91 வயதிலும் சமூக நலனில் பங்களிக்க முடியும் என நிரூபித்த சமூக ஆர்வலர்!
கிராமப்புறங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் இவர்.
நம்மில் பலர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதை நம் நெருங்கிய உறவுகளுடன் நிம்மதியாக நேரத்தை கழிக்கும் காலகட்டம் என்றே கருதுவோம். மேலும் சிலர் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவதற்குக் கிடைக்கும் நேரமாகவும் சுதந்திரமாகவும் கருதுவார்கள்.
ஆனால் 91 வயதான ஓய்வுபெற்ற மரியாதைக்குரிய ராணுவ கேப்டன் லேக் ராஜ் ஷர்மாவிற்கோ பணி ஓய்வு என்பது ஒரு புதிய தொடக்கமாகவே மாறியுள்ளது.
அவரது வயதை ஒத்த பலரைப் போல் இல்லாமல் ஷர்மா ஓய்வு பெற்ற பிறகு காளான் சாகுபடியில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தை ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான உணா மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கினார்.
காளான் வளர்ப்பு மூலம் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் விவசாயிகள் நல்ல வருவாய் பெறவும் உதவுகிறார்.
இதற்காக ராஜ் ஷர்மா ஒவ்வொரு வாரமும் சண்டிகரில் இருந்து தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பண்ணையைப் பராமரிக்கிறார். அங்கு தங்கியிருக்கும்போது பண்ணையில் காளான்களை பேக் செய்யும் உள்ளூர் பெண்களைக் கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறார். காளான்களை வெண்மையாக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தவிர்க்க விரும்பும் ராஜ் ஷர்மா தற்போது ஆர்கானிக் காளான்களை சாகுபடி செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் சாகுபடி செய்யத் தயார் நிலையில் இருக்கும் காளான்கள் அடங்கிய 500 பைகளை வாங்கினார். தொடர்ந்து தண்ணீர் தெளித்து காளான் நன்றாக வளர்வதற்கு உகந்த வெப்பநிலையில் அவற்றை வைத்தார். ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் இறுதியாக இவரது காளான் பண்ணை லாபத்தை ஈட்டத் துவங்கியது.
ராஜ் ஷர்மா காளான் பண்ணையில் ஊக்கத்துடன் ஈடுபட்டது குறித்து ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் விவரிக்கையில்,
“நான் இந்த வணிகத்தில் லாபமோ நஷ்டமோ இன்றி செயல்படவே விரும்புகிறேன். லாப நோக்கத்திற்காக அல்ல. எந்தவித முயற்சியிலும் ஈடுபடாமல் அமைதியாக நாட்களைக் கழிப்பதில் எனக்கு விருப்பமில்லை. இத்தகைய முயற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் நஷ்டம் குறித்து சில நலம்விரும்பிகள் என்னை எச்சரித்தனர். ஆனால் இந்த சவாலை துணிந்து எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்,” என்றார்.
ஒருவர் சமூக நலனில் பங்களிக்க விரும்பினால் 90 வயதிலும் ஈடுபட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ விரும்பியதாகத் தெரிவித்தார். ”ஒருவேளை நான் எந்தவித முயற்சியில் ஈடுபடாமல் அமைதியாக வீட்டில் இருந்தால் என்னால் எப்படி நூறு வயதை எட்டமுடியும்?” என கேள்வியெழுப்புகிறார். மேலும் ’விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட உதவும் நிலையான மாதிரியை உருவாக்கவேண்டும் என்கிற என் நோக்கத்தில் தெளிவாக இருந்தேன்.
காளான் சாகுபடிக்கு சில வாரங்கள் எடுக்கும். சில மாதங்கள்கூட ஆகலாம். ஒரு பை 1.5 முதல் 2 கிலோ பட்டன் காளான்களைக் கொடுக்கும். அப்படியானால் 500 பைகள் 1,000 கிலோ காளான்களைக் கொடுக்கும் என்றார் ராஜ் ஷர்மா.
ராஜ் ஷர்மா காளான் பண்ணை முயற்சியில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் அவரது இரண்டு மகன்கள் தேவிந்தர் ஷர்மா மற்றும் சுதிரேந்தர் ஷர்மா. தேவிந்தர் விவசாயம் மற்றும் உணவுக் கொள்கை வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். சுதிரேந்தர் தண்ணீர் நிபுணர். பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இவர் தண்ணீர் பிரச்சனை குறித்து விரிவுரைகளை வழங்குகிறார் என ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.
ராஜ் ஷர்மா பண்ணை வணிகம் மட்டுமல்லாமல் சண்டிகரில் உள்ள ஒரு கல்லூரியின் நிர்வாகத் துறையில் பணியாற்றியுள்ளார். அத்துடன் மருத்துவமனைக் கழிவு மேலாண்மை தொடர்பான சிக்கலுக்கு தீர்வுகாணும் செயல்பாடுகளிலும் உலர் கழிப்பறைகள், சூரிய வெப்ப அடுப்புகள், பயோகேஸ் ஆலை போன்றவற்றிற்கான தொழில்நுட்பத்தை அணுகும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள அரசு சாரா நிறுவனமான ’எனர்ஜி என்விரான்மெண்ட் க்ரூப்’ நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுகிறார்.
கட்டுரை : THINK CHANGE INDIA