மனித கழிவுகளை அள்ளும் ரோபோ தயாரிப்பு: Genrobotics-ல் ரூ.20 கோடி முதலீடு செய்த Zoho!
ஆழ் தொழில்நுட்ப சூழலை ஊக்குவிக்கும் வகையில் சமூக நோக்கிலான ரோபோக்களை உருவாக்கி வரும் ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்வதாக ஜோஹோ அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ’ஜோஹோ கார்ப்பரேஷன்’ கழிவு அகற்றல் போன்ற பணிகளுக்காக ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை உண்டாக்கி வரும் ஸ்டார்ட் அப் ’
' 'ஜென்ரோபோடிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.இந்தியாவில் மனிதர்கள் மலம் மற்றும் கழிவுகளை அகற்றுவதை அறவே இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்ட ’ஜென்ரோபோடிக்ஸ்’ இலக்கை அடைய இந்த முதலீடு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் உருவாக்க வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஜோஹோ கொண்டுள்ள ஈடுபாட்டையும் இது உணர்த்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆக்கமான ’பண்டிகூட்’ (Bandicoot) உலகின் முதல் கழிவு அகற்றும் ரோபோவாக திகழ்கிறது. சாக்கடை குழாய்கள், மழைநீர் கால்வாய்கள் மற்றும் சுத்திரகரிப்பு நிலையங்களில் உள்ள மழை நீர் கால்வாய்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வதில் இது உதவுகிறது.
தற்போது 14 மாநிலங்களில் உள்ள நகராட்சி அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்டவை இந்த ரோபோவை பயன்படுத்தி வருகின்றன.
அண்மையில் நிறுவனம் மருத்துவத் துறையிலும் நுழைந்து, பாராபலிஜியா பாதிப்பு கொண்ட நோயாளிகள் சிகிச்சையில் உதவும் வம்கையில் ’ஜி கெய்டர்’ எனும் ரோபோ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
"இந்தியாவில் ஆழ் நுட்ப சூழலை ஊக்குவிப்பது ஜோஹோ நிறுவனத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜென்ரோபோடிக்ஸ் நிறுவன முதலீடு இதன் அடையாளமாக அமைகிறது,” என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
"இத்தகைய தொழில்நுட்பங்களை உள்ளூரிலேயே உருவாக்குவது தொழில் உற்பத்தி, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். இது நாட்டை மேலும் தற்சார்பு மிக்கதாக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜென்ரோபோடிக்ஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விமல் கோவிந்த் கூறுகையில்,
"எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக மேலும் பாதுகாப்பான உலகை உண்டாக்குவதில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பங்கில் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார்.
"கழிவு அகற்றும் Bandicoot ரோபோ, மனித அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு கலந்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தவிர்க்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோபோக்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இடைவெளியை போக்கும் வகையில் வளர்ச்சிக்கு திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நம்புவதாகவும், ஜோஹோ முதலீடு ஆய்வு வசதி மற்றும் உற்பத்தி வசதியை மேம்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.