Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.3,497 கோடி கொடுத்து Just dial நிறுவன பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்!

புதிய கூட்டணியால் உயர்ந்த பங்குகள்!

ரூ.3,497 கோடி கொடுத்து Just dial நிறுவன பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்!

Saturday July 17, 2021 , 2 min Read

ரிலையன்ஸ் குழுமம் இந்த கொரோனா காலகட்டத்திலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ’Just Dial' நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 900 மில்லியன் டாலர், கொடுத்து ரிலையன்ஸ் குழுமம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளது தி எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுருந்த நிலையில் தற்போது 3,497 கோடி மதிப்பில் Just Dial நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ரீடெயில் (சில்லறை விற்பனை) நிறுவனம் மூலம் இந்த பங்குகளை வாங்கியுள்ளது. அதன்படி ஜஸ்ட் டயலில் 40.95 சதவிகித பங்குகள் இனி ரிலையன்ஸ் குழுமத்திடம் இருக்கும். கடந்த 12 மாதங்களில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் கையகப்படுத்தும் நான்காவது நிறுவனம் ஜஸ்ட் டயல் ஆகும். முன்னதாக பியூச்சர் குரூப், நெட்மெட்ஸ் மற்றும் அர்பன் லேடர் போன்ற நிறுவனங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ்

வேலை தேடுபவர்கள் உட்பட பல்வேறு தேடல்களுக்கான விவரங்களைக் கொடுக்குப்பதற்காக உருவாக்கப்பட்டது ஜஸ்ட் டயல் நிறுவனம். தற்போது தொலைபேசி, மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆகிய மூன்று வழிகளிலும் செயல்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு வி.எஸ்.எஸ் மணி என்பவர் தொடங்கியதுதான் இந்த நிறுவனம். முதல் தலைமுறை தொழில்முனைவோராக இவரின் குடும்பம் நிறுவனத்தின் 35.5 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் தான் ரிலையன்ஸ் தற்போது பெரும்பாலான பங்குகளை வாங்கியிருக்கிறது


பங்குகளை கைப்பற்றினாலும் வி.எஸ்.எஸ் மணியே நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் முழு செயல்பாடுகளை வழிநடத்துவார் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, டாடா குழுமம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில் வெற்றிகரமாக ரிலையன்ஸ் கைப்பற்றி இருக்கிறது.


தங்களின் புதிய கூட்டணி தொடர்பாக பேசியுள்ள வி.எஸ்.எஸ் மணி,

“கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு, பயனர்களுக்கு விரைவான, இலவச மற்றும் விரிவான தகவல்களை வழங்குவதற்காகவும், நுகர்வோரை விற்பனையாளர்களுடன் இணைப்பதற்கும் இந்த தளத்தை உருவாக்கினோம். எங்களின் தொலைநோக்கு திட்டம் நிறுவனங்களின் தேடல் மற்றும் கண்டுபிடிப்பை வழங்குவது என்பதல்லாமல், எங்கள் பி 2 பி இயங்குதளத்தின் மூலம் வணிகர்களிடையே வர்த்தகத்தை இயக்கவும், எங்கள் தளம் மூலம் இதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
வி.எஸ்.எஸ் மணி

இதேபோல், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருக்கும் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி,

“ஜஸ்ட் டயல் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோரான வி.எஸ்.எஸ் மணி ஆகியோருடன் ரிலையன்ஸ் கூட்டணி அமைத்துள்ளது உற்சாகத்தை தருகிறது. வி.எஸ்.எஸ் மணி தனது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் ஒரு வலுவான வணிகத்தை உருவாக்கியுள்ளார்,” என்றார்.

ஜஸ்ட் டயலில் செய்யப்பட்ட முதலீடு மூலம், மில்லியன் கணக்கான எங்கள் கூட்டணி வணிகர்கள் மற்றும், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் உயர்த்தி புதிய வர்த்தகத்திற்கான தளத்தை உருவாக்குவது எங்கள் நோக்கம்.


ஜஸ்ட் டயலின் மிகவும் அனுபவம் வாய்ந்த நிர்வாகக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் நாளை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த இணைப்பு மூலம் வணிகத்தை மேலும் விரிவுப்படுத்துகிறோம், என்று கூறியிருக்கிறார்.


இதற்கிடையே, ரிலையன்ஸ் உடனான கூட்டணியால் வியாழக்கிழமை முதல் ஜஸ்ட் டயலின் பங்கு கிட்டத்தட்ட நான்கு சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது!


ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: மலையரசு