மாலி அதிசியம்: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற 25 வயது பெண்!
கின்னஸ் சாதனையில் இடம்பெற போகும் மாலி பெண்!
ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அதிசியம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் ஒரே நேரத்தில் உயிர் பிழைத்த ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தது இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளது.
இந்த அதிசியம் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் தான் நடந்துள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹலிமா சிஸ்ஸி. 25 வயதாகும் இவர், சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் அவரின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது, முதலில் 7 குழந்தைகள் வயிற்றில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர். இத்தனை குழந்தைகள் வயிற்றில் இருக்கும் தகவல் அப்போதே பெரும் பரவலாக அந்நாட்டில் பேசப்பட்டது.
மேலும், அப்போதே இளம்பெண் ஹலிமாவுக்கு தேவைப்படும் சிகிச்சை முறையாக வழங்க மாலி அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு சார்பில் மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி மொராக்கோ நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் இளம்பெண் ஹலிமா. அவருக்கு துணையாக அரசு சார்பில் மாலி நாட்டின் அரசு மருத்துவர் ஒருவரும், மொரோக்கோ அனுப்பப்பட்டார். அதன்படி அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று ஹலிமாவுக்கு பிரசவ வலி ஏற்பட மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் எல்லோரும் 7 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மேலாக 9 குழந்தைகள் பிறந்தன. இது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. பிறந்த 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆகும்.
முன்னதாக வயிற்றில் இத்தனை குழந்தைகள் இருந்ததால் மருத்துவர்கள், ஹலிமாவின் உடல்நிலை குறித்து கவலை அடைந்திருந்தனர். அதேபோல், பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் உயிர் பிழைக்க வேண்டும் என்றும் நினைத்த அவர்கள், அறுவைச்சிகிச்சை முறையில் பிரசவம் பார்த்து தாய், சேய் அனைவரையும் நல்லபடியாக பிழைக்க வைத்துள்ளதனார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மாலி சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டா சிபி,
“ஐந்து சிறுமிகளும் நான்கு சிறுவர்களும், அவர்களின் தாயும், அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு எங்களது நன்றிகள். அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்புவர்," என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆம், அமெரிக்க நாடியா சுலேமான் என்பவர் இதற்கு முன் அதிகப்படியாக 8 குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தார். அதனால் அவரிடம் இருந்த கின்னஸ் சாதனை தற்போது சிஸ்ஸிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.