'நான் கருவிலேயே போராடத் தொடங்கி விட்டேன்'- முதல் தலைமுறை வழக்கறிஞர் கிருபா முனுசாமி!
உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்யும் முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூக நீதி சார்ந்த வழக்குகளை தொடுத்து மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
லிட்டில் மிஸ் சன்ஷைன் (Little Miss Sunshine) என்றொரு படத்தில், ‘என் வாழ்வில் போராட்டங்கள் இல்லாத வருடங்கள் எல்லாம் வீணான வருடங்கள்...’ என்று ஒரு கலைஞர் சொல்வதாக ஒரு வசனம் வரும். இங்கே சிலருக்கு அது இயல்பாகவே வாழ்க்கை தத்துவமாக அமைந்து விடுகிறது.
“நான் கருவிலேயே போராடத் தொடங்கிவிட்டேன்,” என்று தொடங்கினார் கிருபா முனுசாமி.
போராட்டங்களும், அதன் நீட்சியுமே சொல்வதற்கேற்ற கதைகளாக மாறுவதால், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக சட்டப்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் கிருபாவிடம் சொல்ல கதைகள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.
பின் தங்கிய பொருளாதாரத்தோடு வாழ்ந்து வந்த பெற்றோருக்கு மூன்றாவது மகளாக பிறந்திருக்கிறார் கிருபா. அவருடைய அப்பா, கல்வி மட்டுமே மீட்பு என்பதை முழுமையாக நம்பியதனால் தன்னுடைய மூன்று பிள்ளைகளையுமே படிக்க வைப்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இப்படித் தான் தனக்கு கல்வி மீது அர்ப்பணிப்பு உண்டானதாக கிருபா சொல்கிறார்.
சேலத்தில் பிறந்து வளர்ந்த கிருபா முனுசாமி, பள்ளிப்படிப்பையும் இளநிலை பட்டத்தையும் சேலத்திலேயே முடித்திருக்கிறார். முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞராக தொடர்ந்து சட்டப்பயிற்சி செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார். சட்டப்பயிற்சி செய்து கொண்டே கிரிமினல் சட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்திருக்கிறார். ஆறு வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திருநங்கை உரிமை தொடர்பான வழக்கொன்றை கையாண்டிருக்கிறார்.
“கான்ஸ்டபிளாக செலெக்ட் ஆனவங்களை மெடிக்கல் டெஸ்டுல திருநங்கைனு தெரிய வந்ததால, டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. நங்கை 1, நங்கை 2 நு தான் அவங்களை மென்ஷன் பண்ணனும். அவங்களுக்காக வழக்கு போட்டோம். அப்போ திருநங்கைகளுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரல. இருந்தாலும், சட்டத்துல இருக்கும் சமத்துவத்திற்கான உரிமைங்குற (Right to equality) பிரிவை வெச்சு அதை பண்ணினோம்,”
எனும் கிருபா, இந்த கட்டத்தில் தான் இங்கே வழக்கறிஞர்களுக்கு இருக்கும் தேவையை உணர்ந்ததாக சொல்கிறார்.
தொடர்ந்து, பெரிய வழக்குகளை கையாள வேண்டிய நிலைமை வந்தால், பிறரை சாராமல் அதை செய்து முடிக்க வேண்டியும், சட்ட அறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டியும் உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப் பயிற்சி செய்ய சென்றிருக்கிறார். தற்போது அவர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நான்கு வருடங்களாகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் சமூக நீதிக்கு அவசியமான வழக்குகளை கையிலெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார் கிருபா.
சமூக நீதிக்கான வழக்குகள் :-
ஆதிக்க சாதியினர் உண்ட இலைகளில் குறிப்பிட்ட பழங்குடியினர் படுத்து உருளும் ‘உருளு சேவா’ எனும் வழக்கம் கர்நாடகாவின் குக்கி சுப்பிரமணி கோவியில் இருந்து வந்தது; இது உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதே போன்றதொரு வழக்கம் தமிழகத்தின் கடூரிலும் இருப்பதை கிருபா அறிந்து அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
‘அடிப்படையான மனித மாண்புக்கே எதிரான விஷயமா இந்த உருளு சேவா இருந்தது. அதற்கு எதிரா போட்ட வழக்கை பெஞ்ச் பாராட்டினாங்க. இந்த மாதிரியான வழக்குகள் நிறைய வரணும்னு சொன்னாங்க’ என்கிறார்.
சென்னை நகரம் மழைக்காலங்களிலும், வெள்ளப்பெருக்கினாலும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு தீர்வாக நகரில் இருக்கும் நீர் வடிகால் முறைகளை சரி செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறார்.
‘ஒரு வருஷம் வெள்ளம் வருது. இத்தனை பேர் சாகுறாங்க. அவங்களுக்கு இழப்பீடு தர்றாங்க. மறுபடியும் அடுத்த வருசம் வெள்ளம் வருது. மறுபடியும் இவ்வளவு பேர் சாகுறாங்க. அப்போ இங்க மனித உயிருக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுது?’ எனும் கிருபாவின் கேள்வியே அந்த வழக்கிற்கான சாரம்.
அந்த சமயத்தில் தமிழக அரசு உண்டாக்கிய நிர்பந்தத்தால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்திருக்கிறது. எனிலும், அதொரு முக்கியமான வழக்காகவே பார்க்கப்படுகிறது.
நீதித்துறை செயல்முனைவு (Judicial activism) :-
நீதித்துறை சீர்திருத்தம் நீதித்துறை செயல்முனைவின் விளைவாகவே உண்டாகும் என்கிறார் கிருபா. சாதி, வரதட்சணை கொடுமை போன்ற பல பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சமூக மாற்றம் உருவானாலும், முறையான சட்டம் வந்த பிறகு தான் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது என மேற்கோள் காட்டுகிறார்.
“எந்த சமுதாயத்தில் நீதித்துறை சீர்திருத்தம் நடந்து கொண்டே இருக்கிறதோ, அங்கே தான் ஜனநாயகம் இருக்க முடியும் என்பதை நான் நம்புறேன்,” என்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, குறிப்பா சொல்லணும்னா எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை எடுத்து நடத்த திறமையான வழக்கறிஞர்களை நாம வளர்த்தெடுக்க தவறிட்டோம்னு தான் சொல்லணும். குஜராத்ல ஒரு ஆய்வு நடந்தது.
குஜராத்ல மட்டுமே, எஸ்.சி., எஸ்.டி வழக்குகள் நடத்தப்பட்ட ஸ்பெஷல் கோர்ட்ல 90% வழக்குகள் தோற்றதற்குக் காரணம் வழக்கறிஞர்கள்தான்னு சொல்றாங்க. ஏன்னா, வழக்கறிஞர்கள் குற்றம் செய்தவரோட சாதியை சேர்ந்தவர்களா இருக்கதால, அவங்க இரண்டு பேரும் ஒண்ணாயிடறாங்க,” என்கிறார்.
கூடவே, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக ஜூனியர்களாகவே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். தனியே வழக்கை எடுத்து நடத்த தயங்குகிறார்கள். தனியே அலுவலகம் அமைத்துக் கொள்ள தேவையான பொருளாதாரம் அவர்களிடம் இல்லை. ஜூனியராகவே இருக்கும் போது கிடைக்கும் மாதச் சம்பளத்தை வைத்துக் கொண்டே வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பல திறமையான வழக்கறிஞர்களை வளர்த்தெடுக்க ‘சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு’ (Legal Initiative For Equality) என்றொரு அமைப்பை தொடங்கியிருக்கிறார் கிருபா.
சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு : -
இந்த முன்னெடுப்பு மூன்று முக்கிய குறிக்கோள்களோடு இயங்குகிறது.
1. வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்தல் - தீண்டாமைக்கு எதிரான வழக்குகள், பெண்ணுரிமை வழக்குகள், தலித் உரிமை வழக்குகள் மற்றும் பொதுவான அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாள வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
2. இலவச சட்ட உதவி - தங்கள் வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை அமர்த்த முடியாத மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்து தரப்படும்.
3. வழக்கறிஞர்களுக்கான உள்கட்டமைப்பு - வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்து, வழக்குகள் கொடுத்தாலும் கூட, அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான ஸ்பேஸ் இல்லை. ஒன்று ஜூனியராக இருக்கலாம் அல்லது தனியே ஆஃபிஸ் அமைக்கலாம். இங்கே ஒரு சுயாதீன வேலை களம் உருவாக்குவதனால், ஒரு இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்ய முடியும்.
“இதனால், பொருளாதார நெருக்கடியை பற்றி கவலைப்படமால், வழக்கில் மட்டுமே வழக்கறிஞர்கள் கவனம் செலுத்த முடியும்,” என்கிறார் கிருபா.
சட்டச்சூழலில் இருக்கும் சவால்கள் :-
சம காலத்தில் ‘மயில் கண்ணீரை வைத்து தான் இனப்பெருக்கம் செய்கிறது’, ‘மனசாட்சிப்படி தீர்ப்பெழுதுவேன்’ போன்ற அறிக்கைகளை நீதித்துறையின் பிரதிநிதிகள் வெளியிடுகிறார்கள். அறிவியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தவறான இந்த அறிக்கைகள் நீதித்துறையில் எப்படியான சவால்களை உண்டாக்குகிறது என்பது குறித்து கேட்ட போது?,
“இதுவரையிலுமே, நம் நீதித்துறையில் 90% பிராமண வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். 2012ல், எனக்கு அப்போது இருபத்தைந்து வயது தான் ஆகியிருந்தது, என்னை இண்டர்வ்யூ பண்ண உயர் நீதிமன்ற் நீதிபதிகள் ‘இவ்வளவு யங்கா இருக்கீங்க. இந்த வயசுல நீதிபதியானா உங்களால சரியான தீர்ப்புகளை கொடுக்க முடியுமா?’ன்னு கேட்குறாங்க.
