தினமும் 24 கி.மீ சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 10ம் வகுப்பில் 98.5% எடுத்த மாணவி!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது ரோஷ்னி படவுரியா தனது கடின உழைப்பால் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 98.5 சதவீதம் எடுத்துள்ளார்.
‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் பழமொழி இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்பதை உணர்த்துகிறார் 15 வயது ரோஷ்னி படவுரியா.
இவர் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மத்தியப்பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னௌல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தினமும் பள்ளிக்கு 24 கி.மீட்டர் சைக்கிள் ஓட்டிச் சென்று வந்துள்ளார். இவரது மன உறுதியும் அர்ப்பணிப்பும் பொதுத் தேர்வுகளில் 98.5 சதவீதம் எடுக்க உதவியுள்ளது.
பொதுத் தேர்வில் எட்டாவது ரேங்க் எடுத்துள்ள ரோஷ்னி ஏஎன்ஐ-இடம் கூறும்போது,
“அரசாங்கம் எனக்கு மிதிவண்டி கொடுத்தது. நான் அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். நான் தினமும் நாலரை மணி நேரம் படிப்பேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் தேர்விற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நல்ல ரேங்க் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றாலும் தேர்விற்குத் தயார்படுத்திக்கொள்ள கடினமாக உழைத்ததாக ரோஷ்னி Livemint-இடம் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு தனது அப்பாவின் ஆதரவுதான் முக்கியக் காரணம் என்கிறார் ரோஷ்னி.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஷ்னியின் கடின முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவரது அப்பா புருஷோத்தம் படோரியா குறிப்பிட்டுள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ரோஷ்னி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரோஷ்னி ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் அவரது அப்பா தெரிவித்துள்ளார்.
ரோஷ்னி எட்டாம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்தார். அங்கு பேருந்து வசதி இருந்தது. அதன் பிறகு மேஹ்கானில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்தார் என்றும் அங்கு போக்குவரத்து வசதி இல்லை என்றும் ரோஷ்னியின் அப்பா பிடிஐ-இடம் தெரிவித்துள்ளார்.
“ரோஷ்னி இரண்டாண்டுகளுக்கு முன்பு மேஹ்கானில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தார். போக்குவரத்து வசயில்லாத காரணத்தால் தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வந்தார்,” என்று ரோஷ்னியின் அப்பா புருஷோத்தம் கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதே ரோஷ்னியின் கனவு. சிறப்பாகப் படித்து அந்த இலக்கை ரோஷ்னி அடையவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ரோஷ்னியின் அம்மா சரிதா படோரியா தெரிவித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA