Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அன்று வீடுவீடாக சைக்கிளில் விற்பனை ஆன Badshah மசாலா; இன்று ரூ.154 கோடி மதிப்பு நிறுவனமான கதை!

1958-ம் ஆண்டு ஜவஹர்லால் ஜம்னாதாஸ் ஜவேரி தொடங்கிய மசாலா வணிகம் இன்று 450 விநியோகஸ்தர்கள் அடங்கிய நெட்வொர்க்குடன் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 154 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ளது.

அன்று வீடுவீடாக சைக்கிளில் விற்பனை ஆன Badshah மசாலா; இன்று ரூ.154 கோடி மதிப்பு நிறுவனமான கதை!

Wednesday February 02, 2022 , 3 min Read

90-களில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் Badshah Masala மிகவும் பிரபலம். இந்த மசாலா விளம்பரத்தை சமீபத்தில் பலர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த மசாலா பிராண்ட் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மசாலா பெயர் மக்களிடையே பிரபலம் என்றாலும் இதன் பின்னணியில் இருந்தவரின் பெயர் பலருக்கு பரிச்சயமிருக்காது.

இரண்டாம் தலைமுறை தொழில்முனைவர் மற்றும் Badshah Masala நிர்வாக இயக்குநர் ஹேம்ந்த் ஜவேரி, எஸ்எம்பிஸ்டோரி உரையாடலில் பங்கேற்றார். இந்த பாரம்பரிய பிராண்ட் இத்தனை ஆண்டுகளாக மாறிவரும் சந்தை தேவைக்கேற்ப செயல்பட்டது குறித்தும் 2020-2021 நிதியாண்டில் 154 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்தது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

1

ஹேமந்த் ஜவேரி, நிர்வாக இயக்குநர், Badshah Masala

வணிகம் சிறிது – வாய்ப்புகள் பெரிது

Badshah Masala 1958ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. கரம் மசாலா, டீ மசாலா ஆகியவற்றுடன் ஜவஹர்லால் ஜம்னாதாஸ் ஜவேரி இந்த வணிகத்தைத் தொடங்கினார்

”சிகரெட் விற்பனை செய்யப்பட்டும் டின் கேன்களை என் அப்பா சேகரிப்பார். அவற்றை சுத்தம் செய்து, லேபிள்களை அகற்றிவிடுவார்.  சுத்தமான அந்த கேன்களில் மசாலாக்களை பேக் செய்து அருகிலிருக்கும் பகுதிகளில் விற்பனை செய்வார்,” என்கிறார் ஹேம்ந்த்.

அவர் மேலும் கூறும்போது,

”தரமான தயாரிப்புகள் வெற்றி பெற அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. மசாலாக்கள் விரைவில் பிரபலமாகின,” என்றார்.

மும்பை புறநகர் பகுதியான காட்கோபரில் ஒரு சிறு தொழிற்சாலை அமைத்தார். விரைவில் குஜாராத்தின் அம்பர்கான் பகுதியில் 6,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட தொழிற்சாலையாக உருவெடுத்தது. பாவ் பாஜி மசாலா, சாட் மசாலா, சன்னா மசாலா என தயாரிப்புகளும் விரிவடைந்தன.

வணிகத்தை சிறப்பாக நடத்தி வந்த ஜவஹர்லால் ஜம்னாதாஸ் 1996-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது மகன் ஹேமந்த் வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

“கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு 1994-ம் ஆண்டு வணிகத்தில் இணைந்துகொண்டேன். வணிகத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதை அப்பாவிடமிருந்து கற்றறிந்தேன். என் அப்பா உயிரிழந்தபோது எனக்கு 23 வயது. அவரது வணிக முயற்சிகளை மென்மேலும் செழிக்க செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்கிறார் ஹேமந்த்.

ஹேமந்த் வணிகத்தில் சேர்ந்த பிறகு நிறுவனத்தின் செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார். நாடு முழுவதும் விரிவுபடுத்தினார். இன்று Badshah மசாலா 20-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 450 விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்குடன் சூப்பர்மார்க்கெட், உள்ளூர் மளிகை கடைகள் தொடங்கி சர்வதேச சந்தைகள் வரை இந்த பிராண்ட் சென்றடைந்துள்ளது.

சந்தை

Badshah மசாலா ஆறு வகைகளில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 60 எஸ்.கே.யூ-க்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 400-500 டன் என்கிற அளவில் மசாலாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் மசாலாத் துறையில் 35 சதவீதம் பங்களிப்பதாகக் குறிப்பிடும் ஹேமந்த் வசந்த் மசாலா, எவரெஸ்ட் ஃபுட்ஸ் பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மதர் ஸ்பைஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் போட்டியாளர்களாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
2

பெருந்தொற்று சமயத்தில் விற்பனை அளவு கணிசமான அளவு குறைந்ததாகத் தெரிவிக்கும் ஹேமந்த்,

“ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் மக்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்ட நிலையில் கிளவுட் கிச்சன்கள் அதிகரித்தன. இந்த சமயத்தில்தான் Badshah வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்ள, வழக்கமான பாரம்பரிய வணிக முறையைக் காட்டிலும் ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தது,” என்கிறார்.

IBEF தகவல்களின்படி, உலகளவில் மசாலாக்களை அதிகளவில் தயாரித்து, வாங்கி, ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. ISO பட்டியலிட்டுள்ள 109 வகைகளில் 75 வகைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. உலகளவில் நடைபெறும் மசாலா வர்த்தகத்தில் இந்தியா 50% பங்களிக்கிறது.

வருங்காலத் திட்டங்கள்

வணிகத்தை வழிநடத்திச் செல்வதிலோ வளர்ச்சியிலோ எந்தவித சவால்களையும் கடந்து வரவில்லை என்று கூறும் ஹேமந்த் பெருந்தொற்று பரவல் கடினமான காலகட்டமாக இருந்தது என்கிறார்.

Badshah மசாலாவை ’ரெடி டு ஈட்’ மற்றும் ஊறுகாய் பிரிவில் கொண்டு வரவேண்டும் என்பதே அவரது திட்டம். ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வகைகளிலும் வாடிக்கையாளர்களைக் கவர விரும்புவதாக ஹேமந்த் தெரிவிக்கிறார்.

“தயாரிப்பு செயல்முறைகளை நவீனப்படுத்தி தானியங்கல் முறையை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே எங்கள் திட்டம். இந்திய சுவையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற ஆர்வம் என்றுமே குறையாது,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா