தத்ரூப 3டி ‘விபத்து’ காட்சி - இன்ஸ்டாவில் 156 மில்லியன் பார்வைகளைக் கடந்த பதைபதைக்கும் விழிப்புணர்வு வீடியோ!
மஜித் என்ற 3டி அனிமேட்டர் உருவாக்கிய சாலை விபத்து பற்றிய முப்பரிமாண வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் 156 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கற்பனைக்கெட்டாத விசயங்களையும் நம் பார்வைக்கு விருந்தாக்கும் வித்தகர்கள் இணைய உலகில் ஏராளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் மஜித் மவுசாவி (Majid Mousavi). இவரது வீடியோக்களை உண்மை அல்லது உருவாக்கப்பட்டவையா எனப் பிரித்தறிவது கஷ்டம். அந்தளவிற்கு தத்ரூபமான வீடியோக்களை முப்பரிமாண விதத்தில் படைப்பதில் வல்லவர் மஜித்.
இன்ஸ்டாகிராமில் இவரது வீடியோக்கள் மிகவும் பிரபலம். இதுவரை 47 வீடியோக்களை மட்டுமே வெளியிட்டிருக்கும் இவரது பக்கத்தை 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். கம்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனரான இவர், 3டி அனிமேஷன் துறையிலும் கைதேர்ந்தவர். அதனால்தான் தனது கற்பனைகளுக்கு கம்யூட்டர் உதவியுடன் உருவம் கொடுத்து பார்ப்பவர்களைப் பதற வைத்து வருகிறார்.
தற்போதும் அப்படித்தான் மஜித்தின் சாலை விபத்து பற்றிய முப்பரிமாண வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் 156 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தத்ரூபமான வீடியோ
இந்த வீடியோவில் இயற்கையான சூழலில் மலைப்பிரதேசம் போன்றதொரு பாதையில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாகப் பயணிக்கிறார். அப்போது அவரது வாகனத்தை மற்றொரு இருசக்கர வாகனம் ஒன்று முந்திச் செல்கிறது. அதனை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. தன்னை முந்திச் செல்பவரை, பின் தொடர்ந்து அவரை முந்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இருசக்கர வாகனமும் வேகமெடுக்கிறது.
வேகமாக பின்தொடர்கையில், அவருக்கு முன்பாக ட்ரக் போன்ற ஒரு வாகனம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியும் அந்த இருசக்கர வாகன இளைஞரை ஓவர்டேக் செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், அந்த ட்ரக்கின் எதிர்ப்பக்கம் ஓவர்டேக் செய்ய முயற்சிக்கிறது இந்த வாகனம்.
அப்போது சட்டென பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில், எதிரே வேகமாக வருகிறது மற்றொரு ட்ரக். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பதறிப் போகும் வகையில், இந்தக் காட்சி உள்ளது. அந்த ஒரு நொடிப் பொழுதியில் என்னவாகி இருக்கும் என்பதை ஸ்லோமோஷனில் காட்டி இருக்கிறார் மஜித். அதுவரை வேகமாகப் பயணித்த அந்த வீடியோ, சில நொடிகள் நமக்கு சிந்திக்க நேரம் கொடுத்து மெதுவாக நகர்கிறது.
பிரமிப்பும், பயமும்...
வேகமாக வந்த பைக் எதிரே வந்த ட்ரக்கில் மோதுவதற்கு முன்பாக அப்படியே நிற்கும் காட்சி பிரம்மிப்பையும், பயத்தையும் ஒரு சேர நம் கண் முன்னே கொண்டு வருகிறது. இரண்டு வாகனங்களும் மோதிக் கொள்வதற்கு முன்பாக கேமராவின் கோணம் சாலையின் பக்கவாட்டில் நடப்பவற்றையும் காட்டுகிறது. அங்கே ஒரு மான் நின்று நடப்பதை வேடிக்கை பார்க்க, அத்துடன் ஒரு புகைபோன்ற உருவம் தன் அங்கங்களை சோதித்துப் பார்க்கிறது. கூடவே, கருப்பு உருவத்தில் ஒரு எம தூதன் நிற்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்தக் காட்சியில் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ட்ரக், பைக் மீது மோத, அது சில அடிதூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்படுகிறது. வண்டியை ஓட்டிச் சென்ற நபர் சாலையில் உருண்டு விழ, இப்போது திரை முழுவதும் பயம் காட்டி சிரித்து, நம்மைப் பதற வைக்கிறது அந்த சாலையில் நின்ற எமதூதனின் உருவம்.
வீடியோவின் கோணம் அந்த இருசக்கர வாகனத்தை இயக்குபவரின் பார்வைக் கோணத்திலேயே இருப்பதால், வீடியோவைப் பார்ப்பவர்கள் தாங்களே அந்த வாகனத்தை இயக்குவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. விழிப்புணர்வை ஏற்பற்படுத்தும் வகையிலான அந்த வீடியோ பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் அவசியத்தையும், வேகமாக செல்வதன் ஆபத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது.
156 மில்லியன் பார்வைகள்
ஒரு வாரத்திற்கு முன்பாக இன்ஸ்டாவில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மஜித். இதுவரை இந்த வீடியோவை 156 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு இதுவரை 11 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது. கூடவே இதனை பலர் தங்களது சமூகவலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து இணையத்தில் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று இருசக்கர வாகனங்களே இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவிற்கு வீட்டிற்கு ஒன்று மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளதால், இந்த வீடியோவைப் பார்ப்பவர்களில் எளிதில் தங்களை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுக் கொள்கின்றனர். அதனாலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், “ஐய்யோ கடவுளே.. நான் மிகவும் பயந்து விட்டேன்..”, “ஒரு நிமிடம் நானே பைக்கை ஓட்டுவது போன்று பதறி விட்டேன்”, “அருமையான எடிட்டிங்...”, “தரமான விழிப்புணர்வு பதிவு” என விதவிதமாக தங்களது ஸ்டைலில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கூடவே, “இதனால் தான் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சாலை ஆளில்லாமல் இருக்கிறது என்பதற்காக நீங்கள் பொறுப்பற்றவராக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என சிலர் விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சாமானியன் டு செலிபிரிட்டி: புர்ஜ் கலீஃபா உச்சியில் காபி குடித்த டோலி சாய்வாலா வீடியோ வைரல்!