எரியா தெருவிளக்குப் பிரச்சனையை தீர்க்க ஒளிக் காலணிகளை உருவாக்கிய பள்ளி மாணவர்கள்!
நம் தெருவில் தெரு விளக்கு எரியவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்? எரியா விளக்கை பார்க்கும்பொழுது பொலம்பிவிட்டு தெருவை தாண்டியதும் மறந்து விடுவோம் அல்லது அடுத்தக்கட்டமாக மாநகராட்சியில் புகார் அளிப்போம். ஆனால் இங்கு 9ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் அதற்கான மாற்றுவழியை கண்டுபிடித்து உள்ளனர்.
திருத்தணியில் உள்ள இவர்களது கிராமத்தில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட புச்சிரெட்டி பள்ளி அரசுப் பள்ளியில் படிக்கும் ஆகாஷ்வரன் மற்றும் பார்த்திபன் என்னும் 14 வயது சிறுவர்கள் ’இ-சிலிப்பர்’-ஐ கண்டுபிடித்துள்ளனர். அதாவது இக்காலணியை போட்டுக்கொண்டு நடந்தால் செருப்பில் இருந்து ஒளி வெளிச்சம் ஏற்படுகிறது. இதன் மூலம் பாதையை தெளிவாக பார்க்க முடியும் என தி ஹிந்து-விற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர் இச்சிறுவர்கள்.
“எங்கள் கிராமத்தில் தெருவிளக்கு வசதி கிடையாது, இதனால் இரவு நேரங்களில் சில விபத்துகள் ஏற்படுகிறது அதைத் தவிர்க்கும் நோக்கில் இதை உருவாக்கினோம். இருட்டான சாலையில் இச்செருப்பை அணிந்து வந்தால் அதில் இருந்து வெளி வரும் ஒளியைக்கண்டு வாகனங்கள் வேகத்தை குறைப்பார்கள்,” என்கிறார் பார்த்திபன்.
புனித ஜோசப் இந்திய உயர் நிலைப் பள்ளி நடத்திய தென்னிந்திய மாநில அறிவியல் விஞ்ஞானி கண்காட்சி 2019 அவர்களின் இந்த தயாரிப்பை வெளியிட்டுள்ளனர் இவர்கள்.
“காலணிகளுக்கு கீழே பைஜோ கிரஸ்டல் தட்டுகள் மின்னனு சுற்றுடன் இணைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நடக்கும்பொழுது காலணிகளுக்கு கீழே அழுத்தம் ஏற்பட்டு மின் காந்த சக்தி உருவாகி காலணிகளில் ஒளி எழுப்புகிறது,” என விளக்குகிறார் ஆகாஷ்வரன்.
இது வெளிச்சம் தருவதோடு மட்டுமல்லாமல் இதில் கைப்பேசியை ரீசார்ஜ் செய்யும் வசதியையும் இணைத்துள்ளனர் இவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் அதற்கு தங்கள் பள்ளியும் நல்ல ஊக்கத்தை தருவதாகவும் தெரிவிக்கின்றனர் இச்சிறுவர்கள்.
இந்தக் கண்டுபிடிப்பு மட்டுமின்றி வயதானவர்களுக்கு உதவும் வகையில் “பல்நோக்கு நடை குச்சி: மற்றும் தண்டவாளங்களைத் தாண்ட ’க்ளைடிங் பிளாட்ஃபாரம்’ ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தையும் தங்களின் சொந்த நிதியில் இருந்து உருவாக்குகின்றனர்.
“மக்களுக்கு உதவும் நோக்கில் பல தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்து உருவாக்க வேண்டும்,” என்ற லட்சியத்தோடு இருக்கிறார் ஆகாஷ்வரன்.
700 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளியில் பல மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் முதல் முறையாக தங்கள் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் கண்டுபிடிப்பு இந்த அறிவியல் கண்காட்சியில் காட்சியளிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் அப்பள்ளி ஆசரியர் தர்மலிங்கம்.
தகவல் உதவி: தி ஹிந்து