மாணவர்கள் டூ தன்னார்வலர்கள்: 11,000 பேரின் துயர் போக்கிய தொண்டு நிறுவனம்!
கொரோனாவை சமாளிக்க ரூ.40 லட்சம் நிதி திரட்டிய சாதனை!
தொற்றுநோய்களின் போது பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவ ரூ.40 லட்சத்திற்கு மேல் திரட்டி இருக்கிறது மாணவர்களால் நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. ’SPARK' என்ற அந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் பிட்ஸ் பிலானி மாணவர் ஆகர்ஷ் ஷிராஃப் என்பவரின் முயற்சியால் 2018ல் உதயமானது.
தன்னார்வலரான இந்த மாணவர், தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க ஊக்கமாக இருந்தது அவரின் பெற்றோர்கள் தான். அவரது பெற்றோர் சுகாதாரத் துறையில் லாபமற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இது கொடுத்த ஊக்கம் காரணமாக, சமூகத்திற்கு எதாவது செய்ய தானும் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த ஆகர்ஷ் ஷிராஃப், அதனை தனது வகுப்பு தோழர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்படி உருவானது தான் ’SPARK' அமைப்பு. இளைஞர்களை ஒன்றிணைப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். தற்போது கர்நாடகாவில் 11 இடங்களில் செயல்பட்டு ஆதரவற்றவர்கள் மற்றும் வறியவர்களுக்காக இந்த அமைப்பு செயல்படுகிறது.
கொரோனா பாதிப்புக்கு முன் SPARK அமைப்பு நான்கு திட்டங்களை மேற்கொண்டது. அனாதை இல்லங்களில் (திட்டம் வினீட்டா) கல்வி கற்பித்தல், நூலகங்களை உருவாக்குதல் மற்றும் வாசிப்பு பழக்கத்தை (நூலக செறிவூட்டல் மற்றும் மேம்பாடு அல்லது லீட்) ஊக்குவித்தல், மொழியியல் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் (திட்டம் உத்சாஹா) மற்றும் பொது பேசல், விவாதம் மற்றும் உச்சரிப்பு (திட்டம் உல்லாசா) ஆகியவை ஆகும்.
இந்த முயற்சிகள் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறுகிறார் SPARK-ன் தலைவரான ஆகர்ஷ். மேலும், தற்போது இருக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் தனது மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ’பிராஜெக்ட் Q' நிறைவேற்ற முடிந்தது என்கிறார்.
இந்த முயற்சியின் நோக்கம், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலைகளின் போது மொத்தம் ரூ.40 லட்சத்தை திரட்டி இருக்கிறது இந்த தொண்டு நிறுவனம். என்றாலும், முதல் அலையின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், அப்போது கற்றல் வசதிகள் இல்லாத குழந்தைகள் மீது இந்த அமைப்பு கூடுதல் கவனம் செலுத்தியது. அதேநேரம், அமைப்பின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒத்த எண்ணம் கொண்ட மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்தது SPARK.
அதன்படி, உதிஷ்டா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 575 ரேஷன் கிட்கள் மற்றும் 2,000 கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகளை கர்நாடகாவின் ராஜாஜிநகர், இந்திராநகர் மற்றும் டோம்லூர் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு வழங்கியது. இதுபோன்ற உதவிகள் மட்டுமில்லாமல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1.8 லட்சம் உதவித்தொகையை வழங்கியது SPARK. பள்ளி கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த தொகையை கொடுத்தது.
முதல் அலைக்கு மத்தியில், SPARK அமைப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் திரட்டியது.
இது 11,000 பயனாளிகளுக்கு நேரடியாக உதவியது. ஒரு வருடம் கழித்து, இது இரண்டாவது அலையின் போது ’பிராஜெக்ட் Q 2.0'ஐ தொடங்கிய இந்த அமைப்பு இதன் மூலமாக தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்க அத்தியாவசிய ஆதரவை வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தியது. அந்த வகையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்சிமீட்டர்கள், பிபிஇ கிட் கருவிகள், சானிடைசர்கள், அறுவைசிகிச்சை கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை SPARK கொள்முதல் செய்து விநியோகித்தது.
இதுபோன்ற பல உதவிகளை மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த தன்னார்வ தொண்டு அமைப்பு செய்துள்ளது.
இந்த அமைப்பு உருவானது குறித்து பேசும் ஜிண்டால் குளோபல் சட்ட பள்ளியின் மாணவர் துணைத் தலைவர் அகர்ஷன் மஜும்தார்,
“20 நபர்களுடன் தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பு, இப்போது 600க்கும் மேற்பட்ட மாணவர் தன்னார்வலர்களாக மாறும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தன்னார்வலர்கள் நம்பகத்தன்மையை வளர்ப்பதில் பணியாற்றி வருகின்றனர்,
இது தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதி திரட்ட உதவிய முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். முதலில் ஆரம்பித்தபோது இது எளிதான சாதனையாக இருக்கவில்லை. ஜனவரி 2020-ல், நாங்கள் ஒரு நிதி திரட்டலைத் தொடங்கினோம். முதலில் எங்களால் ரூ.15,000 மட்டுமே திரட்ட முடிந்தது. அப்போது நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.
நாங்கள் மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் படித்து, நம்பகத்தன்மையை எவ்வாறு உருவாக்குவது மற்றும் வருடாந்திர அறிக்கைகள், தாக்க மதிப்பீட்டு கட்டமைப்புகள் மற்றும் திட்ட அறிக்கைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புரிந்துகொண்டோம், இது மாணவர்களாகிய எங்களுக்கு கடினமாக இருந்தது. என்றாலும், இந்த கற்றல் தொற்றுநோய்களின் போது அதிக நிதி திரட்ட உதவியது. என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையில், இந்த அமைப்பை நிறுவிய ஆகர்ஷ் ஷிராஃப், 2021 டயானா விருதையும் பெற்றுள்ளார். இந்த விருது அவர்களின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணியை அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. வேல்ஸின் இளவரசி டயானா ஸ்பென்சரின் நினைவாக நிறுவப்பட்ட டயானா விருது,
“இளைஞர்களின் எதிர்காலத்தில் சாதகமான மாற்றத்தை ஊக்குவிக்கும்,” உலகெங்கிலும் உள்ள இளம் மனிதாபிமானிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.