பணி வாழ்க்கையை விட்டு மாடுகளை பராமரிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 58 வயது ஆர்வலர்!
மாடுகள் படும் துயரத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அதுல் சரின் Welfare for Animals in Goa (WAG) என்கிற தங்குமிடத்தை அமைத்து மாடுகளையும் மற்ற விலங்குகளையும் பராமரித்து வருகிறார்.
இந்தியாவில் பசுக்கள் கடவுளாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. 2021ம் ஆண்டில் உலகளவில் இந்தியாவில் அதிகபட்சமாக 305 மில்லியன் மாடுகள் இருப்பதாக ஸ்டாடிஸ்டிகா அறிக்கை தெரிவிக்கிறது. இதில், சுமார் 5 மில்லியன் மாடுகள் பராமரிப்பாரின்றி கைவிடப்பட்டு சுற்றித் திரிவதாக லைவ்ஸ்டாக் சென்சஸ் சுட்டிக்காட்டுகிறது.
அதுல் சரின் பத்தாண்டுகளுக்கு முன்பு கோவாவிற்கு மாற்றலானார். அங்கு பல மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதைப் பார்த்தார். அவற்றைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துள்ளது. அதில் ஒரு மாட்டிற்கு உடலில் போதிய சத்து இல்லை. மூன்று கால்களுடன் தத்தித்தத்தி சென்று கொண்டிருந்தது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த அதுல் அதை மீட்க விரும்பினார். வீட்டிற்கும் எடுத்துச் சென்றார்.
“மாடுகள் புத்திசாலியானவை, அவற்றிற்கும் உணர்வுகள் இருக்கின்றன. அவற்றை முறையாகப் பராமரிக்கவேண்டும். மனிதர்களாலேயே மாடுகள் அதிகப் பிரச்சனைகளை சந்திக்கின்றன. கோவாவில் மாடுகள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது,” என்கிறார் அதுல்.
மாடுகளை மக்கள் அடித்து துன்புறுத்தினார்கள்; ஆசிட் வீசி தாக்கியுள்ளனர்; அவற்றிற்கு காயம் பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டன; அசுத்தமான தண்ணீரை குடிக்கின்றன; இப்படி மாடுகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தன. ஒரு கட்டத்தில் உதவி தேவைப்படும் மாடுகளை மீட்பதற்கு உதவி வேண்டி பலர் அதுலை அணுகியுள்ளனர்.
2001ம் ஆண்டு இறுதியில், காயம்பட்ட சுமார் 5 மாடுகளை அதுல் தனது தோட்டத்தில் பராமரித்து வந்தார். இந்த நடவடிக்கையை முறையாக ஒழுங்குபடுத்த விரும்பிய அதுல் 2005ம் ஆண்டு Welfare for Animals in Goa (WAG) நிறுவினார். மாடுகளையும் மற்ற விலங்குகளையும் மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
தங்குமிடம்
அதுல் கென்யாவிலும் யூகேவிலும் வளர்ந்தவர். சட்டம் படித்தார். பெற்றோர் ஈடுபட்ட வணிகத்தில் இணைந்துகொண்டார். யூகே-வில் ஹார்ட்வேர் மற்றும் தோட்டத்திற்குத் தேவையான பொருட்களின் வணிகம் விரிவடைவதில் பங்களித்தார். இருப்பினும் இந்த வேலையில் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
எனவே, 2001ம் ஆண்டு கோவாவிற்கு மாற்றலானார். பழைய வீடு ஒன்றை வாங்கி அதை கெஸ்ட் ஹவுஸ் ஆக்கினார். கோவாவில் வசித்தபோதுதான் மாடுகள் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதைக் கவனித்தார்.
”இந்தியாவில் வெகு சில என்ஜிஓ-க்கள் மட்டுமே மாடுகளை மீட்டு பராமரித்து வருகின்றன. பொதுமக்களும் நாய் அல்லது பூனைகளை பராமரிக்கவே விரும்புகின்றனர்,” என்கிறார்.
மாடுகளைப் பராமரிக்கவேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டிய அதுல் கால்நடை மருத்துவர், உதவியாளர்கள், மீட்பவர்கள் என 11 பேர் அடங்கிய குழுவை ஒன்று திரட்டினார்.
தற்போது WAG நாய்கள் மற்றும் பூனைகளை மீட்டு கருத்தடை செய்து பராமரிக்க ஒரு தங்குமிடம், மாடுகளுக்கு ஒரு தங்குமிடம் என இரண்டு தங்குமிடங்களை நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தன்னுடைய குழுவினருடன் தங்குமிடங்களை நிர்வகித்து வரும் அதுலுக்கு தற்போது 58 வயதாகிறது. சியோலிம் பகுதியில் உள்ள WAG தங்குமிடத்தில் தற்போது 60 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாடுகள் முழுமையாக குணமடைந்ததும் கோசாலைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவற்றிற்கு உணவளித்து பராமரிக்கப்படுகிறது.
WAG தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நாய்கள் பூனைமகள், மாடுகள் என 16,000 விலங்குகளை மீட்டு மறுவாழ்வு அளித்திருப்பதாக அதுல் குறிப்பிடுகிறார். இவரது குழுவினர் நாள் ஒன்றிற்கு சுமார் 3 மாடுகளை மீட்கின்றனர்.
மாடுகளுக்கு உதவி
மாடுகளைப் பாதுகாத்து பராமரிக்கும் இந்தத் தங்குமிடத்தில் ஆரோக்கியமான, சமச்சீர் உணவும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த என்ஜிஓ வடக்கு கோவாவின் முதல் பயோகேஸ் ஆலையை நிறுவியுள்ளது. இதன் மூலம் மாட்டு சாணம் சமையல் எரிவாயுவாக மாற்றப்படுகிறது.
இதுதவிர சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு விலங்குகளின் வேதனை புரியவேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாடுகளை ஆரோக்கியமாக வளர்த்துப் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
”இதனால் மாடுகள் இடையூறாகக் கருதப்படும் நிலையும் இறைச்சிக்காக கொல்லப்படும் அவல நிலையும் மாறும்,” என்கிறார் அதுல்.
மாடுகளை பராமரிக்கும் செலவை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அதுல் தெரிவிக்கிறார். 70 மாடுகளைப் பராமரிக்க ஒரு மாதத்திற்கு 2 லட்ச ரூபாய் தேவைப்படும் என்கிறார். நன்கொடைகள் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டும் இவரது என்ஜிஓ தற்போது இயங்கி வரும் நிலையில் அரசின் உதவி திட்டங்களுக்கும் இந்த என்ஜிஓ விண்ணப்பித்துள்ளது. விலங்குகள் மீட்கப்பட்டு, பராமரிக்கப்படுவதில் அனைவரும் தங்களால் இயன்ற வகையில் பங்களிக்கவேண்டும் என அதுல் கோரிக்கை முன்வைக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா