6000 ஏக்கர்; 1000 கோடி டர்ன்ஓவர்; உலகில் 3ம் இடம்: பூக்கள் உற்பத்தியில் தஞ்சை சகோதரர்களின் வெற்றி நிறுவனம்!
தஞ்சை புகழை தரணி பாட வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப, காவிரி மண்ணில் பிறந்து, வளர்ந்து உலக நாடுகள் போற்றும் வெற்றி தொழிலதிபர்களாய் உயர்ந்துள்ள சகோதரர்களில் கதை இது!
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 12 கிமி தூரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் நடுக்கடை. இங்கு பிறந்து, வளர்ந்து, பள்ளிப்படிப்பை பத்தாவதோடு முடித்துவிட்டு துபாய் சென்ற அந்த இளைஞர், தனது சகோதரர்களோடு இணைந்து தொடங்கிய சிறிய பூக்கடை, இன்று உலகின் பூக்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 3ம் இடத்தில் இருக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த அளவிற்கு இவர்கள் உயர்ந்துள்ளனர் என்றால் நம்புவது சுலபமல்ல, ஆனால் உண்மை இதுதான்.
ஆம் இவர்கள் 90’களில் தொடங்கிய ‘Black Tulip’ எனும் நிறுவனம் இன்று உலகளவில் பலவகையான பூக்களை உற்பத்தி செய்து ஆண்டுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு டர்ன் ஓவர் செய்கிறது. இவர்களின் 6000 ஏக்கர் ஃபார்ம்களில் உற்பத்தியாகும் வண்ண மலர்கள் துபாய், மலேசியா, சிங்கப்பூர், லண்டன் என உலகெமெங்கும் ஏற்றுமதி ஆகிறது.
இதற்கப் பின்னால் இருப்பவர்கள், தஞ்சையில் பிறந்த முகமது எஹியா, அவரது அண்ணன் பஷீர் அஹமது மற்றும் தம்பி சாதிக் பாட்ஷா ஆகிய மூன்று சகோதரர்கள். இவர்களின் இந்த அசுர வளர்ச்சி பற்றியும், இவை சாத்தியமானது எப்படி எனவும், முதன்முறையாக யுவர்ஸ்டோரி தமிழ் ஊடகத்துக்கு ஜூம் வழியில் பேட்டி கொடுத்தார் முகமது எஹியா.
சத்தமில்லாமல் தொழிலில் சாதனைப் படைத்துள்ள இவர்களின் கதை ஊடகம் மூலம் வெளியே வருவது இதுவே முதன்முறை.
இந்துஜா: காவிரி மண்ணில் பிறந்து, வளர்ந்த நீங்கள் தொழில்முனைவர் ஆனது எப்படி? வெளிநாடு சென்று எதற்காக பூக்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டீர்கள்?
எஹியா: நான் பத்தாவது வரை நடுக்கடை எனும் நான் பிறந்த ஊரில் படித்தேன். அதன் பின், சில காரணங்களால் படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களது பெரிய குடும்பம், என் அண்ணன் பஷீர் ஏற்கனவே துபாய் சென்று அங்கு சிறிய கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் நானும் அவருடன் இருக்க 1982-ல் அங்கு சென்றுவிட்டேன். 1989 வரை அங்கு ஒரு சிறிய பூக்கடையில் பணிபுரிந்து வந்தேன். அங்கு என் அண்ணன் சேல்ஸ் மேனேஜராக இருந்தார்.
ஆனால், எனக்கு சிறு வயது முதலே தொழில் தொடங்க வேண்டும் என்ற தாகம் இருந்தது. நாங்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோர். ஒரு வழியாக, 1990-ல் நானும் என் அண்ணனும் சேர்ந்து துபாயில் சிறியளவில் பூக்கடை ஒன்றைத் தொடங்கினோம். இதுதான் பூக்கள் பிசினசில் நுழையவதற்கான முதல் புள்ளியாக இருந்தது.
இந்துஜா: பிசினஸ் தொடங்க எவ்வளவு முதலீடு செய்தீர்கள்? தொழில் ஆரம்பிப்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தது?
