50 மில்லியன் டவுன்லோட்கள்: கூகுள் பிளே ஸ்டோர் இந்தியாவில் முதல் இடத்தில் Meesho ஆப்!
20 மில்லியன் ஆன்லைன் ஆர்டர்களை கடந்து அபார வளர்ச்சி!
சாப்ட் பேங்கிலிருந்து 300 மில்லியன் டாலர் சுற்று திரட்டிய நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் இந்தியாவில் Meesho ஆப் முதலிடம் பிடித்திருக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகள் போன்ற வழக்கமான ஆப்களை கடந்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘மீஷோ’. தற்போது ஆண்ட்ராய்டில் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது இந்த ஆப்.
ஃபேஸ்புக் ஆதரவு ஸ்டார்ட்அப் தளமாக இது ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும், இதன் வளர்ச்சி தனியாகவே இருந்தது. தொற்றுநோய் காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அதாவது, மார்ச் 2021ல் 20 மில்லியன் ஆன்லைன் ஆர்டர்களை கடந்தது இந்த நிறுவனம். அதுவே 2020 மார்ச் மாதத்தில் மூன்று மில்லியன் என்ற அளவிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மீஷோ இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விடித் ஆட்ரி,
“இன்று, மீஷோவில் 13 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் தொழில்முனைவோர் உள்ளனர், அவர்கள் 100K + சப்ளையர்கள் மூலமாக 4,800+ நகரங்கள் / கிராமங்களில் உள்ள 50 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்றுள்ளனர். எங்கள் மாத பரிவர்த்தனை தொழில் முனைவோர் கடந்த 12 மாதங்களில் 10X வளர்ந்துள்ளனர்," என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் இலக்கு, இ-காமர்ஸ் வணிகத்தை இந்தியாவில் உள்ள 100 மில்லியன் சிறு வணிகர்களுக்குக் கொண்டு சென்று, அவர்களை சிறந்த வருமானத்தை ஈட்ட உதவ வைக்க வேண்டும் என்பது தான்.
இதற்கிடையே, பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு 2019ல் 700 மில்லியன் டாலர்களிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சாப்ட் பேங்கைத் தவிர, மீஷோவின் தற்போதைய முதலீட்டாளர்களான புரோசஸ் வென்ச்சர்ஸ், ஃபேஸ்புக், ஷன்வே கேபிடல், வென்ச்சர் ஹைவே, மற்றும் நோல்வுட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றின் பங்களிப்பும் இந்த ஆண்டுகளில் கிடைத்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.
ஃபேஷன் மற்றும் ஆபரணப் பொருட்கள், வீடு மற்றும் சமையலறை அத்தியாவசியப் பொருட்கள், அழகு மற்றும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 650+ பிரிவுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான தயாரிப்புகளை மீஷோ நிறுவனம் விநியோகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சி காரணமாக தற்போது, சமூக வர்த்தக பிரிவில் முன்னணியில் உள்ள DealShare, Glowroad, Shop101, Mall91, Bulbul போன்ற பிற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. சமூக வர்த்தகத்திற்கான ஆசிய சந்தைகளில் முன்னணி நாடுகளில் இந்தியா முன்னிலை வகித்து வரும் நிலையில் இதுபோன்ற நிறுவனங்களின் வளர்ச்சி தொழில்துறையில் புதிய சாதனைகளை நிகழ்த்த வழிவகுக்கிறது.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: மலையரசு