ஸ்ட்ராபெரி விவசாயத்தில் 6 மாதத்தில் 20லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயிகள்!
பாரம்பரிய முறையில் காய்கறிகள் பயிர் செய்து வந்த பல விவசாயிகள் ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று நன்கு படித்த இளைஞர்கள் பலரும் விவசாயத்தில் ஈடுபடுவதைப் பார்க்கமுடிகிறது. படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே நல்ல வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்கிற மனநிலை முன்பு இளைஞர்களிடையே காணப்பட்டது.
ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருகிறது. அரசாங்கமும் வங்கிகளும் புதிய விவசாய முறைகளை ஊக்குவித்து வருகிறது. இதனால் திறமை உள்ள இளைஞர்கள் ஸ்டார்ட் அப்’பில் ஈடுபட்டு நன்கு வருவாய் ஈட்டி வருகிறனர்.
உத்திர பிரதேசத்தின் மோகன்லால், கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் சிங். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியை விட்டு விலகி ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபட்டார். ஆறே மாதங்களில் இருபது லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
விவசாயியான ராஜேஷ் சிங், அவரது உறவினர் சித்தார்த் சிங் ஆகியோர் புதிய வியாபாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்து இரண்டு வாரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கின்றனர்.
இவர்கள் ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு முன்பு பாராபங்கி, புனே, இமாச்சல் போன்ற பகுதிகள் மட்டுமல்லாது நாடிங்கம் வரை பயணம் செய்து ஸ்ட்ராபெரி விவசாய முறை பற்றி விரிவான தகவல்களை சேகரித்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெரி நாற்றுக்களை நட்டார். அதற்கடுத்த மாதம் புனேவில் இருந்து 25 ஆயிரம் செடிகள் கொண்டு வந்து நர்சரி வைத்தார். ஒன்றரை மாதத்திலேயே செடிகள் தயாரானது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மூன்றரை குவிண்டால் வரை சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டினார்.
அடுத்த இரண்டு மாதத்திலேயே இருபது லட்சம் ஸ்ட்ராபெரி விற்பனைக்கு தயார்நிலையில் இருந்தது.
குளிர்ந்த பருவத்தில் வளரும் ஸ்ட்ராபெரி விவசாயத்திற்கு பாலி ஹவுஸ் தொழில்நுட்பம் சிறந்தது என்று சித்தார்த் தெரிவிக்கிறார். களைச்செடிகளில் இருந்து பயிரை பாதுகாக்க பாலி மல்சிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் பயிர்களுக்குத் தேவையான நீரை துளித்துளியாக வழங்க சொட்டு நீர் பாசன முறையைப் பின்பற்றியுள்ளார்.
ஒவ்வொரு கிலோ ஸ்ட்ராபெரியும் நானூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு மெல்ல அதிக லாபம் ஈட்டப்பட்டது. இவரது விவசாய முறையைக் கண்டு பாரம்பரிய விவசாய முறையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இவரது முறையைப் பின்பற்றத் தொடங்கினர். விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பிலும் ஆதரவளிக்கப்படுகிறது.
அதேபோல் கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலும் காய்கறிகளைப் பயிர் செய்து வந்த விவசாயிகள் ஸ்ட்ராபெரி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் கேரளாவில் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு இலவசமாக ஸ்ட்ராபெரி நாற்று வழங்கப்பட்டது. இதனால் ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.