எஹியா: நாங்கள் 20,000 டாலர் (சுமார் 1.5 லட்சம்) முதலீடு செய்து இந்தத் தொழிலைத் தொடங்கினோம். 1990 காலகட்டத்தில் துபாயில் ஸ்டார் ஹோட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. அங்கு பூக்களுக்கான தேவையும் அதிகம் இருந்தது. எங்கள் கடையில் பல நாடுகளில் இருந்து வரவழைக்கும் பூக்களை துபாயில் சப்ளை செய்துவந்தோம்.
துபாயில் தொழில் செய்வது மிகவும் எளிதானது. சட்டதிட்டங்கள் எளிமையாக இருக்கும். அரசாங்கம் தொழில்முனைவோருக்கு ஆதரவான சூழலை உருவாக்கித் தந்தது.
எங்களுக்கு மலேஷியாவில் காண்டாக்ட் அதிகம் இருந்ததால், முதலில் அங்கிருந்து பூக்களை இறக்குமதி செய்தோம். அங்கு கேமரூன் ஐலேண்ட் என்கிற இடத்தில் பெருமாள் என்கிற தமிழர் பூக்கள் வளர்த்து வந்தார். ரோஸ், லில்லி போன்ற மலர்களை இங்கிருந்துதான் முதலில் வாங்கினோம். ஆறு மாதங்கள் வரை இது தொடர்ந்தது. பிறகு ஜோர்டனில் இருந்து வாங்கினோம். அதைத் தொடர்ந்து கென்யாவில் இருந்து இறக்குமதி செய்தோம்.
இந்தப் பூக்களை கோல்ட் ஸ்டோரேஜ் முறையில் பாதுகாத்து ஃப்ரீ கூல் செய்து ஸ்டார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் நானும் என் அண்ணனும் மட்டுமே நிர்வகித்து வந்தோம். பிறகு 2 பேரை பணியமர்த்தினோம்.
1993ம் ஆண்டு கென்யாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தோம். இந்த வணிகத்தை பெரியளவில் கொண்டு செல்லலாம் என்கிற நம்பிக்கை அப்போதுதான் எனக்கு பிறந்தது. வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அந்த காலகட்டத்தில் உணர்ந்தோம்.
இந்துஜா: ஆபிரிக்க நாடான கென்யாவில் இருந்து இறக்குமதி செய்ய எப்படித் திட்டமிட்டீர்கள்? வேறு எந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தீர்கள்?
எஹியா: கென்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்கள் தரமானதாக இருக்கும். இதற்கு இங்குள்ள பருவநிலை முக்கியக் காரணம். உலகளவில் கென்யா, எத்தியோப்பியா, கொலம்பியா, இக்கடோமா ஆகிய நான்கு நாடுகளே பூக்கள் வளர உகந்த பருவநிலையைக் கொண்டுள்ளது. இயற்கையுடன் ஒன்றியிருந்து எந்த நாட்டில் எது விளைகிறதோ அதை வளர்த்து பயனடைவதே சிறந்தது.
தற்போது கென்யாவில் அதிகளவில் மலர் உற்பத்தி செய்கிறோம். ஆப்பிரிக்காவில் கென்யாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6,000 பேர் எங்களிடம் வேலை செய்கிறார்கள். தற்போதைக்கு 4,000 ஏக்கருக்கு மேல் மலர் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
ஆரம்பத்தில் கென்யாவில் இருந்து மலர்களை வாங்கி விற்பனை செய்து வந்தோம். பிறகு கென்யா விமான நிலையத்தில் ஒரு அலுவலகம் திறந்தோம். அங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்களை வாங்கி எங்களைப் போன்ற மொத்த விற்பனையாளர்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம்.
2000ம் ஆண்டு மலேசியாவில் சொந்தமாக அலுவலகம் திறந்தோம். அங்கு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பூக்களை வாங்கி எங்களைப் போன்ற விற்பனையாளர்களுக்கு ஏற்றுமதி செய்தோம். ட்ராபிக்கல் நாடுகளில் ஆர்கிட் மலர் நன்றாக வளரும். இப்படி வெவ்வேறு நாடுகளில் வளரும் வெவ்வேறு பூக்களை மொத்தமாக வாங்கி ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம்.
இந்துஜா: நீங்கள் மலர்களை வாங்கி விற்பனை செய்தபோது வணிகம் லாபகரமாக இருந்ததா? சொந்தமாக மலர் உற்பத்தி செய்யலாம் என்கிற எண்ணம் எப்போது ஏற்பட்டது? இதற்கான முதலீடு என்ன?
எஹியா: எங்கள் வணிகத்தில் வளர்ச்சி இருந்தாலும் ஆரம்பத்தில் லாபம் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் வணிகத்தைத் தொடர்ந்தோம்.
2001-ம் ஆண்டு முதலில் கென்யா சென்றேன். அந்த சமயத்தில் நாங்கள் கென்யாவில் இருந்து துபாய்க்கு பூக்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். மலர் பண்ணையைப் பார்வையிட்ட போதுதான் எனக்கு அந்த எண்ணம் உதித்தது.
கென்யாவில் அலுவலகம் திறந்து இங்குள்ள உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பூக்கள் வாங்கி எங்களைப் போன்ற மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்தோம்.
இதனால் இடையில் இருக்கும் ஏஜெண்டிற்குக் கிடைக்கும் லாபம் எங்களுக்குக் கிடைத்தது.
2002-ம் ஆண்டு அங்கு அலுவலகம் திறந்தோம். மலர் உற்பத்தியாளர்களிடம் சொந்தமாக வாங்கி நாங்களே விற்பனை செய்ததுடன் மொத்த விற்பனையாளர்களுக்கும் விற்கத் தொடங்கினோம். 2002-ம் ஆண்டு முதல் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
அந்த சமயத்தில் அரை மில்லியன் டாலர் (சுமார் 4 கோடி) முதலீடு செய்தோம். எங்கள் சேமிப்பில் இருந்து சுயநிதியிலேயே தொடங்கினோம்.
2003-ம் ஆண்டு சிறியளவில் நாங்களே பூக்களை உற்பத்தி செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் 200 ஏக்கர் நிலத்தை குத்தகை முறையில் எடுத்து உற்பத்தி செய்தோம்.
2004-ம் ஆண்டு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் வாங்கினோம். கென்யாவில் உள்ள ஈஸ்ட் ஆப்ரிக்கன் குரூப் என்கிற இந்திய குரூப்புடன் இணைந்து ஜாயின்ட் வென்சரில் 6 மில்லியன் அமெரிக்க டாலரில் பிராஜெக்ட் தொடங்கினோம். இதில் நாங்கள் 3 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தோம். 3 மில்லியன் டாலர் வங்கிக் கடன் பெற்றோம்.
இந்துஜா: இந்தியாவில் இருந்து சென்ற நீங்கள் வெளிநாடுகளில் பிசினஸ் செய்வது அவ்வளவு சுலபமல்ல, இந்த பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
எஹியா: நிறைய சவால்கள் சந்தித்தோம். நான் பிரச்சனையைக் கண்டு பயப்படும் குணம் கொண்டவன் அல்ல. துபாய் பாதுகாப்பான நாடு. அங்கிருந்து நான் ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்றேன். பொதுவாகவே ஆப்பிரிக்க நாடுகள் என்றதும் மக்கள் மனதில் பயம் ஏற்படும், அங்கு தொழில் செய்ய திட்டமிடுவது தெரிந்து நண்பர்களும் பயப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் நெதர்லாந்தில் இருந்து நிறைய மலர்கள் வாங்கினோம். அந்த சமயத்தில் நெதர்லாந்து தனி நாடாக இருந்தது. கில்டர் கரன்சியாக இருந்தது. யூரோ இல்லை. ஐரோப்பிய யூனியன் நாடாக இல்லை. 2000-ம் ஆண்டு காலகட்டத்தில்தான் ஒரே நாடாக ஐரோப்பிய யூனியன் உருவானது. யூரோ வலுவானது. இனி ஐரோப்பாவில் இருந்து மலர்கள் வாங்கி வணிகம் செய்தால் லாபம் இருக்காது என்பதை உணர்ந்தேன்.
ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். முதல் நிலம் வாங்கியதே சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது. முதல் காரணம் பார்ட்னர்ஷிப். இந்த இணைப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை. பார்ட்னர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. நஷ்டம் ஏற்பட்டதால் ஓராண்டில் பார்ட்னர்ஷிப்பில் இருந்து வெளியேறினோம்.
2005-ம் ஆண்டு கென்யாவில் 300 ஏக்கர் நிலத்தை 7 மில்லியன் யூரோவிற்கு நான் வாங்கினேன். தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. மலர் நன்றாக விரிந்து வளர்வதற்கு வெயில் முக்கியம். கென்யாவில் மழை இருப்பது வழக்கம்தான் என்றாலும் தொடர் மழை காரணமாக மலர் உற்பத்தி பாதித்தது. வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி கட்டவேண்டியிருந்தது. 800 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆறு மாதம் கடினமான காலகட்டமாக இருந்தது.
மலர்களை வாங்கி விற்பனை செய்தபோது எந்த சிக்கலும் இல்லாமல் வணிகம் நடந்தது. அந்த சமயத்தில் சொந்தமாக நிலம் வாங்கி மலர் வளர்க்கத் தீர்மானித்தது தவறான முடிவோ என்கிற எண்ணம்கூட ஏற்பட்டது. இருப்பினும் பிரச்சனைகளால் தளராமல் விடாமுயற்சியுடன் வணிகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.
2005ம் ஆண்டு துபாயில் 200 ஊழியர்களும் ஆப்பிரிக்காவில் 1000 ஊழியர்களும் பணியாற்றினார்கள். அந்த காலகட்டத்தில் மாதாந்திர டர்ன்ஓவர் 1 மில்லியன் டாலராக இருந்தது.
இந்துஜா: 2005 காலகட்டத்தில் குறிப்பாக எந்த வகையான மலர்கள் உற்பத்தி செய்தீர்கள்? சந்தை குறித்த ஆய்வு ஏதேனும் மேற்கொண்டீர்களா?
முக்கியமாக ரோஸ் உற்பத்தி செய்தோம். இஸ்ரேலிய ஃபார்ம் மேனஜர் ஒருவரை பார்ட்னராக இணைத்துக்கொண்டு ஜிஃப்சோபில்லா என்கிற மலரை உற்பத்தி செய்தோம். உலகளவில் இந்த மலரை அதிகளவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நாங்கள் மட்டும்தான்.
வழக்கமான மலர்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. சில மலர்களுக்கு சந்தையில் தேவை அதிகம் இருக்கும். ஆனால் அவற்றை வளர்ப்பது சவால் நிறைந்ததாக இருக்கும். அதையே நாங்கள் தேர்வு செய்கிறோம்.
ரோஜா பூக்களிலும் சந்தையில் தேவை அதிகமுள்ள நிறத்தை பிரத்யேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். ப்ரீடருக்கு ராயல்டி கொடுத்து அந்த வகை மலரை யாருக்கும் கொடுக்காமல் பிரத்யேகமாக எங்களுக்குக் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறோம்.
இந்துஜா: உங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்தது குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எஹியா: 2002-ல் கென்யாவில் அலுவலகம் திறந்ததும் உற்பத்தியாளர்களிடம் வாங்கி சவுதி அரேபியா, ஓமன், கத்தார், சிங்கப்பூர் என வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவாக்கம் செய்தோம். 2005-2006 காலகட்டத்தில் சொந்தமாக உற்பத்தி செய்து தரமான மலர்களையும் சேவையையும் வழங்கத் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் மலர்களை பேக் செய்து ஃப்ரைட் ஃபார்வார்டிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விற்பனை செய்தோம். பின்னர் சொந்தமாக ஃப்ரைட் ஃபார்வார்டிங் நிறுவனம் தொடங்கி ஏற்றுமதி செய்யத் தொடங்கினோம். விமான நிலையத்தில் 4000 சதுர அடியில் கோல்ட் ரூம் வாடகைக்கு எடுத்து செயல்பட்டோம்.
