சாம்சங் அறிமுகப்படுத்திய கிரெடிட் கார்ட் - பயன்கள் என்ன? எப்படிப் பெறுவது?
விசா பிராண்ட் பேமெண்ட் கொண்டுள்ளது இந்த கார்ட்.
உலகம் முழுவதும் மிக பிரபலமான எலக்ட்ரானிக் நிறுவனமாக அறியப்படுகிறது சாம்சங். இந்நிறுவனம் அண்மையில் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதன் சேவை இந்தியாவிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கிரெடிட் கார்டை பயனர்கள் பெறுவது எப்படி? மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இதன் பலன்கள் என்னென்ன? போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது சாம்சங். ஸ்மார்ட்போன், மொபைல் போன், லேப்டாப், டிவி, டேப்லேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்த சூழலில் முற்றிலும் மாறாக கிரெடிட் கார்டை இப்போது சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பேமெண்ட் கார்ட் தொழில்துறையில் சாம்சங் களம் கண்டுள்ளது. இதற்காக மின்னணு முறையில் பண பரிமாற்ற சேவையை வழங்கி வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘விசா’-வுடன் இணைந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் கிரெடிட் கார்ட் சேவையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. என்ன ஆப்பிளின் சேவை இந்தியாவில் இல்லை. ஆனால், சாம்சங் இந்த சேவையை இந்தியாவில் வழங்குவது கூடுதல் சிறப்பு.
சந்தையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் சாம்சங் கிரெடிட் கார்டில் அப்படி என்ன சிறப்பு?
சாம்சங் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மொத்தம் இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, விசா Signature மற்றும் விசா Infinite. வருடாந்திர கட்டணம் தொடங்கி ஆபர்கள் மற்றும் பலன்கள் என இரண்டு கார்டுகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சிக்நேச்சர் கார்டுக்கு வருடாந்திர கட்டணம் ரூ.500 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்திற்கு மேல் ஒரு ஆண்டில் செலவு செய்தால் அந்த கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவே Infinite கார்டுக்கு வருடாந்திர கட்டணம் ரூ.5000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சத்திற்கு மேல் ஒரு ஆண்டில் செலவு செய்தால் அந்த கட்டணத்தில் தள்ளுபடி என தெரிகிறது.
பலன்கள் மற்றும் சலுகைகள் என்ன?
>சாம்சங் புராடெக்ட் மற்றும் சேவைகளுக்கு 10 சதவீதம் கேஷபேக் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இஎம்ஐ மற்றும் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்துமாம்.
>இந்த கேஷ்பேக் சிக்நேச்சர் கார்டுக்கு மாதம் ரூ.2500 என்றும், ஆண்டுக்கு ரூ.10,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>அதுவே Infinite கார்டுக்கு மாதம் ரூ.5000 என்றும், ஆண்டுக்கு ரூ.20,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>இந்த கார்டை கொண்டு சாம்சங் அல்லாத பிற பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பயன்படுத்தினால் அதற்கு எட்ஜ் ரிவார்ட் பாயிண்ட்கள் வழங்கப்பப்படுகிறது. அது உள்நாடு மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளின் அடிப்படையில் மாறுகிறது.
>விமான நிலைய Lounge அக்செஸ் கூட இந்த கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு உள்ளது.
>இது தவிர எரிபொருள் பயன்பாட்டுக்கு 1 சதவீத தள்ளுபடியும் உள்ளது. அதிகபட்சமாக ரூ.500 வரையில் பயனர்கள் இந்த தள்ளுபடியை பெற முடியும்.
>மேலும் வரவேற்பு சலுகையாக பயனர்களுக்கு எட்ஜ் ரிவார்ட் பாயிண்ட்ஸ் வழங்குகிறது சாம்சங்.
இந்த கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கென பிரத்யேக தளம் உள்ளது. பயனர்கள் அதன் மூலம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள பயனர்கள் ‘Notify Me’ ஆப்ஷனில் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பின்கோடு போன்றவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். சாம்சங் ஷாப் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் பயனர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலெர்ட்: கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இருந்தாலும் இதுவும் கடன் தான். அதனால் கிரேடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அல்லது பெற எண்ணுபவர்கள் தான் அதற்கு முழு பொறுப்பாளர்கள். அதனால் அதை பயன்படுத்துவதில் கவனம் மிகவும் அவசியம்.
மலிவு விலையில் லேப்டாப்; 4ஜி சிம் கார்ட் - Jiobook-இன் சிறப்பம்சம், விலை என்ன?
Edited by Induja Raghunathan