சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைகிறது!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருபதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம், காஞ்சி மாவட்டத்தில் உள்ள பரந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய விமான நிலையம் அமைக்கப்பட இந்த இடம் மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
சென்னை நகருக்கான விமான நிலையம் தாம்பரம் அருகே உள்ள மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை நகரின் இரண்டாவது விமான நிலையில், சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் கிராமத்தில் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, சென்னை அருகே புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளதாக தெரிகிறது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்ட பரந்தூர் மற்றும் மாமண்டூர் ஆகிய இரண்டு இடங்களைத் தேர்வு செய்து, விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு சமர்பித்ததாக, தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள பிரத்யேக செய்தியை அடிப்படையாகக் கொண்டு தி நியூஸ் மினிட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து விமானநிலைய ஆணைய அதிகாரிகள் இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மாமண்டூர் அருகே நீர்நிலை இருப்பதால், அந்த இடம் அத்தனை ஏற்றதாகக் கருதப்படவில்லை என தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தூர் இடம் பொருத்தமாக இருப்பதாக கருதப்படுவதால், இதற்கான அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திற்குத் தேவையான நிலப்பரப்பில், 50 சதவீதம் மட்டுமே அரசு வசம் இருப்பதால் எஞ்சிய இடத்தை கையகப்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் சென்னையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் இருந்து நகருக்கு வர 1.30 மணி நேரம் ஆகும்.
பரந்தூர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் இருந்து, விமான நிலையத்திற்காக 4,700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில், விமான நிலையம் கட்டப்பட பெரிய அளவில் எந்த தடையும் இருக்காது என தெரிய வந்துள்ளது.
இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான தொழிநுட்ப சாத்தியம் அறியும் ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. இடம் இறுதி செய்யப்பட்ட பிறகு தேவையான அனுமதி அனைத்தும் வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் இணைந்து மேற்கொள்ளப்படும் முறையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்