Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

16 வயதில் சமூக சேவையைத் தொடங்கிய சிவானந்த குருகுலம் ராஜாராம் காலமானார்!

51 ஆண்டு காலம் சமூகச் சேவையில் முழு மனதாக ஈடுபட்டிருந்த சிவானந்த குருகுல பொதுச்செயலர் பத்மஸ்ரீ ராஜாராம் உடல் நலக்குறைவால் காலமானார்.

16 வயதில் சமூக சேவையைத் தொடங்கிய சிவானந்த குருகுலம் ராஜாராம் காலமானார்!

Wednesday February 19, 2020 , 2 min Read

ஆதரவற்றக் குழந்தைகள், முதியவர்களுக்கு அன்புக்கரம் நீட்டி அடைக்கலம் தரும் இடம் என்றால் தமிழகத்தில் சட்டென நினைவுக்கு வருவது சென்னையை அடுத்த காட்டான்குளத்தூரில் செயல்பட்டு வரும் சிவானந்த குருகுலம்.


வழக்கறிஞரான எஸ்.வி.ஐயரும், அவருடைய மனைவி டாக்டர் மங்களம் அம்மையாரும் எல்லா செல்வங்களும் இருந்தும் வாழ்வில் நிம்மதி இல்லை என்று சுவாமி சிவானந்த மகரிஷியிடம் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு சிவானந்த மகரிஷி ஒரு சிறிய கிராமத்தில் ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் நிறுவனத்தை நிறுவ ஆலோசனைக் கூறி இருக்கிறார்.


சிவானந்த மகரிஷியின் அருளாசியுடன் 3 ஆதரவற்ற குழந்தைகளுடன் 1945ம் ஆண்டு அனாதைக் குழந்தைகளுக்காகவும் ஏழை மாணவர்களுக்காகவும் ஆதரவற்ற முதியோருக்காகவும் ‘சிவானந்த குருகுலம்’ என்றும் ‘சிவானந்த சேவாஸ்ரமம்’ என்றும் தொடங்கினார்கள் அந்த தம்பதியினர்.

ராஜாராம்

சென்னைப் புறநகரான காட்டான்குளத்தூரில், மெயின் சாலைக்கு அருகிலேயே இன்றைக்கும் இயங்கி வருகிறது இந்த சேவாஸ்ரமம். முதுமை கொடுமை; இளமையில் வறுமை கொடுமை. முதுமையில் அன்பும் இளமையில் கல்வியும் அவசியம். ஆதரவற்றோரிடம் அன்பு, படிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி என்கிற சேவை நோக்கத்துடன் சிவானந்த குருகுலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஆரம்பப்பள்ளியாக ஆதரவற்ற குழந்தைகளுக்காக செயல்படத் தொடங்கி இன்று சிபிஎஸ்இ பள்ளியாக தரம் உயர்ந்து இருக்கிறது. பெற்றோரைத் தொடர்ந்து தனது 16வது வயதில் சமூகச் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜாராம்.


பி.காம் படித்துவிட்டு வங்கிப்பணியில் மாதம் ரூ.25,000 சம்பளம் பெற்றவர் மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் ஆலோசனையைக் கேட்டு பணத்தை நாடிச் செல்லாமல் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். தனது காதல் மனைவியான லட்சுமி அம்மாளிடம் தன்னுடைய விருப்பத்தைக் கூறி சிவானந்த குருகுல குடும்பத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளார்.


மனித மனங்களில் அன்பு வறண்டு போய் கிடப்பதன் அடையாளமே முதியோர் இல்லங்கள். முதியோர் இல்லம் என்ற ஒன்றே இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை. மேற்கத்திய கலாச்சாரத்தில் நாம் கற்றுக் கொண்ட தேவையில்லாத விஷயத்தில் இதுவும் ஒன்று.

முதியோர்களுக்கு அன்பு மட்டுமே அவர்களின் கடைசி கால எதிர்பார்ப்பு, நாங்கள் இங்கே உறவினர்களாகப் பழகுகிறோம். குருகுலத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருமே என்னுடைய குழந்தைகள் தான். அவர்களுக்கு நல்ல கல்வி, தங்கமிடத்தோடு அன்பையும் சேர்த்துத் தருகிறோம். அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதும் எங்களது கடமை என்று கொள்கை வகுத்து வாழ்ந்தவர் ராஜாராம்.

ஆதரவற்றக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள், முதியவர்கள் என வாழ்வில் சோகங்களை மட்டுமே சுமந்து நிற்பவர்களுக்கு ஆதரவாய் இருந்தவர் ராஜாராம். பண்டிகைகளை இவர்களுக்கு நன்கொடை அளித்து மட்டுமல்ல இவர்களோடு சேர்ந்து அன்பு, பாசத்தை பகிர்ந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர்.

”வீடு, சமூகம் என இரண்டாகப் பிரித்து வாழ்வதில் உடன்பாடில்லை. வீட்டையே சமூகமாகவும் சமூக சேவையையே வீடாகவும் பார்க்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை, இந்த என் கடமைகளைச் செவ்வனே செய்யவேண்டும். ஏனென்றால் இது என் வேலை அல்ல. கடவுள் எனக்குக் கொடுத்த வேலை,’’ என்று அடிக்கடி சொல்லும் ராஜாராம், இப்போது இல்லை.
ராஜாராம்

குருகுல மாணவர்களுடன் ராஜாராம், படஉதவி : தி இந்து

பேச்சில் பரிவு, கருணை, சிரித்த முகம், வெள்ளந்தியான பேச்சு என்று குருகுலத்தில் இருந்த அனைவரையும் அன்பால் கட்டிப் போட்டிருந்த 67 வயது ராஜாராம், கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி 18.2.2020ம் ஆண்டு காலமானார்.


அவரது இழப்பு ஆசிரம மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் துன்பத்தைத் தந்துள்ளது. சமூக சேவைக்கான தமிழக ஐகானாக இருந்த ராஜாராம் இயக்கி வந்த சிவானந்த குருகுலம் 75ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.


பிரபலங்கள் பலரும் வந்து ஆதரவற்றக் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் ஊக்கம் தர காரணமாக இருந்த பத்மஸ்ரீ ராஜாராமின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


கட்டுரையாளர் : கஜலெட்சுமி