ஜலோர் கிராமத்தில் தொடங்கி, இன்று 20 கோடி ரூபாய் வருவாய் காணும் ஊதுவத்தி நிறுவனத்தின் கதை!
1200 சதுர அடியில் துவங்கப்பட்டு, இன்று 20 கோடி ரூபாய் வருவாயில், பல வெளிநாடுகளுக்கு ஊதுவத்திகள் ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
’சாமுண்டி அகர்பத்திகள்’ 2010ல் 1200 சதுர அடியில் துவங்கப்பட்டு, இன்று 20 கோடி வருவாயில், பல வெளிநாடுகளுக்கு ஊதுபத்திகள் ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
கண்கள் திறந்த நிலையில் பெரிய கனவுகள் காணும் தைரியம் சிறிய ஊர்களில் உள்ளவர்களுக்கு நிறைய உண்டு. கான்திலால் பர்மரின் அண்ணன் ராஜஸ்தானில் உள்ள ஜலோர் கிராமத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள பெங்களூருவிற்கு இடம் மாறினார். அவர்களது தந்தையின் நண்பருடன் ஒரு ஊதுபத்தி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது, காண்டிலாலின் கனவுகளுக்கு சிறகுகள் முளைக்கத் துவங்கியது.
"எனது அண்ணன் என் அப்பாவின் நண்பரிடம் வேலை செய்வதற்காக பெங்களூருவிற்கு மாறினார். நான் அப்போது ஜலோரில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளிப்படிப்பை முடித்து நானும் என் அண்ணனுக்கு உதவ பெங்களூரு வந்தேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும், என்றாவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தோம்," என்கிறார் தற்போது 40 வயதாகும் கான்திலால் பர்மர்.
துவக்கம்
கான்திலாலின் அண்ணன் முதலில் ஒரு சுழலும் அச்சகத்தில், ஊதுபத்திகள் அட்டைகள் மேல் வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களை அச்சடிக்கும் வேலையில் இருந்தார். பிறகு 2003ல் இரண்டு சகோதரர்களும் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஊதுபத்தி தயாரிக்கும் மூல பொருட்களை வர்த்தகம் செய்யத் துவங்கினார்கள்.
"ஊதுபத்தி தயாரிக்க மூலப் பொருட்களாக இருக்கும் வாசனை திரவியங்கள், அதை பேக்கேஜ் செய்ய உதவும் பொருட்கள் மற்றும் சில பொருட்களை வர்த்தகம் செய்தோம். தொடர்ந்து ஏழு வருடங்கள் வர்த்தகம் செய்த பிறகு, சொந்தமாக உற்பத்தி சாலை துவக்கி நாங்களே உற்பத்தியை துவக்கினோம்.
2009ல் சொந்த சேமிப்பை முதலீட்டாக போட்டு, தங்கள் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, கான்திலால் 1200 சதுர அடியில் 15 லட்சத்தில் ஊதுவத்தி தயாரிக்கும் நிறுவனத்தை 15 ஊழியர்கள் கொண்டு முதலில் சிறிய அளவில் துவங்கினர்.
வீட்டிலேயே சிறிய முதலீட்டில் ஊதுபத்திகளை எளிதில் தயாரிக்க முடியும். ஆனால் வியாபாரத்தை பெருக்குவதற்கு அது ஒரு தடையாக இருக்கும் என்கிறார் அவர்.
"எங்களுக்கு நல்ல பெயர் இருந்தும், நிறைய தொடர்புகள் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் ஆர்டர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. வியாபாரம் துவங்கி முதல் வருடம் முழுக்க மிகவும் கஷ்ட்டப்பட்டோம். பிறகு எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது," என்கிறார் கான்திலால்.
நிலையான மிதமான வளர்ச்சி
கடினமான முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாக 2012ல் 320 விநியோகஸ்தர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. வரவேற்பைக் கண்டு, 8000 சதுர அடி கொண்ட இரண்டாவது உற்பத்தி சாலையை கான்திலால் தைரியமாக நிறுவினார்.
