தென்காசியில் செமி கண்டக்டர் வடிவமைப்பு திட்டம் - ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு அதிரடி அறிவிப்பு!
தென் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதியான தென்காசியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது.
தென் தமிழ்நாட்டின் சிறிய பகுதியான தென்காசியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது.
தென்காசியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் பிரிவின் தலைவர் அனந்தன் அய்யாசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்திக்கு, ஜோஹோ நிறுவனர், தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அதிரடியான பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அனந்தன் தனது சோசியல் மீடியா பதிவில்,
“தென்காசியில் எங்கள் கூட்டணி வெற்றி பெற முழு மனதுடன் பாடுபடுவேன். எங்கள் பகுதியில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு வர நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்,” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு,
“தென்காசியில் குறைக்கடத்தி வடிவமைப்பு திட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தத் துறையில் ஆனந்தனின் நிபுணத்துவம் நிகரற்றது, மேலும் இந்த கிராமப்புறத்தில் மேம்பட்ட சிப் வடிவமைப்பை உருவாக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம்,” எனக்கூறியுள்ளார்.
யார் இந்த அனந்தன் அய்யாசாமி?
தென்காசி அனந்தன் என்றும் அழைக்கப்படும் அனந்தன் அய்யாசாமி, செமி கண்டக்டர் நிபுணராக இருந்து வழக்கறிஞராக மாறியவர். அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், சொந்த ஊரான தென்காசிக்கு சேவையாற்றும் நோக்குடன் வேலையை ராஜினாமா செய்தார். இவர், என்ஐடி திருச்சி மற்றும் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி (ஏஎஸ்யு) ஆகியவற்றில் செமிகண்டக்டர் வடிவமைப்பில் காப்புரிமை பெற்றுள்ளார்.
செமி கண்டக்டர் வடிவமைப்பு:
Zoho தனது முதல் கிராமப்புற அலுவலகத்தை 2011 இல் மத்தலம்பாறையில் ஆறு ஊழியர்களுடன் திறந்து, இப்போது 500 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங்கின் ஒரு பிரிவையும் கொண்டுள்ளது, இதன் மூலம் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்று ஊழியர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் செமி கண்டக்டர் சுற்றுச்சூழலில் வடிமைப்பு மையம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. சமீபத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பங்களை உருவாக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த Qualcomm Inc, ரூ.177.27 கோடி முதலீட்டில் சென்னையில் தனது வடிவமைப்பு மையத்தைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக தென்காசியில் செமி கண்டக்டர் வடிவமைப்பு மையத்தை திறக்க முயற்சித்து வருவதாக ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.