Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'பாக்ஸர்னா கல்யாணம் நடக்காது; படிப்பில் கவனம் செலுத்து' - தடைகளைத் தகர்த்த கலைவாணி!

பாக்ஸர் கலைவாணியின் பயணம்!

'பாக்ஸர்னா கல்யாணம் நடக்காது; படிப்பில் கவனம் செலுத்து' - தடைகளைத் தகர்த்த கலைவாணி!

Friday January 29, 2021 , 2 min Read

விளையாட்டுத்துறையில் பெண்கள் சாதிக்க சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். இந்த சமூகம் பெண்களை விளையாட்டுத்துறையில் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.


இந்த டிஜிட்டல் யுகத்திலும் பெண்கள் சாதிக்க சமூகம் ஏராளமான தடைகளை விதித்து விடுகிறது. பெண் என்பதாலும், திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் அவர்களை சாதிக்கவிடாமல் முட்டைக்கட்டைபோட்டு தடுக்க பார்க்கிறது.


ஆனால், இதையெல்லாம் உடைத்து எறிந்து வெளியில் வரும் பெண்கள் தலைப்புச் செய்திகளாகின்றனர். சாதனை அரசிகளாக வலம் வருகின்றனர். அப்படித்தான் தன்னைச் சுற்றி பின்னப்பட்ட தடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து சாதனை படைத்திருக்கிறார் கலைவாணி.


சென்னையில் 1999ம் ஆண்டு பிறந்தவர் கலைவாணி. அப்பா ஸ்ரீனிவாசன் குத்துச்சண்டை வீரராக இருந்தவர். அவரின் சகோதரரும் தேசிய அளவிலான குத்துச் சண்டை வீரர். தினமும் தனது சகோதரருக்கு, தந்தை குத்துச் சண்டை பயிற்சி அளிப்பதை பார்த்த கலைவாணிக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் எழுந்தது. தன்னுடைய விருப்பத்தை தந்தையிடம் சொல்ல அவர் மகளுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.


இதற்கு கலைவாணிக்கு குடும்பம் ஆதரவளித்தாலும், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் முட்டுக்கட்டை போட்டனர். ‘படிப்பில் கவனம் செலுத்து; குத்துச்சண்டையெல்லாம் வேண்டாம்’ என அவரது ஆசிரியர்கள் வலியுறுத்தினர். அதேபோல அவரின் உறவினர்கள் சிலர், கலைவாணியின் தந்தையிடம் மகளுக்கு குத்துச் சண்டை பயிற்சி அளிப்பதைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். காரணம் இப்படி பாக்ஸராக இருந்தால், கலைவாணிக்கு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறி, வேண்டாம் எனத் தடுத்தனர்.


எப்போதும் இது போன்ற சமூக அழுத்தங்களை புறந்தள்ளி எழுந்தவர்களே வரலாறு படைக்கின்றனர் என்பதற்கு ஏற்றமாதிரி, இதையெல்லாம் கடக்க நினைத்தார் கலைவாணி. இருப்பினும் அவருக்கான பிரச்னை வேறொன்றாகவும் இருந்தது. ஒரு விளையாட்டு வீராங்கனைக்குத் தேவையான நவீன ஜிம் வசதி, கட்டமைப்பு, நவீன பயிற்சி, மற்றும் முறையான உணவு இவை எல்லாம் இருந்திருக்கவில்லை. பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி, தனது மகளுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கினார் தந்தை.

கலைவாணி

இதையடுத்து சப்-ஜூனியர் (16 வயதுக்குட்பட்ட) அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதங்கங்களை வென்றார் கலைவாணி. அவரின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் எண்ணத்தையும் இந்த பதக்கங்கள் மாற்றின. வெற்றியின் மூலம் சமூகத்தின் கேள்விக்கு பதிலடிக் கொடுத்தார்.

அதேபோல 2019ஆம் ஆண்டு நடந்த சீனியர் அளவிலான தேசிய சாம்பியன்ஷிப்பின். இறுதிப் போட்டியில் பஞ்சாபின் மஞ்சு ராணியிடம் தோல்வியுற்றார் கலைவாணி. இருப்பினும் இந்தியாவின் புகழ்பெற்ற, ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிடமிருந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார் கலைவாணி.

அந்த வெற்றி கலைவாணிக்கு பல வாய்ப்புகளைத் தேடிக்கொடுத்தது. இத்தாலியைச் சேர்ந்த ரஃபேலே பெர்காமாஸ்கோ கலைவாணிக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஜே.எஸ்.எடபள்யு இன்ஸ்பையர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் நவீனப் பயிற்சி வசதிகளும் கிடைத்தன.


2019ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் நேபாளத்தின் மஹார்ஜன் லலிதாவை 48 கிலோ எடைப் பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது, மிகப்பெரிய சாதனையை படைத்து, எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

boxer kalaivani

கலைவாணி தனது லட்சியங்கள் குறித்து பேசும்போது,

“காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும், பின் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் கனவு. விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிக்க சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். இந்த சமூகம் பெண்களை விளையாட்டுத்துறையில் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். நான் ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக உருவானதற்கு தனது தந்தையும், சகோதரருமே காரணம்,” என்கிறார் கலைவாணி.

தகவல் உதவி: Firstpost | தொகுப்பு: மலையரசு