'தென்னாப்ரிக்க பெண்ணுக்கு 10 குழந்தைகள் பிறக்கவே இல்லை' - பொய் செய்தியால் மனநல சிகிச்சை!
போலி தகவலை சொல்லி நிதி திரட்டிய பெண்!
இந்த மாதத் தொடக்கத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தென்னாப்பிரிக்க பெண் ஒருவர் தெரிவித்திருந்தார். ஜோன்னஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்த கோசியம் தாமரா சித்தோல் என்கிற பெண் தான் அப்படி தெரிவித்திருந்தார்.
37 வயதான அந்தப் பெண்மணி சொல்லிய அந்த செய்தி உலகெங்கிலும் வைரலானது. தென் ஆப்ரிக்காவின் தெம்பிசா நகரத்தில் வசிக்கும் இந்த சித்தோல் மற்றும் அவரின் கணவர் டெபோஹோ சோடெட்சி தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்ற நிலையில், ஒருநாள் இவர்கள் தேவாலயம் செல்லும்போது ப்ரிடோரியா நியூஸின் ஆசிரியர் ராம்பேடி என்பவர் அறிமுகமாகி இருக்கிறார்.
அவர் இந்த தம்பதியிடம் நேர்காணல் செய்தபோது தங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறக்கவிருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், ப்ரிட்டோரியா நியூஸ் ஜூன் 8ம் தேதி இந்த தம்பதிக்கு 10 குழந்தைகள் பிறந்ததாக சித்தோல் கணவர் டெபோஹோ சோடெட்சி கூறியதாக செய்தி வெளியிட்டது.
இதையடுத்து மற்ற செய்தி நிறுவனங்களும் இந்த செய்திகளை வெளியிட்டன. உடனே இது வைரலாக அவர்களது குழந்தைகளுக்காக நன்கொடைகள் பெருகத் தொடங்கின.
அதேநேரம், 10 குழந்தைகள் எந்த மருத்துவமனையில் பிறந்தன என்று ப்ரிடோரியா நியூஸ் தெரிவிக்காததால் கவுடெங் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் தங்கள் மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கவில்லை என்று சொல்ல, இந்த விவகாரத்தில் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
விரைவில், ஒரே கர்ப்பத்தில் 10 குழந்தைகள் பிறந்ததன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது.
பிறப்புக்கான எந்த ஆதாரத்தையும் அந்த மாகாண அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. மேலும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் படங்கள் அல்லது வீடியோக்கள் பொதுவில் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு, சித்தோலைக் காணவில்லை என்று சோடெட்சி அறிவித்தார், மேலும் நன்கொடைகளை நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இது சந்தேகத்தை வலுப்படுத்த மாகாண அரசு விசாரணை நடத்தியது.
பின்னர், சமூக ஆர்வலர்கள் சித்தோல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அவரிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தினர். உண்மையில், மருத்துவப் பரிசோதனைகளில் சித்தோல் அண்மையில் கர்ப்பமாக கூட இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சித்தோலுக்கு மனநல சிகிச்சை அளித்து அவரை கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள்.
மேலும் செய்தியை வெளியிட ப்ரிடோரியா நியூஸ் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தகவல் உதவி: பிபிசி | தமிழில்: மலையரசு