அதாவது மத்தவங்களுக்கு முப்பதஞ்சு வயசு தான் லிமிட்னு இருந்தா, ரிசர்வேஷன்ல வர்றவங்களுக்கு நாற்பது வயசை ஏஜ் லிமிட்டா நினைக்குற மனநிலை இங்க இருக்கு.ட்ரயல் கோர்ட்டுக்கே நாற்பது வயசுக்கு மேல இருக்கவங்களை தான் எடுக்குறாங்க. அவங்க, மாவட்ட நீதிபதி லெவலுக்கு கூட வர முடியாது. அதற்கு கீழ் லெவல்லயே ரிட்டயர் ஆயிடுவாங்க. இதனால, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த யாரும் உயர் நீதிமன்ற நீதிபதியா ஆக முடியாது. உயர் நீதிமன்றத்துல நீதிபதியா இருந்தா தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆக முடியும்.
இப்படி, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே நீதிபதிகளா வர்றதால, அவங்களோட தனிப்பட்ட நம்பிக்கைகள் தான் சரின்னு நெனைக்குற மனநிலை இருக்கு. மனசாட்சிப்படி தீர்ப்பு கொடுக்கணுமா? சட்டப்படி தீர்ப்பு கொடுக்கணுமா? சட்டம் சமூக நீதிக்கானதா இருக்கணுமான்னு கேட்டா சட்டம் சமூக நீதிக்கானதாகத் தான் இருக்கணும்.
“ஒரு நீதிபதி ட்ரான்ஸ்பர் ஆகி அலகாபாத்துக்கு போறார். அங்க அவருக்கு முன்னாடி இருந்தது ஒரு தலித் நீதிபதிங்குறதால கங்கையில இருந்து தண்ணி கொண்டு வந்து கோர்ட் ரூமை சுத்தம் பண்ணுறாரு. இந்த மாதிரியான விஷயங்களும், தீர்ப்புகளும், அறிக்கைகளும் சமூக நீதி பற்றிய புரிதல் இல்லாதவர்கள் நீதிபதியானதால் தான் வருது,” என்கிறார்.
இப்படியான சூழலில் தான், நீதித்துறை செயல்முனைவை வலியுறுத்துகிறது ‘சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு’. என்றாலும், இன்றைய நீதித்துறை இது போன்ற செயல்முனைவை ஆதரிக்கவில்லை என்பது நிதர்சனம். இதற்கு உதாரணமாக, நீட் தேர்வு, சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கு சாதகமாக இருக்கிறது, ஸ்டேட் போர்டு திட்டத்தில் பயிலும் மாணவர்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது என்பதை ஒரு நீதிபதிக்கு புரிய வைப்பது பெரும் காரியமாக இருக்கிறது, அதை புரிந்து கொள்ளாமல் அவர் பல வழக்குகளை தள்ளுபடி செய்கிறார்.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று போன வருடம் சொல்லிய அதே நீதிபதிகளின் அமர்வு தான் இந்த வருடம் எஸ்.சி., எஸ்.டி வன்முறை தடுப்புச் சட்டம் தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது என அதே வடிவில் ஒரு தீர்ப்பை வழங்குகிறார்கள் என பல சந்தர்ப்பங்களை விவரிக்கிறார்.
சாதியமும் ஆணாதிக்கமும் :-
இன்றைய சட்டச் சூழல் பெரிய சவாலாக இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் சாதியமும் ஆணாதிக்கமும் தனக்கு பெரிய சவாலாக இருப்பதாக விவரிக்கிறார் கிருபா.
“மைக்ரேன் தலைவலி இருப்பதால் முடியை வெட்டியிருந்தேன். ஒரு நாள், கோர்ட் ரூம்ல ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கும் போது ஜட்ஜ், எல்லார் முன்னிலையிலும் என்னைப் பார்த்து ‘உங்க ஹேர் ஸ்டைல் தான் என்னை அட்ராக்ட் பண்ணுது, உங்க ஆர்க்யூமெண்ட் இல்ல’னு சொன்னாரு. இதை எதிர்த்து நான் கேட்டப்போ ‘இப்போ பொண்ணுங்க எல்லாம் ஷார்ட்ட முடிய வெட்டிக்குறாங்க. இதை எல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன்; எனக்கு இது பிடிக்குறதில்ல’னு சொன்னார். எல்லாரும் என்னை அவர்கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க.