"ஒரே பிரிவில் இருந்து அனைத்து ஆர்டர்களை பூர்த்தி செய்வது கடினமாக இருந்தது. மூலப் பொருட்களை வைக்கவே இடம் இல்லை. வியாபாரம் பெருகவே நாங்கள் வளர ஆரம்பித்தோம். அதனால் தொழிலை விரிவுப்படுத்தி துறையில் ஒருவித தாக்கத்தை உண்டு செய்ய நாங்கள் நினைத்தோம்,” என்கிறார்.
நிறுவனம் மெதுவாக வளர்ந்து 50 தொழிலாளர்கள், 20 விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து தங்கள் தயாரிப்புகளை விற்க ஆரம்பித்தது.
சாமுண்டி அகர்பத்தி நிறுவனத்தை கான்திலால் எம்.எஸ்.எம்.ஈ. திட்டத்தின் கீழ் 2012ல் பதிவு செய்தார். முன்றாவது ஆண்டில் ஊதுவத்தி தயாரிப்புகளில் முதல் இடம் பிடித்த சாமுண்டி அகர்பத்திகள் இன்று ஆண்டுக்கு 20 கோடி வருவாய் பதிவு செய்கிறது.
மூலப் பொருட்களான மரத் தூளை அகமதாபாத்திலிருந்து கொண்டு வருகிறார்கள். ஜாஸ் தூள் மற்றும் மூங்கில் போன்ற மூலப் பொருட்களை வியட்நாம் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. மற்ற மூலப் பொருட்கள் ஜெய்ப்பூர், மும்பை போன்ற இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
தற்போது உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய சந்தைகளிலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படுகின்றன. 70 தொழிலாளர்களும் 50 விற்பனையாளர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.
மலேசியா, மொரிஷியஸ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய வெளிநாடுகளுக்கும் ஏஜெண்டுகள் கொண்டு பெயரில்லாமல் ஏற்றுமதி செய்கிறது. ஊதுபத்தியில் இருந்து தூபம், தூபக் கூம்புகள், மசாலா ஊதுவத்திகள், மலர்கள் மனம் கொண்ட தூபங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர்.
போட்டி மற்றும் சவால்கள்
கடனுக்கு சரக்கு கொடுப்பது தான் இந்தத் துறையின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் கான்திலால்.
"ஆரம்ப காலத்தில் நீண்ட நாட்களுக்கு கடன் கொடுத்து காத்திருப்பது மிகக் கடினமாக இருந்தது. ஆனால் தொழில் வளர வளர, 7 நாட்கள், 15 நாட்கள் அல்லது 21 நாட்கள் போன்ற குறிப்பிட்ட காலத்திற்கு கடன் கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு சலுகைகளும் வழங்கினோம்."
இந்த ஊதுபத்தி தொழிலின் மதிப்பு இந்தியாவில் தற்போது 3000 கோடியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தரமான பொருள்களை குறைந்த விலையில் விற்பதன் மூலம் தன்னுடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களிடம் இருந்து தனித்து இருப்பதாக கான்திலால் நம்புகிறார்.
எதிர்காலத் திட்டங்கள்
கான்திலால் தொடர்ந்து பெரிய கனவுகள் காண்கிறார். தற்போது விநியோகஸ்தர்கள் மூலம் வியாபாரம் நடத்தும் கான்திலால், விரைவில் பிக் பஜார், டீ மார்ட், ரிலையன்ஸ் போன்ற சில்லறை வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்வதை எதிர்காலத் திட்டமாக வைத்திருக்கிறார். மேலும் கூடுதலாக அவரது சொந்த ஊரான ஜலோரில் ஒரு அலுவலகம் திறக்கும் பணியில் இருக்கிறார், அதன் மூலன் அந்த பகுதிகளில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளார்.
கட்டுரையாளர் : பலக் அகர்வால் | தமிழில் : கெளதம் தவமணி