ஐரோப்பிய யூனியன் உருவாகி எல்லா நாடுகளுக்கும் யூரோ கரன்சி வந்த பிறகு விலைவாசி உயர்வு காரணமாக மலர் உற்பத்தி பாதித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா மலர்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
எங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம். நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்சு, சுவிசர்லாந்து, மாஸ்கோ, உக்ரைன் போன்ற நாடுகளுக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
இந்துஜா: இந்தியாவில் நீங்கள் பூக்கள் உற்பத்தி செய்கிறீர்களா?
எஹியா: 2004-ம் ஆண்டு இந்தியாவில் ஓசூரில் இருக்கும் எங்களின் ஃபார்மில் உற்பத்தியான ரோஜா மலர்களை லண்டனுக்கும் மலேசியாவிற்கும் ஏற்றுமதி செய்தோம்.
தற்போது இந்தியாவில் கர்நாடகா ஓசூரில் 150 ஏக்கர் என்கிற அளவில் எங்களுக்குச் சொந்தமான இரண்டு நிலங்கள் உள்ளன. இங்கு 300 பேர் வேலை செய்கிறார்கள்.
இந்துஜா: ஏற்றுமதி விரிவடைந்ததும் வளர்ச்சியும் டர்ன்ஓவரும் எவ்வாறு அதிகரித்தது?
இன்று எங்கள் ஆண்டு டர்ன்ஓவர் 120 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,000 கோடி ரூபாய். கென்யாவில் மலர் உற்பத்தியைத் தொடங்கிய பின்னர் வளர்ச்சி அதிகரித்தது. தற்போது மலர் உற்பத்தி வணிகத்தில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறோம். விரைவில் முதல் இடத்தை பிடிக்க பணிகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் கென்யாவில் 1300 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறோம். இங்கு மட்டும் 1700 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். எங்களுக்கு மொத்தமாக 5300 ஏக்கர் நிலம் கென்யாவில் உள்ளது. இதுதவிர எத்தியோப்பியாவில் 500 ஏக்கர் நிலமும் இந்தியாவில் 150 ஏக்கர் நிலமும் இருக்கிறது. எத்தியோப்பியாவில் 1200 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
மொத்தத்தில் கிட்டத்தட்ட 6000 ஏக்கர் நிலத்தில் உலகமெங்கும் மலர் உற்பத்தி செய்கிறோம். ஒட்டுமொத்தமாக சுமார் 10,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒரு நாளைக்கு 10 லட்சம் மலர் தண்டுகள் விளைகிறது. தலைமை அலுவலகம் துபாயில் செயல்படுகிறது.
இதுதவிர ஃப்ளோரல் ஹப் இருக்கும் நாடுகளில் எல்லாம் எங்கள் சொந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்துஜா: எந்த மாதிரியான நிலத்தில் மலர்களை உற்பத்தி செய்ய முடியும்?
எஹியா: கடல் மட்டத்தில் இருந்து 1600 அடியில் நாங்கள் மலர் உற்பத்தி செய்கிறோம். சில மலர்களை 1800 அடியிலும் சிலவற்றை 2000 அடியிலும் உற்பத்தி செய்யலாம். இப்படி எந்த பருவநிலையில் எந்த வகை வளருமோ அதைத்தான் உற்பத்தி செய்கிறோம்.
உலகளவில் நாங்கள் அதிக மலர் வகைகளை உற்பத்தி செய்கிறோம். மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளைச் சேர்ந்த தங்கப் பதக்கம் வென்ற வேளாண் மாணவர்கள் எங்களின் நிறுவனத்தில் இணைந்துள்ளார்கள்.
இந்துஜா: இந்தியாவில் எந்த அளவிற்கு மலர் உற்பத்தி சாத்தியப்படுகிறது?
எஹியா: இந்தியாவில் ஒரே இடத்தில் 100 ஏக்கர் நிலம் வாங்குவதே கடினம். நிறைய சட்டச் சிக்கல்கள் இருக்கும். தவிர தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். தரமான தண்ணீர் கிடைப்பதும் தடையின்றி ஆண்டு முழுவதும் கிடைப்பது சாத்தியப்படுவதில்லை.
இந்தியா எங்கள் மண். எங்களுக்கு இந்தியா உடன் உணர்வுப்பூர்வமான இணைப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் மலர் வணிகத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியவில்லை.
இந்துஜா: ’Black Tulip’ என்று நிறுவன பெயர் வைக்கக் காரணம்? உலகளவில் 3ம் இடத்தில் இருக்கும் நீங்கள் முதலிடத்தை எட்ட எந்த மாதிரியான திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள்?
எஹியா: சமீபத்தில் நிலம் வாங்கி வணிகத்தை விரிவாக்கம் செய்ததில் கிட்டத்தட்ட முதலிடத்தை நெருங்கிவிட்டோம் எனலாம். முதலிடத்தை பிடிக்கவேண்டும் என்கிற இலக்கை அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் எட்டிவிடுவோம்.
ஆரம்பத்தில் சன் ஃப்ளோரா டிரேடிங் என்கிற பெயரில் வணிகத்தில் ஈடுபட்டோம். மூன்றாண்டுகளில் தனித்துவமான பெயராக இருக்கவேண்டும் என்பதற்காக ‘பிளாக் டியூலிப்’ என்று மாற்றினோம்.
இந்துஜா: உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே மாறுபட்டதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும் நிலையில் உங்களை எவ்வாறு ஊக்குவித்துக்கொள்கிறீர்கள்?
நான் எப்போதும் தனித்துவமான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். எடுக்கும் முயற்சிகளில் சாதனை படைக்கவேண்டும். பயம் சாதனை படைக்க தடையாகிவிடக் கூடாது. ரிஸ்க் எடுக்காமல் சாதிக்க முடியாது. இன்றளவும் ஒருபுறம் சிக்கல்களை சந்தித்துக்கொண்டேதான் மற்றொருபுறம் வெற்றியடைந்து வருகிறேன்.
இது என் தனிப்பட்ட வெற்றி அல்ல. பிளாக் டியூலிப் குழுவில் முக்கிய குழுத் தலைவர்கள் இருக்கிறார்கள். எங்கள் குரூப் ஜி.எம் கேரளாவைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாக எங்களுடன் இணைந்திருக்கிறார். நிதி மேலாளர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இப்படி பலர் குழுவாக இணைந்து வணிகத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளோம். நான் மற்றும் என் சகோதரர்கள் நடத்தி வந்த நிலையில், எங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினர் தொழிலில் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இந்துஜா: இந்தியாவின் வேளாண் நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலாவது ஆதரவளிக்கும் திட்டம் இருக்கிறதா?
எஹியா: நான் பிறந்த மண்ணின் நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற ஆசை அதிகப்படியாகவே இருக்கிறது.
தஞ்சையில் விளையும் காய்கறிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளையும் நிச்சயம் எடுப்பேன்.
மேலும், நிறைய நற்பணிகளைச் செய்து வருகிறோம். சொந்த ஊரில் இருபதாண்டுகளாக டெய்லரிங், கம்ப்யூட்டர் வகுப்புகள் போன்றவற்றை ஏழைப் பெண்களுக்காக ஏற்பாடு செய்கிறோம்.
இந்தியாவில் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மாடுகள் கிராமங்களை விட்டு வெளியேறியதும் நோய்கள் அதிகரித்துள்ளது. கென்யாவில் 2500 மாடுகள் வைத்திருக்கிறோம். பால் உற்பத்தி மட்டுமின்றி மாடுகளின் சாணம், கோமியம் ஆகியவற்றை மலர் உற்பத்திக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறோம். இந்திய கிராமங்களில் மாடுகளை அதிகப்படுத்தினால் இயற்கை விவசாயம் செழிக்கும் என்பது என்னுடைய கருத்து.
30 ஆண்டுகால தொழில் வளர்ச்சிக் கதையை சுமார் 1.5 மணி நேரத்தில் எஹியா அவர்கள் சுருக்கிச் சொன்னாலும், சிறிய ஊரில் இருந்து வந்தாலும் உலகளவில் சாதிக்க புதிய ஐடியாக்களும், தொடர் முயற்சிகள் மட்டுமே தேவை என்ற ஒற்றைக் கருத்தை மனதில் ஆழமாய் பதியவிட்டுச் சென்றார்.