கறிக்கு தொட்டுக்கயாக சோறு வழங்கும் 'பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை'
நாட்டுச் சக்கரை பொங்கல், முட்டை தொக்கு, இரத்தப் பொறியல், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி சுக்கா, தலைக்கறி, போட்டி வறுவல், இஞ்சிக்கார கறி, காடை வறுவல், மீன் வறுவல், சிக்கன் 65 போன்லெஸ், லாலிபாப் சிக்கன், மூளை வறுவல், இறால்/ நண்டு தொக்கு, மீன் தொக்கு, மட்டன் சீரக சம்பா பிரியாணி, சாதம், மட்டன் சுக்கா குழம்பு, போட்டி குழம்பு, நண்டு குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, தலைக்கறி குழம்பு, இஞ்சி எலும்புச் சாறு, ரசம், தயிர், மோர், நன்னாரி சர்பத், தேன் குல்கண்டு ஸ்வீட் பீடா... இம்புட்டும் மூன்றரை அடி இலையில் அழகாய் அடுக்கி வைத்தால் அந்த நாள் எப்படியிருக்கும்?
வாய் படிக்கும் போதே வயிறு அனைத்து அயிட்டங்களையும் அன்புடன் வரவேற்க தயாராகிறதா...?
ஆம் எனில், சேலம் மாவட்டம் வாழாப்பாடி பைபாசில் முத்தம்பட்டி எனும் ஊரில் உள்ள ‘பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை' உணவகத்துக்கு வண்டியை நேராக விடுங்கள். திகட்ட திகட்ட கறிவிருந்து அளிக்கும் ஹ்ப்ப்ட்டல்களின் புது வரவே 'பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை'.
வெளிப்புறம் வாத்து, கோழி, முயல் எல்லாம் மேய்ந்து கொண்டிருக்க, குழந்தைகளுக்கு பலூன் ஷுட்டிங் விளையாட்டு கார்னர் ஒரு புறமிருக்க, புறா, குருவிகளின் கீச்சு கீச்சு சப்தங்களுக்கு மத்தியில் அமைதி நிலவ அமைக்கப்பட்டிக்கும் குடிலே, பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை ஹோட்டல்.
இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உணவகத்தில் மதியவிருந்து உண்ண, முந்தின நாளே முன்பதிவு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 40 பேருக்கு மட்டுமே காரசார விருந்து அளிக்கப்படுவதால், முந்துபவங்களுக்கே முன்னுரிமை என்ற பார்மூலாவில் இயங்கிறகு இவ்வுணகம்.
பாண்டிச்சேரி, கடலூரில் இருந்து கடல் மீன்கள், திருவண்ணாமலையில் இருந்து தலை வாழை என பார்த்து பார்த்து அனைத்தையும் பக்குவமாய் செய்து வருகிறார் ஹோட்டலின் நிறுவனர் + செப் + சர்வரான சிலம்பரசன். ஆம், உணவகத்தின் ஆல் இன் ஆல் அழகுராஜா அவர். படித்தது கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ., எம்.பில். பிடித்ததும் அதுவே.
கல்லூரியில் படிக்கும் போதே, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு பரிமாற ஆட்களை அனுப்பும் பார்ட் டைம் வேலை செய்து வந்துள்ளார். படித்து முடித்தவுடன் சென்னையில் இயங்கும் மாமாவின் ரெஸ்ட்ரான்ட்டில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பின்னே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊரிலே சொந்தமாய் உணவகத்தை தொடங்கினார் சிலம்பரசன்.
“ஆக்சுவல்லா, நான் பத்தாவது பெயில். தொடர்ந்து இரண்டு வருஷம் தேர்வு எழுதி எழுதி தோற்று போனேன். கூட இருந்த பிரெண்ட்ஸ் எல்லாருமே அடுத்தக் கட்டத்தை நோக்கி போயிட்டாங்க. நாம இப்படி ஆகிட்டோமே என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படிச்சேன். முதலில் இருந்தே குக்கிங்கில் ஆர்வம். அதனால, கேட்டரிங் கோர்சை தேர்ந்தெடுத்தேன். சில ஆண்டுகள் சென்னையில் வேலை பார்த்த அனுபவம் பிளஸ் சொந்தமா ஒரு உணவகம், அதுவும் மக்களின் மனதை திருப்திப்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கியதே இந்த உணவகம்.
சில உணவகங்களில் சாப்பாடு பிரமாதமாக இருக்கும். ஆனால் அமர்ந்து சாப்பிடும் சூழல் மனசுக்கு நெருக்கமாக இருக்காது. அதனாலே, குழந்தைகள் விரும்பும் சூழலாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைத்தேன்,” எனும் அவர் கையில் இருந்த சேமிப்புடன் வட்டிக்கு பணம் வாங்கி உணவகத்தை தொடங்கியுள்ளார்.
வாழாப்பாடி பகுதியில் சிறந்த உணவகங்களே இல்லாதது இவருக்கு பிளஸ்ஸாகி போக, தொடங்கி முதல் மாதமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் முதலீட்டை தாண்டி கடன் பெருகி, ஹோட்டல் வியாபாரமே இல்லாமல் போனது. முதலீடும் கடன், இப்போது அதற்கு மேலும் கடன் என்ற நிலையில் துவண்ட ஹோட்டலை மீட்டெடுத்தது 499 ரூபாய் ‘காரச் சார கறி விருந்து’ ஐடியா.
அத்தனை அயிட்டங்களையும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காரச் சார கறி விருந்தை அறிமுகம் படுத்தினோம். எல்லா பதார்த்தமும் அன்லிமிடட் கிடையாது. ஆனால், ருசித்து சாப்பிட்டு மீண்டும் வேண்டும் என்பவர்களுக்கு மறுப்பது கிடையாது. ‘போதும்’னு சொல்றது சாப்பாட்டை மட்டும் தான். அதனால, விருந்தினர்கள் போதும் என்று சொல்லும் வரை நாங்களும் விடுவதில்லை. இந்த வகை சாப்பாட்டை அறிமுகப்படுத்திய பின்னர் சிலம்பரசனின் ஹோட்டலுக்கு க்யூ கட்டி வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர்.
தலைக்கறி வேணாம், மூளை வறுவல் வேண்டாம் என்பவர்களுக்கு, சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கனு இலையில் வைத்துவிடுவோம். காரச்சார விருந்துக்கு ஏற்ற வகையில் 3.5 அடி நீள தலைவாழை இலையில் உணவை பரிமாறுகின்றனர். புதுமண தம்பதியினர் என்றால் அவர்களுக்கு ‘கப்பில் இலை’. ஒரே இலையிலே இருவருக்கும் உணவு பரிமாறுகின்றனர்.
உணவகத்தின் முக்கிய ஸ்பெஷல், மசாலாக்கள் அனைத்தும் வீட்டு பக்குவத்தில் அவர்களே அரைக்கின்றனர். செயற்கை நெடி வாடைக்கு இடமளிக்கமால் பார்த்து கொள்ளும் சிலம்பரசனின், பக்குவத்திலே பதார்த்தங்கள் தயாராகின்றன. வந்தவர்கள் வயிறு நிறைந்து எழுகையில், செரிமானவிப்பான்களாக ஜவ்வு மிட்டாய், கல்கோனா, கமரு கட்டு, ஆரஞ்சு மிட்டாய், சுடமிட்டாய் என அது ஒரு தனி லிஸ்ட் வைத்துள்ளனர்.
“சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும். வயிற்றுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது. கூடவே, உணவகத்தின் சூழல் மனதையும் நிறைவாக்கனும். அவ்வளவு தாங்க. மக்கள் வேறு எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க,” என்கிறார் பாப் அப் சிலம்பரசன்.