது பல்வேறு மூலப்பொருட்கள் கவனமாக கையாளப்படுவதை நாங்கள் உறுதிசெய்யவேண்டியுள்ளது. எங்களது தயாரிப்புகள் அதிகளவிலான செயல்முறைகளை உள்ளடக்கியது. எனவே சேமிப்பு, பதப்படுத்துதல், பேக்கேஜிங் போன்ற செயல்முறைகளைத் துல்லியமாகவும் மிக நுட்பமாகவும் கையாளக்கூடிய உள்கட்டமைப்பு எங்களது தொழிற்சாலைகளில் அவசியம்,” என்றார்.
பல்வேறு வகையான கோதுமை மாவுகளைத் தயாரித்து விற்பனை செய்ய தேசி ஆட்டா கம்பெனி 300 வகையான மூலப்பொருட்களையும் 37 மாவு வகைகளையும் கையாள வேண்டிய அவசியம் உள்ளது.
“இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து பெறப்படுகிறது. செலவுகளைக் குறைக்க நாங்கள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணித்து அவை விளையும் இடங்களில் இருந்து நேரடியாக வாங்குகிறோம்,” என்று விவரித்தார்.
”ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் இந்திய சந்தையில் சிறப்பான மாவு தயாரிப்புகள் மற்றும் மாவு சார்ந்த ரெடி மிக்ஸ் பிராண்டட் பிரிவில் ஆராயப்படாமல் இருக்கும் வாய்ப்பினைக் கண்டது. பாரம்பரியமாக தானியங்கள் உள்ளூரிலேயே வாங்கப்பட்டு பயன்படுத்துவதற்கு முன்பு அரைக்கப்படும். எனினும் நுகர்வோர் பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் இருக்கும் உயர்தர தயாரிப்பை நாங்கள் வழங்க விரும்பினோம்,” என்றார் ஸ்ரீதர்.
பில்ஸ்பரி, ஆசீர்வாத் போன்ற கோதுமை மாவு பிராண்டுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். கேழ்வரகு, சோளம் போன்ற மற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாவுகள் அதிகம் கிடைப்பதில்லை. இந்த தானியங்களைப் பயன்படுத்தும் நிறுவனம் தனித்துவமாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
”ஃப்யூச்சர் க்ரூப் வழிகாட்டிகளிடம் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளுடன் உற்பத்தி மற்றும் விற்பனையில் எனக்கிருந்த தனித்துவமான திறனும் ஒன்றிணைக்கப்பட்டது. நாங்கள் விரைவிலேயே வேகமாக வளர்ச்சியடையும் பிராண்டாக உருவானோம்.
இண்டியன் ஃபுட் ஃபோரமில் ’மிகவும் புதுமையான ஃபுட் பிராண்ட்’-ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்,” என்றார்.
காய்கறிகள் சார்ந்த கோதுமை மாவு உள்ளிட்ட பல்வேறு மாவு வகைகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் பிரபலமாகவேண்டும் என்கிற நோக்கத்திற்காக இந்த பிராண்ட் 30 ஊழியர்களை பணியிலமர்த்தியுள்ளது. நிலைத்தன்மை, தரம், புதுமை, சிறப்பான தகவல் தொடர்பு போன்றவை பிராண்டை சிறப்படையச் செய்து வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக இணையவும் உதவும் என்கிறார் ஸ்ரீதர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில் : ஸ்ரீவித்யா