பார்வையற்றோர், காது கேளாதோருக்கு உதவும் சென்சர் மூக்குக் கண்ணாடி!
இந்த புதுமையான மூக்குக்கண்ணாடியில் அல்ட்ராசோனிக் சென்சார், ஒலிப்பான், வைப்ரேட்டர் மோட்டார் ஆகியவை உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல்வேறு துறைகள் மேம்பட்டு வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளும் பலனடைந்து வருகின்றனர். ஊன்றுகோல், காதுகேளாதோர் கருவி போன்றவை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெவ்வேறு வடிவங்களில் மேம்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பார்வையற்றோர்களும் காது கேளாதோரும் சுயசார்புடன் வாழ்வதையும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் எட்டாம் வகுப்பு மாணவியான பிரியாபிரதா சாஹூ மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த இவர் ஒரு புதுமையான மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கண்ணாடி பார்வையற்றோர் நடந்து செல்லும்போது வழியில் தடங்கல்கள் இருப்பதை உணர்த்தும் வகையில் சிக்னல் அனுப்பி எச்சரிக்கும்.
இந்த மாணவர் தனது புதுமையான கண்டுபிடிப்பு குறித்து ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“என்னுடைய கிராமத்தில் பார்வைத் திறன் இல்லாத முதியவர் ஒருவரை சந்தித்தேன். மற்றவர்கள் உதவியின்றி அவர் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டதைக் கண்டேன். என்னால் இயன்ற வகையில் உதவவேண்டும் என்று தீர்மானித்து என்னுடைய அறிவியல் ஆசிரியர் துஷர்காந்தி மிஷ்ரா உடன் கலந்துரையாடினேன்,” என்றார்.
பிரியாபிரதா ஜெய்ப்பூர் மாவட்டத்தின் புருஷோத்தம்பூரில் உள்ள அடங்கா என்கிற பகுதியின் பிரஹலாத் பிரம்மசாரி உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். இவரது பள்ளியில் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் இந்த மூக்குக் கண்ணாடியை உருவாக்கியுள்ளார்.
இரண்டு மாடல்களில் இந்த புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். பார்வையற்றோருக்கான முதல் மாடலில் அல்ட்ராசோனிக் சென்சார் மற்றும் ஒலிப்பான் இருக்கும். பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடலில் அல்ட்ராசோனிக் சென்சார், ஒலிப்பான் மற்றும் வைப்ரேடர் மோட்டார் இருக்கும். ’ஒடிசாபைட்ஸ்’ உடனான உரையாடலில் பிரியாபிரதா கூறுகையில்,
“நான் உருவாக்கிய மூக்குக் கண்ணாடியில் ஜிபிஎஸ் மோட்டார் மற்றும் ஸ்பீக்கரை பொருத்த விரும்புகிறேன். இதன் மூலம் இந்தக் கண்ணாடிகளை கூகுள் மேப்புடன் இணைக்க முடியும். குரல் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். ஒருவர் முகவரியை பதிவு செய்துவிட்டால் தானாக அந்த இடத்திற்கு வழிகாட்டும்,” என்றார்.
பார்வையற்றோருக்கு உதவும் வகையில் ஒரு கருவியை பள்ளி ஆய்வகத்தில் உருவாக்க விரும்பி பிரியாபிரதா தன்னைத் தொடர்பு கொண்டதாக அவரது ஆசிரியர் விவரித்தார். பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு உதவுவதில் அவர் தீவிர முனைப்புடன் இருந்தார். பள்ளியில் அதிக நேரம் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து பிராஜெக்டில் பணிபுரிந்தார் என தெரிவித்தார். பிரியாபிரதா மூக்குக்கண்ணாடியை சிறப்பாக வடிவமைப்பதற்காக சென்சாரில் இயங்கும் மோட்டார்கள் குறித்து தெரிந்துகொண்டார். இது குறித்து புத்தகங்களில் படித்தார். ஆசிரியர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டார். அடுத்தபடியாக இந்த மூக்குக்கண்ணாடிகளுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்க உள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA