Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அன்று நடைபாதை கடை, இன்று உலக ஏற்றுமதி: சமோசா விற்பனையில் கோடிகளை தொடும் ஹாஜா!

அன்று நடைபாதை கடை, இன்று உலக ஏற்றுமதி: சமோசா விற்பனையில் கோடிகளை தொடும் ஹாஜா!

Tuesday May 24, 2016 , 5 min Read

"

ஆறாம் வகுப்புவரை மட்டுமே படிப்பு... பெற்றோர், இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை என பெரிய குடும்பம்... வீட்டில் தயாரித்த சமோசாக்களை சென்னையில் வீதி வீதியாக விற்பதன் மூலம் சொற்ப வருமானம்... 17 வயதுவரை ஹாஜா ஃபுன்யமினின் வாழ்க்கை இப்படியாகத்தான் இருந்தது....

திருமணத்துக்குப்பிறகு ஹாஜா துணிந்து எடுத்த தொழில்முயற்சி, தனக்கு கைவந்த கலையான சமோசா தயாரிப்பை பெரிய அளவில் சந்தைப்படுத்த மனைவியின் உறுதுணையோடு மேற்கொண்ட முயற்சிகள், கைமேல் பலன் தந்து இன்று கோடிகளை தொடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இது இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சவால்களை சந்திக்கும் திறன் அனைத்தையும் வெளிப்படுத்துவதோடு இல்லாமல் கல்வி பின்புலம், குடும்பப் பொருளாதாரம் இவை எதுவுமே ஒருவரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது என்பதை வெளிக்காட்டுகிறது. 

\"image\"

image


ஹாஜாவின் ஆரம்ப நாட்கள்

சென்னை புதுப்பேட்டையில் பெரிய குடும்பத்தில் பிறந்த ஹாஜாவால் பொருளாதார காரணத்தினால் ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டிலேயே இவரது பெற்றோர் தயாரித்த சமோசாவை வீதிவீதியாக விற்பதுதான் ஹாஜாவில் வேலை. கடைகள் மற்றும் வீதிகளில் சமோசா விற்பனையை முடித்தப்பின் சில கடைகளில் உதவியாளராகவும் பணிகளை செய்தார் ஹாஜா. 

\"குடும்ப வறுமை காரணமாக 17 வயதுவரை வீட்டில் செய்துகொடுக்கும் சமோசாக்களை வீதிகளில் விற்பனை செய்வேன். அந்த நேரம் தவிர மெக்கானிக் கடையில் ஹெல்பராக, ஹோட்டல்களில் சர்வராக என பல பல சிறிய பணிகளை செய்து வருமானம் ஈட்டுவேன். நான் சம்பாதிப்பதை வீட்டுச்செலவுக்கு கொடுத்துவிடுவேன்.\" 

திருப்புமுனையாக இருந்த திருமண வாழ்க்கை

21 வயதில் ஹாஜாவுக்கு திருமணம் முடிந்தது. திருமணத்துக்குப்பின்னும் இதே நிலையில் தொடர விருப்பப்படாத ஹாஜா தனக்குத் தெரிந்த பணியை ஒரு சரியான தொழிலாக தொடங்க முடிவு செய்தார், ஆனால் அதை எப்படி செய்வது முதலீட்டிற்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார். 

\"நானும் என் மனைவியும் வீட்டிலேயே 1000 சமோசா வரை தயார் செய்து, புதுப்பேட்டையில் நடைபாதை கடை ஒன்றை போட்டு தினமும் விற்றுவந்தோம். மாதத்திற்கு சுமார் 3000-4000 ரூபாய் வரை மட்டுமே லாபம் வந்தது. ஆனால் தொழிலில் இதோடு நின்றுவிடக்கூடாது என்று நானும் என் மனைவியும் யோசித்துக்கொண்டே இருப்போம்...\" 

\"image\"

image


2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை இதே நிலைமையில் சென்றுகொண்டிருந்த தொழிலில் திருப்புமுனை வந்தது என்கிறார் ஹாஜா. 

\"நாங்கள் தயாரித்து விற்கும் சமோசாவுக்கென ஒரு தனி சுவை இருக்கும். அதை சுவைத்த சென்னையைச் சேர்ந்த பிரபல எக்ஸ்போர்ட் நிறுவன முதலாளி ஒருவர் எங்களுக்கு தினமும் 5000 சமோசா தயாரிக்கும் ஜாப் வொர்க் ஆர்டரை அளித்தார்.\"

மகிழ்ச்சியில் திளைத்த ஹாஜாவும் அவரது மனைவியும், இத்தனை பெரிய ஆர்டரை சமாளிக்கும் அளவு முதலீடும், போதிய இடவசதியும் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்தனர். வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த ஆர்டரை கைவிட மனசுமில்லாமல் முதலீட்டுக்கான வழிகளைத் தேட ஆரம்பித்தனர். நண்பர் ஒருவரது ஆலோசனையின் படி 'பாரதிய யுவ சக்தி ட்ரஸ்ட்' எனும் சுயதொழில்முனைவோருக்கு உதவி அளிக்கும் லாப நோக்கமில்லாத அமைப்பைப் பற்றி அறிந்தார் ஹாஜா. அவர்களிடம் தனது தொழிலைப் பற்றி விளக்கி நன்மதிப்பை பெற்று அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்தியன் பாங்கில் முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாய் லோன் கிடைத்ததாகக் கூறினார். 

கிடைத்த முதலீட்டைக் கொண்டு இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த ஹாஜா உதவிக்கு 4-5 ஆட்களையும் பணியமர்த்திக்கொண்டார். தயாரிக்கும் சமோசாக்கள் எக்ஸ்போர்ட் செய்யப்படுவதால் ஆர்டர் அளித்த அந்த நிறுவனமே ஹாஜா மற்றும் அவரது மனைவிக்கு 'சுகாதாரம் மற்றும் செயலாக்கம்' முறைகள் பற்றி ஒரு மாத காலம் பயிற்சி அளித்ததாக கூறினார். அதன் அடிப்படையில் நாளொன்றுக்கு 5000 சமோசாக்களை தயாரித்து மாதம் 10000 ரூபாய் லாபம் கிடைத்ததாகக் கூறினார். இந்த பணிகளோடு தாங்கள் நடத்திவந்த கடையையும் தொடர்ந்ததாக கூறினார். ஒரு வருடத்திற்கு பிறது ஜாப் வொர்க் ஆக மட்டும் இருந்த இந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் முழு விற்பனை ஆர்டராக எங்களுக்குக் கிடைத்தது. இது எங்களுக்கு உத்வேகத்தையும் தொழிலில் வளர்ச்சியும், லாபத்தையும் ஏற்படுத்தியது.

\"image\"

image


தொழிலில் ஏற்பட்ட திடீர் பின்னடைவு

எக்ஸ்போர்ட் நிறுவனத்துடனான ஆர்டர் காண்ட்ராக்ட் தீடிரென ரத்து செய்யப்பட்டது. நன்றாகச் சென்று கொண்டிருந்த தொழிலில் ஏற்பட்ட இந்த திடீர் பின்னடைவு ஹாஜவை விரக்தியடைச்செய்தது. இந்த ஆர்டருக்கான முதலீடாக வாங்கிய வங்கிக்கடன், இவர்களை நம்பியுள்ள பணியாளர்கள், இடத்துக்கான வாடகை என பல தரப்பிலிருந்தும் அழுத்தம் ஏற்பட்டது என்றார் ஹாஜா.

\"2 மாதம் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த நிலையிலும் நான் வாடகைக்கு எடுத்த இடத்தை காலி செய்யவில்லை, என்னிடம் பணிபுரிந்தோரையும் நீக்கவில்லை. எனக்கு தொழில் நன்றாக தெரியும், அப்படியிருக்க மற்றவர் மூலம் கான்ட்ராக்ட் எடுத்து விற்பதை விட நாமே ஏன் இதை மார்க்கெட் செய்து நேரடியாக வாடிக்கையாளர்களைப் பிடித்து விற்கக்கூடாது என்று யோசித்தேன். எப்படியும் நல்ல ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.\" என்றார்.

இத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தனது மனைவியின் பங்கும் உறுதுணையும் தன்னை மனம் தளராமல் தொடர்ந்து உழைக்க உத்வேகம் அளித்ததாகக் கூறி தனது மனைவியை மனதாரப் பாராட்டினார் ஹாஜா.

தொழில் வளர்ச்சி

தனது தொழிலை தானே வளர்த்தெடுக்க முடிவுசெய்து, சென்னை முழுவதும் மார்க்கெடிங் செய்யத்துவங்கினார் ஹாஜா. பிரபல மால்கள், சினிமா தியேட்டர்கள், எம்ஜிஎம். கிஷ்கிந்தா, காபி ஷாப்ஸ், பர்கர் மற்றும் ஸ்நாக் கடைகள் என்று தனக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தனது தயாரிப்பை விற்கத்துவங்கினார். போகும் இடங்களில் எல்லாம் இவரது சமோசாவின் ருசி மற்றும் தனித்துவத்தன்மைக்காக, நிலையான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். 

\"படிப்படியாக எங்கள் தயாரிப்புக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்... எனக்குள் இருந்த நம்பிக்கை விஸ்வரூபமாக பெருகியது...\" 

ஹாஜாவின் சமோசா ரெசிப்பி தனித்துவம் கொண்டது. எனவே வாடிக்கையாளர்களின் பரிந்துரையின் பேரில் கல்யாண கான்ட்ராக்ட், பல்க் ஆர்டர்ஸ் கிடைக்கத் துவங்கியது. அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.

தொழிற்சாலை அமைத்தல்

ஆர்டர்களும், வாடிக்கையாளர்களும் பெருகியதால், ஹாஜா ரெட் ஹில்ஸில் ஒரு இடத்தை எடுத்து தொழிற்சாலை அமைத்தார். சமோசா மற்றுமின்றி இதர ஸ்நாக் ஐயிடங்களான கட்லெட், பர்கர், சீஸ் பால்ஸ் என பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி \"ஹாஃபா ஃபுட்ஸ்\" என்று நிறுவனத்தை நிறுவினார். முன்பைப் போல காலை தயாரித்து மாலைக்குள் விற்றுத்தீர்கவேண்டும் என்ற நிலையை மாற்ற பதப்படுத்தும் முறைகளை கற்றுக்கொண்டு அதற்குத்தேவயான பொருட்கள், இயந்திரங்களை வாங்கி தொழிலை பெருக்கினார் ஹாஜா. சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுதும் வாடிக்கையாளர்கள் குவியத்துவங்கினர் என்று கூறினாலும் அவரது பேச்சில் நிதானமும் தன்னடக்கம் மட்டுமே தெரிகிறது. 

\"image\"

image


\"2010 ஆம் ஆண்டு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக சென்னை விமான நிலைய கிச்சனிலிருந்து எங்கள் தயாரிப்புக்கான கான்ட்ராக்ட் கிடைத்தது. அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. சுகாதாரம், தரம், சுவை என பல சோதனைகளுக்குப் பின்னரே இந்த கான்ட்ராக்ட் கிடைக்கும். நாங்கள் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்களின் நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்றே சொல்வேன்,\" என்றார் ஹாஜா.

வெற்றியின் ரகசியம்

மாதம் வெறும் 3000 ரூபாய் அளவில் வருமானம் ஈட்டிய ஹாஜாவின் நிறுவனம் 2015 இல் 1.5 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. பல பெரிய நிறுவனங்களும் ஹோட்டல்களும் இவரின் தயாரிப்புகளை வாங்கி பெரிய ப்ராண்ட் பெயர்களில் விற்பனை செய்து வருகின்றனர். 

\"எங்களது ஸ்நாக்கை கடந்த ஆண்டு ருசித்துவிட்டு மீண்டும் இந்த ஆண்டு சாப்பிட்டு பார்த்தால் அதே சுவை, தரம், அளவில் இருக்கும். இதுவே எங்கள் தயாரிப்பின் வெற்றி ரகசியம்,\" என்றார் உற்சாகமாக. 

வருடாவருடம் 30-50 லட்சம் வருமான பெருக்கம் உள்ள இந்நிறுவனத்தை மேலும் பெரிய அளவில் கொண்டுசெல்ல இலக்கு வைத்துள்ளார் ஹாஜா. வருடத்தில் 30-40 கோடி அளவு பிசினஸ் செய்யும் அளவு எக்ஸ்போர்ட் துறையில் நேரடியாக நுழைய விருப்பம் தெரிவிக்கும் ஹாஜா அதற்குத்தேவயான 5 ஏக்கர் இடம், மற்றும்10 கோடி ரூபாய் வங்கிக்கடனை எதிர்நோக்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

\"image\"

image


வீதிக்கடையிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு தொழிலை பெருக்கியுள்ள ஹாஜா இறைவனுக்கு, தனது மனைவி, பாரதிய யுவ சக்தி மற்றும் இந்தியன் வங்கிக்கு தனது நன்றிகளை தெரிவிக்கிறார். சிறந்த தொழில்முனைவர் என பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள ஹாஜா லண்டன் சென்று ப்ரின்ஸ் சார்லசையும் டோனி ப்ளேரையும் கூட சந்தித்துள்ளார். 

\"எந்த தொழிலும் தாழ்வு இல்லை... அது குப்பை அள்ளுவதானாலும் சரி... நாம் செய்யும் தொழிலை காதலித்து, பொறுமையோடு அனுகுவது மிக அவசியம். கோபமும், அவசரமும் இருந்தால் தொழிலில் முன்னேற முடியாது...\"

என்பதே தொழில்முனைவோருக்கு ஹாஜா கூறும் அறிவுரை. 

தொழிலில் ஏற்றம் வந்தவுடன் பழைய நிலையை மறவாமல் இன்றும் தனது கதையை வெளிப்படையாகச் சொல்லும் சிலரில் ஒருவராக ஹாஜா இருந்து வருகிறார். தன்னைப் போல் தொழிலில் உயர நினைக்கும் கீழ்மட்டத்திலுள்ள தொழில்முனைவோர் பலருக்கும் வழிக்காட்டியாக திகழ்ந்து ஊக்கம் அளித்துவருவது அவரது மேன்மை குணத்தையே காட்டுகிறது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

"