இன்னொரு பக்கம், நான் டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருந்தப்போ, சீனியர் வழக்கறிஞர் என்னை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகலை. ‘ஏன் சார் என்னை கூட்டிட்டு போகலை’ன்னு கேட்டப்போ, ‘ஓப்பன் ஹேர்ல இருக்க ஜூனியர்ஸை எல்லாம் நான் கூட்டிட்டு போக மாட்டேன். நீ நார்த் இண்டியன்ஸை பார்த்து காப்பி பண்ண நினைக்காத. நீ ஒரு தமிழ் பொண்ணுங்குறதை மனசுல வெச்சுக்கோ’ன்னு சொன்னார். இது என்னை மாதிரி கருப்பா இருக்க, குண்டா இருக்க பொண்ணுங்களுக்கு மட்டும் தான் நடக்கும். ஏன்னா இதே கோர்ட்ல நிறைய ஜூனியர்ஸ் பார்த்திருக்கேன். வெள்ளையா, ஒல்லியா இருப்பாங்க, ஸ்கர்ட்ஸ் எல்லாம் போட்டுட்டு வருவாங்க. விதிமுறைப்படி ஸ்கர்ட்ஸ் போடறதுக்கு அனுமதியும் இருக்கு.
”என் முகத்தை பார்த்தாலே என்னோட பேக்ரவுண்ட் தெரிஞ்சுடும். அதனால, என்னை மாதிரியான பொண்ணு பேண்ட் ஷர்ட் போட்டுட்டு போனாலே ஒரு மாதிரி பார்ப்பாங்க,” எனும் கிருபா பல முறை தீண்டாமைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகியிருக்கிறார்.
‘அவமானங்களை பளிங்கில் செதுக்குவோம்’ என்பதை தவிர வேறெந்த ஆறுதலும் சொல்லிவிட முடிவதில்லை.
முன்னெடுப்பின் பயிற்சி முகாம்கள் & நிதியுதவி :-
சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு ஏப்ரல் மாதம் நடந்த பயிற்சி முகாமில் பத்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மே மாதம் வழக்கறிஞர்களுக்கு விடுமுறை காலம் என்பதால், சென்னையில் இரண்டு பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார். பாண்டிச்சேரியில், வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்த அழைப்பு வந்திருக்கிறது. பிறகு, பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி முகாம் நடத்தக் கோரி கேட்டு வந்திருக்கின்றனர்.
சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பை தொடர்ந்து நடத்த பொருளாதார உதவி கேட்டு கிருபா ஃபேஸ்புக்கில் பதிவிட்டதை தொடர்ந்து, பண உதவி செய்ய சிலர் முன் வந்திருக்கின்றனர்.
“பெரிய பெரிய தொகை அனுப்புனவங்களை விட, ஐநூறு, இருநூறுன்னு போட்டவங்களை நெனைச்சா தான் இதோட முக்கியத்துவம் புரியுது. யுனிவர்சிட்டு ஸ்டூடன்ஸ் ஸ்காலர்ஷிப் வந்ததும் தரேன்னு சொல்லிருந்தாங்க. ஆறு மாசம் ஸ்காலர்ஷிப் கெடைக்காதப்போ அவங்க நிறைய கடன் வாங்கியிருப்பாங்க. அதையும் தாண்டி இதுக்கு தரணும்னு அவங்க நினைக்குறப்போ என் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்காங்க, இப்படி ஒரு அமைப்பிற்கான தேவையை எப்படி பார்க்குறாங்க புரியுது,” என்கிறார்.
நிதியுதவி போதுமான அளவு கிடைக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் பல வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது கிருபாவின் நம்பிக்கை. உத்திர பிரதேச, பீஹார் போன்ற மாநிலங்களில் தான் அதிகளவு குற்றங்கள் நடந்தேறுகிறது, அங்கு கல்வியறிவு விகிதமும் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதால் அது போன்ற மாநிலங்களில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்கிறார் கிருபா. இப்படி பிற மாநிலங்களிக்கு சென்று பயிற்சி முகாம் நடத்த பணம் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறது. மேலும், அமைப்பிற்கு கிடைக்கும் நிதியுதவியின் வழியே வழக்கறிஞர்களுக்கான கட்டணம் கொடுக்கப்படுவதனால், ஒடுக்கப்பட்டோருக்கு இலவச சட்ட உதவியை வழங்க முடியும் என்கிறார் கிருபா.
சமூக நீதிக்கான வழக்கறிஞர் கிருபா முனுசாமியின் பயணத்தில் அவர் சந்திக்கப் போகும் போராட்டங்களை எளிதாக சமாளிக்க அவருக்கு ஊக்கமளித்து துணை நிற்போமாக.