படிப்புக்காக சிஇஓ பொறுப்பை துறந்த மாதம் 1 கோடி சம்பாதித்த 12 வயது ‘பொம்மை நாயகி’யின் கதை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 11 வயது சிஇஓ சிறுமி பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக தனது 12-வது பிறந்தநாளில் ஓய்வு பெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பொம்மை தயாரிப்பில் பிரபலமடைந்த 'Pixie's fidgets ' 'பிக்ஸிஃபிட்ஜெட்ஸ்' நிறுவனத்தின் சி.இ.ஓ.வான 12 வயதான 'பிக்ஸி கர்ட்டிஸ்' (Pixie Curtis) கல்வியில் கவனம் செலுத்துவதற்காக தனது பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தக நிறுவனப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துவிட்டார். இதனையடுத்து, அவர் தனது பிறந்தநாளையும் ஓய்வுநாளையும் ஒன்றாகக் கொண்டாடினார்.
நாம் சேட்டைகளில் கவனம் செலுத்தும் பெரும்பாலான குழந்தைகளைத்தான் பார்த்திருக்கிறோம், கதைகளில் கேட்டிருக்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த 12 வயது சிறுமி பிக்ஸி கர்ட்டிஸ் இந்த சிறு வயதிலேயே தனது பொம்மை தயாரிப்பு நிறுவனமான பிக்ஸி ஃபிட்ஜெட்ஸின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
இந்த வர்த்தகத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களை வருவாயாக ஈட்டி வந்தபோதும், நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று தன் கல்வியைத் தொடர முடிவெடுத்துள்ளார். இந்த சிறிய வயதில் என்ன முதிர்ச்சி? என்ன அறிவு? என்ன முன்னேற்றம்? - இப்படி இவரைப் பார்த்து ஆஸ்திரேலியாவே மூக்கின் மேல் விரல் வைத்துள்ளது.
பல மில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியம்!
கர்டிஸின் தொழில்முனைவோர் பயணம் 2021ம் ஆண்டில் இளமைப் பருவத்தில் தொடங்கியது. அவரும் அவரது தாயார் ராக்ஸி ஜாசென்கோவும் இணைந்து பிக்ஸி’ஸ் ஃபிட்ஜெட்ஸை நிறுவினர். ஆரம்பத்தில் போ-க்களை (Bows) விற்பனை செய்த அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கு (fidget spinner) முன்னோடியாக இருந்தனர். இது பல மில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்துக்கு வழிவகுத்தது.
2023-ல் கர்டிஸ் மாதந்தோறும் $133,000 (தோராயமாக ரூ.1,09,40,546) சம்பாதித்தார்.
அவரது வணிக சாதனைகள் உச்சத்தில் இருந்தபோதிலும், இந்த அதிசயச் சிறுமி தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இவரது தாயார் ராக்ஸி ஜேசன்கோதான் பிக்ஸிக்கு கல்வியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தியதோடு பிறந்த தினத்தையும் ஓய்வு தினத்தையும் ஒருங்கே கொண்டாட அறிவுறுத்தினார்.
இந்த பிறந்த நாள் / ஓய்வு நாள் நிகழ்வு ஒரு கவர்ச்சியான விவகாரமாக அமைந்தது. விருந்தினர்கள் ஆடம்பர ஆஸ்திரேலிய அழகு பிராண்டான MCoBeauty ஸ்பான்சர் செய்யப்பட்ட குட்டி பைகளைப் பெற்றனர். இதன் மதிப்பு ஒவ்வொன்றும் $50-க்கு மேல். கர்டிஸ் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் காட்சிகளையும், இந்த தோல் பராமரிப்பு நிரப்பப்பட்ட பைகளையும் பகிர்ந்து கொண்டார். அங்கு அவர் தனது செழுமையான வாழ்க்கை முறையை தனது 1,40,000 ஃபாலோயர்களுக்கும் காட்சிப்படுத்தினார்.
வாழ்த்தும் விமர்சனமும்
இருப்பினும், கர்டிஸின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் இவ்வளவு இளம் வயதிலேயே ஓய்வு பெறுவதற்கான அவரது முடிவு ஆகியவை கலவையான எதிர்வினைகளை ஈர்த்துள்ளன. சில சமூக ஊடக பயனர்கள், அவர் தனது குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
வயது வந்தோருக்கான தயாரிப்புகளை இந்த 12 வயது சிறுமிக்கு, அவரது தாயார் அளித்ததையும், குறிப்பாக சிறுமி கர்ட்டிஸின் 10-வது பிறந்தநாளில் அவரது தாயால் பரிசாக வழங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் பற்றியும், இத்தகைய முதிர்ந்த வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டுகளாகக் காட்டி லேசாக விமர்சிக்கின்றனர். மற்றவர்கள் அவரது தொழில்முனைவோர் மனப்பான்மையையும் சாதனைகளையும் கொண்டாடுகிறார்கள். அவருடைய சாதனைகளுக்கு தங்கள் பாராட்டுக்களை வெளிப்படுத்துகிறார்கள்.
கர்டிஸ் தனது வெற்றிகரமான தொழில்முனைவில் இருந்து பின்வாங்கி பள்ளியில் மீண்டும் கவனம் செலுத்துகையில், அவரது கதை நம் காலத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பை முன்வைக்கிறது.
குழந்தைகளான கர்ட்டிஸ் போன்ற சிறுமிகள், பெரியவர்கள் செய்யும் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் ஓர் உலகம் என்பது குழந்தைப் பருவத்துக்கும், முன்கூட்டியே ஈடுபடக்கூடிய தொழில்முனைவுக்கும் இடையிலான சமநிலை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
எப்படியிருந்தாலும் கர்ட்டிஸ் போன்ற சுட்டீஸ் வாழ்க்கை, பெண் குழந்தைகளை வெறுக்கும் சமூகங்களுக்கு ஒரு சவுக்கடி எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.
19 வயதில் 1 கோடி ரூபாய்க்கு சாக்லெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் இளைஞர்!
Edited by Induja Raghunathan