சுனாமி தாக்கிய நாகப்பட்டின பழங்குடி குழந்தைகள் வாழ்வில் ‘வானவில்’ ஆன ரேவதி!
பத்திரைகையாளர், உதவி இயக்குனர் என பல முகங்களைக் கொண்ட ரேவதி, நாகப்பட்டின பழங்குடி மக்களின் குழந்தைகள் கல்வி பெற தன்னார்வலராகி தன் வாழ்க்கையை அற்பணித்தார்.
2004-ம் ஆண்டு வரலாறு காணாத பேரிடராக சுனாமி பேரலை தாக்கியது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மிகுந்த சேதமடைந்தது. 8,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கடந்திருப்பினும் இன்றளவும் அதன் தாக்கம் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை.
சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமியால் கடுமையான பாதிப்பிற்குள்ளானது. அங்குள்ள நிவாரண முகாம் ஒன்றில் ரேவதி தன்னார்வலராக சேர்ந்தபோது அவருக்கு 27 வயது.
அந்த சமயத்தில் திரைப்பட இயக்குநர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்த ரேவதி பணியிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் சேவை செய்யத் தொடங்கினார். இந்தத் தன்னார்வலப் பணிகள் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
ரேவதி நாகப்பட்டினத்தில் தனது பணியை நிறைவு செய்த சமயத்தில் அந்தப் பகுதியில் உள்ள இரண்டு நாடோடி பழங்குடி சமூகங்களின் ஆதரவற்ற நிலை குறிந்து அறிந்தார். ஒன்று பூம்பூம் மாட்டுக்காரர் சமூகம். இவர்கள் காளை மாட்டை அலங்கரித்து மக்களை மகிழ்வித்து யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தினர். மற்றொன்று நரிக்குறவர் சமூகம். முந்தைய காலத்தில் வேட்டையாடி வந்த இந்தச் சமூகத்தினர் வாழ்வாதாரத்திற்காக மணி மாலைகளை விற்பனைக்கு மாறினர்.
"அது போன்று விளிம்புநிலையில் உள்ள உள்ளூர் பழங்குடி மக்களை நான் அதுவரை கண்டதில்லை. இவர்களுக்கென்று தனிப்பட்ட அடையாளமோ சமூகப் பாதுகாப்போ இல்லை. ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் வறுமையில் வாடுகின்றனர். பெரியவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். குழந்தைகள் பள்ளிப்படிப்பு, கல்வியின் முக்கியத்துவம் போன்றவை குறித்து அறிந்திருக்கவில்லை. இந்தச் சமூகங்களின் நிலையை நான் மேம்படுத்த விரும்பினேன். அப்போதுதான் ஒரு பள்ளியை நிறுவ திட்டமிட்டேன்,” என்று தெரிவித்தார் 43 வயதான ரேவதி.
2005-ம் ஆண்டு 20 மாணவர்களுடன் ‘வானவில்’ பள்ளியை நிறுவினார். தற்போது ஒவ்வொரு ஆண்டும் 180-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
திருப்புமுனை
ரேவதி வேலூர் மாவட்டத்தின் அரக்கோணத்தில் பிறந்தவர். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் படித்தார். பாரதி பெண்கள் கல்லூரியில் கணிதப் பிரிவில் பட்டப்படிப்பு படித்தார்.
எனினும் அவருக்கு பத்திரிக்கைத் துறையில் ஆர்வம் இருந்ததால் அந்தப் பிரிவிற்கு மாறினார். உதவி இயக்குநராக பணியில் ஈடுபடுவதற்கு முன்பு சன் நியூஸ், ஜீ நியூஸ், ஈநாடு டிவி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
ரேவதி 2004-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வலராக இணைந்துகொண்டபோது லஷ்மி என்கிற சிறுமியை பேருந்து நிறுத்தம் ஒன்றில் சந்தித்தார். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மெலிந்த தோற்றம் கொண்ட லஷ்மியைக் கண்டு அதிர்ந்துபோனார்.
“லஷ்மியின் தோற்றம் என் மனதில் நீங்காமல் பதிந்துவிட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி இறந்துவிட்ட செய்தியைக் கேட்டேன். அவர் சாலைகளில் யாசகம் கேட்டும் சிறு வேலைகளைச் செய்தும் பிழைப்பு நடத்தும் அதியன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கென்று தனிப்பட்ட அடையாளம் இல்லை. அரசாங்கத்தின் ஆதரவும் கிடைப்பதில்லை.
போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இவர்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தாலும் இந்த சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. இவர்களுக்கு உதவத் தீர்மானித்தபோது பள்ளி நிறுவும் எண்ணம் தோன்றியது. உடனே அதை செயல்படுத்தினேன், என்று ரேவதி நினைவுகூர்ந்தார்.
பள்ளி
ரேவதி; பள்ளியை அமைக்க தனது சொந்த சேமிப்பில் இருந்து 25,000 ரூபாயை முதலீடு செய்தார். 2005-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழக்கரையிருப்பு கிராமத்தில் 20 மாணவர்களுடன் சிறியளவில் தொடங்கினார்.
பின்னர் அரசாங்கத்தின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக வானவில் என்கிற பெயரில் ரெசிடென்ஷியல் பயிற்சி மையமாக இந்தப் பள்ளி பதிவு செய்யப்பட்டது.
“பள்ளியை நிறுவிய ஆரம்பகட்ட இரண்டாண்டுகள் கடினமாகவே இருந்தது. அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்கவே பணம் இல்லாத சூழல் நிலவியது. மேலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததால் அவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு முன்பு முழுமையான சத்துள்ள உணவு வழங்கவேண்டியிருந்தது. எனவே பாடம் கற்றுக்கொடுப்பது, சமையல் செய்வது என இருவேறு பணிகளில் ஈடுபடவேண்டியிருந்தது,” என்றார் ரேவதி.
மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யாமல் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இரண்டு பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பிச்சை எடுத்தே உயிர் வாழ்ந்து வந்தனர். எனவே பள்ளியில் சேர்ந்த குழந்தைகளும் வகுப்புகளுக்கிடையே வெளியே சென்று சாலைகளில் திரிந்து யாசகம் கேட்டு வந்தனர். ரேவதி அவர்களைப் பின் தொடர்ந்து சென்று மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவார்.
ஒரு தற்காலிகப் பள்ளியை அமைத்து இந்தப் பழங்குடி குழந்தைகளுக்கு சில மாதங்கள் கல்வி கற்பித்த பிறகு வழக்கமான பள்ளிப்படிப்பில் ஈடுபடுத்த ரேவதி ஆரம்பத்தில் திட்டமிட்டார். எனினும் இவரது முயற்சி முழு வீச்சில் செயல்படும் ரெசிடென்ஷியல் கல்வி நிறுவனமாகவே மாறியது.
“பின்னர் தற்காலிகப் பள்ளியுடன் நிறுத்திவிடக்கூடாது என்பதை உணர்ந்தேன். அதியன் மற்றும் நரிக்குறவர் மக்களின் சமூகம் மற்றும் கல்வியறிவு சார்ந்த பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளும்போது நீண்ட கால அடிப்படையிலான தீர்வு தேவைப்பட்டது,” என ரேவதி விவரித்தார்.
குழந்தைகள் வேடிக்கையான அணுகுமுறையுடன் அறிவாற்றல் பெறும் வகையில் அனுபவம் சார்ந்த கற்றல் மாதிரியுடன் வானவில் பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டது. ரேவதி ஏற்கெனவே கல்லூரி பிராஜெக்டின் ஒரு பகுதியாக சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்துள்ளார். எனவே பாடதிட்டங்களை உருவாக்குவது கடினமாக இருக்கவில்லை.
“வானவில் பள்ளியில் சேரும் குழந்தைகளின் சராசரி வயது 5 முதல் 11 வரை ஆகும். இவர்கள் அனைவருக்குமே கல்வி குறித்த புரிதலே இல்லை. எனவே சுவாரஸ்யமான வகையில் இவர்களை கற்றலில் ஈடுபடுத்துவது முக்கியம். உதாரணத்திற்கு மாணவர்களை காய்கறி சந்தைக்கு அழைத்துச் சென்று கொள்முதல் மற்றும் விற்பனை விலை குறித்து கற்றுக்கொடுத்தோம். விளைநிலங்களுக்கு அழைத்துச் சென்று விவசாயம் குறித்து கற்றுக் கொடுத்தோம். எங்களது கற்றல் முறையில் திரைப்படங்கள் பார்ப்பது, கதை சொல்லுவது கலைத்திறனை வெளிப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் அடங்கும்,” என்றார் ரேவதி.
பழங்குடி சமூகத்தின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ரேவதி. வானவில் நிறுவி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 1,000-க்கும் அதிகமான பழங்குடி குழந்தைகள் பலனடைந்துள்ளனர்.
“என் முயற்சிகள் பலனளிப்பது மனநிறைவைத் தருகிறது. இதற்கு முன்பு குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைத்து அதன்மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்தது. இன்று இது ஓரளவிற்கு நிறைவேறி இருக்கிறது,” என்றார் ரேவதி.
இன்று 43 வயதான ரேவதி ஒவ்வொரு ஆண்டும் 80 மாணவர்களுடன் பள்ளியை நடத்தி வருகிறார். முதலாமாண்டு அவர் தலைமையில் மட்டுமே இயங்கிய பள்ளி இன்று முழு நேரமாக பணியாற்றும் எட்டு ஆசிரியர்களுடனும் 14 ஊழியர்களுடனும் செயல்பட்டு வருகிறது.
இந்த நெடும் பயணத்தில் Milaap போன்ற கூட்டுநிதி தளங்கள், தனிநபர் நன்கொடைகள், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், Marc Saquet Foundation போன்றோர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி வழங்கி பிச்சை எடுக்கும் வழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க அருகாமையில் உள்ள 10 கிராமங்களில் கூடுதல் கற்றல் மையங்களையும் ரேவதி நிறுவியுள்ளார். வருங்கால திட்டம் குறித்து அவர் கூறும்போது,
“பழங்குடி சமூகங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்த உதவும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் வாழ்வாதார திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா