Stock News: பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 800+ புள்ளிகள் சரிவு!
இந்திய பங்குச் சந்தையில் திடீரென கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய பங்குச் சந்தையில் திடீரென கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.30) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 464.22 புள்ளிகள் சரிந்து 85,107.63 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 133.85 புள்ளிகள் சரிந்து 26,045.10 ஆக இருந்தது.
கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த இந்தியப் பங்குச் சந்தைகளில் இந்த வார வர்த்தகம் ரெட் அலர்ட்டுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 840.23 புள்ளிகள் (0.98%) சரிந்து 84,731.62 ஆகவும், நிஃப்டி 239.10 புள்ளிகள் (0.91%) சரிந்து 25,939.85 ஆகவும்இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் சாதகமான தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், ஜப்பானின் அரசியல் சூழலும், புதிய ஆட்சி நிலவரமும் அந்நாட்டு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் கலவையான போக்கு நிலவினாலும் கூட, ஜப்பான் சூழலால் ஆசியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருவது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடு வெகுவாக குறைந்திருப்பதும் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக கூறுகின்றனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல்
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
விப்ரோ
டைட்டன்
இந்துஸ்தான் யூனிலீவர்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபின் சர்வீஸ்
கோடக் மஹிந்திரா
ஐடிசி
பவர் கிரிட் கார்ப்.
இன்ஃபோசிஸ்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து ரூ.83.75 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan