யூடியூப் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் வளர்ச்சியும், வெற்றியும் கண்ட ‘ஹனி செந்தில்’
ரியல் எஸ்டேட் துறையில் பலர் போட்டிப்போட தனக்கான ஒரு தனிவழியை, யூடியூப் மூலம் மார்க்கெட்டிங்காக பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றமும், வாடிக்கையாளர்களையும் பெற்ற ‘ஹனி செந்தில்’
ரியல் எஸ்டேட் என்பது ஒற்றை வார்த்தையாக இருந்தாலும் அதில் பலவகையான பிரிவுகள் இருக்கிறது. தவிரவும் அதிக முதலீடு தேவைப்படும் தொழிலில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது மிகவும் சவாலானது. அதில் தனக்கான இடத்தை கண்டறிவதற்கே பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார் 'ஹனி’ செந்தில்.
தொழிலில் தனி முத்திரை பதிக்க அதிகம் காலம் ஆகும். ஆனால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல அதிகக் காலம் தேவைப்படாது என்பதை சொல்லாமல் செய்டு காட்டியிருக்கிறார் செந்தில்.
தொடக்கத்தில் சென்னையில் இருந்து ரியல் எஸ்டேட் தொழிலை நடத்திவந்தாலும், தற்போது திருச்சியில் இருந்து தொழிலை நடத்திவருகிறார். படிப்பு ஆரம்பகாலம், தொழிலில் பட்ட கஷ்டங்கள், வீழ்ச்சிகள் மற்றும் தற்போதைய நிலை என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகாலம்
திண்டுக்கலில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங்கை, 1999-ம் ஆண்டு முடித்தவுடன் திருச்சியில் உள்ள ஒரு ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் செந்தில். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ரியல் வேல்யூ புரமோட்டர் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து முக்கியக் கட்டுமான நிறுவனமான் எல் அண்ட் டியில் இணைந்து தன் கட்டுமான அனுபவத்தை விரிவாக்கிக் கொண்டார்.
எல் அண்ட் டி போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலையை விட்டு சொந்த நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டார் ஹனி செந்தில்.
”அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பது என்பதுதான் திட்டம் என் ஆரம்பத்திட்டம். சில நண்பர்கள் இணைந்தார்கள். சொந்த பணம் பிளஸ் அப்பாவின் பிஎப் பணத்தை முதலீடு செய்து இடம் வாங்கினோம். இடம் வாங்கி கட்டத்தொடங்கிய பிறகு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து அந்த புராஜக்டை முடிக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், நம் திட்டத்தின் படியா வாழ்க்கை நடக்கிறது,” என்றார்.
ரியல் எஸ்டேட்டில் நடக்கும் ஒவ்வொரு கால தாமதமும் நஷ்டத்தை அதிகரிக்கவே செய்யும். புராஜக்டை முடித்தாலும் எங்களுக்கு பெரிய லாபம் இல்லை.
அடுத்து இதேபோன்ற தனிநபர் ஒருவருக்கு பெரிய பட்ஜெட்டில் வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டார்கள். வீட்டின் வேலையும் முடிகிறது. ஆனால் முடிந்தபிறகு கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தொகையில் 5 லட்ச ரூபாயை தரவில்லை வாடிக்கையாளர். அவர் சொல்லும் காரணம், குறைகள்.
துரதிஷ்டவசமாக ஒரு வீட்டை குறை சொல்ல வேண்டும் என ஒருவர் முடிவெடுத்துவிட்டால் பல காரணங்களை சொல்ல முடியும். அப்படி பெரிதாக இல்லாத விஷயங்களைக் குறைகளாக பட்டியலிட்டார். 5 லட்ச ரூபாய் வரவில்லை. இடையிடையே ரியல் எஸ்டேட் சம்பந்தமாக கிடைக்கும் சிறு சிறு புராஜக்ட்கள் மட்டுமே வருமானத்தை கொடுத்தது, என ஆரம்பத்தை நினைவு கூர்ந்தார் ஹனி செந்தில்.
”கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வருமானம் இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் போதுமான வருமானம் இல்லை. அதனால் வீடு மற்றும் நண்பர்கள் வட்டத்தில் மீண்டும் வேலைக்குப் போக வேண்டும் என நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். நானும் வேறு வழியில்லாமல் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விண்ணப்பிக்கத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் கற்ற அனுபவத்தை ஏன் மீண்டும் வேலைக்காக பயன்படுத்த வேண்டும் என தோன்றியது. அதனால் வேலைக்கு போகாமல் வேறு வழியை யோசித்தேன்,” என்கிறார்.
பிஸினஸ் கோச்
இந்த சமயத்தில்தான் ஆலோசகர்கள் குறித்து இவருக்குத் தெரியவந்தது. ‘நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை, என்ன தேவை என்பதை கற்றுக்கொண்டால்தான் அடுத்து என்ன செய்ய முடியும்’ எனத் தெரியும் என்பதற்காக Rajiv Talreja அவர்களின் வகுப்புக்கு செல்லத் தொடங்கினார் ஹனி செந்தில்.
5.5 லட்ச ரூபாய் செலுத்தி ஓர் ஆண்டு அவருடன் பயணித்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னிடம் அப்போது அவ்வளவு பணம் இல்லை. இந்த பணம் ஒரு பிஸினஸுக்காக வைத்திருந்தது என்பதால் இன்னொரு பார்டனரை சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால் யாரும் சேர முன்வரவில்லை. என்னிடம் பணமும் இல்லை, ஆனால் இந்த வகுப்பை நிச்சயம் அட்டண்ட் செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்.
‘’இல்லாத பணத்தை உருவாக்கி முதலீடு செய்தால்தான், நம்மிடம் இல்லாத பணம் கிடைக்கும்,’’ எனத் தோன்றியது. கையில் கொஞ்சம் பணம் இருந்தது. அப்போது என்னுடைய பழைய காருக்கான லோன் முடிந்தது. மீண்டும் அடமானம் வைத்து பணத்தை திரட்டி அந்த வகுப்பில் சேர்ந்தேன்.
ஒரு ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதியரியாகதான் சொல்லிக்கொடுக்கிறார். கற்றுக்கொள்வது மாணவர்களின் பொறுப்பு என்பதுதான் என்னுடைய எண்ணம். முடிந்தவரை கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். தொழில், வாழ்க்கை பற்றி பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக யூடியூப்-யை எப்படி தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
சென்னை டு திருச்சி
இதற்கிடையில் ரியல் எஸ்டேட் துறையில் சென்னையில் அதிக போட்டி அதனால் வாய்ப்பு குறைந்துகொண்டே இருந்தது. தவிர சென்னையில் செலவும் அதிகம். அதனால் திருச்சிக்கு செல்ல முடிவெடுத்தேன்.
2015ம் ஆண்டு சென்னை பெரு மழைக்கு சில வாரங்களுக்கு முன்பு திருச்சி சென்றுவிட்டேன். அங்கு சில சில புராஜக்டக்ள் செய்தேன். அதேபோல யூடியூப்-ல் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பது புரிந்தாலும் ஒரு சில வீடியோக்களுக்கு மேல் புதிய வீடியோகள் கிரியேட் செய்ய தோன்றவில்லை. காரணம் ஏற்கெனவே கிரியேட் செய்த வீடியோகளுக்கு வரவேற்பு இல்லை.
வீட்டில் கட்டப்படும் படிக்கட்டை வைத்து அந்த வீட்டின் கட்டுமானம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும் என வீடியோ வெளியிட்டிருந்தேன். ரசம் வைப்பது எளிதுபோல தோன்றும், அதுபோல படிக்கட்டும் எளிதானது போல இருக்கும், ஆனால் படிகட்டுகளை வைத்து அந்த கட்டிடம் குறித்து கூறமுடியும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அந்த வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தீடிரென 1,000க்கும் மேல் உயர்ந்து. டேட்டா கட்டணம் இப்போது போல அப்போது குறைவு அல்ல என்பதால் 1,000 என்பது கணிசமான வியூஸ்தான். அதன் பிறகு தொடர்ந்து வீடியோ பகிரத்தொடங்கினேன்.
யூடியூப் சேனலே பிசினசுக்கு மார்க்கெட்டிங்
’Honey Builders' என்ற பெயரில் யூடியூப் ஆரம்பித்தேன். அதுவே எனக்கு வரும் ப்ராஜக்ட்களுக்கு மார்க்கெட்டிங் டூலாக அமைந்தது. அதன் மூலமாக ரியல் எஸ்டேட் குறித்து பலரும் என்னிடம் ஆலோசனை பெற வந்தார்கள். இப்போதைக்கு சொந்த வீடு கட்டுபவர்களுக்கு அவர்களுக்கு திட்டத்துக்கு ஏற்ப புராஜக்டை முடித்துக்கொடுக்கிறோம். இதுதான் எங்களுடைய முக்கியத் தொழில்.
சென்னை, திருச்சி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் காலி நிலம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டித்தருகிறோம். திருச்சி சொந்த ஊர் என்பதால் எந்தவகையான புராஜக்டையும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் மற்ற ஊர்களில் 30 லட்ச ரூபாய்க்கு கீழான புராஜக்ட்களை நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை, என்றார்.
இப்போதைக்கு 15-க்கும் மேற்பட்ட புராஜக்ட்கள் செயல்பாட்டில் உள்ளன. எங்களிடம் 17 இன்ஜினீயர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளன. யூடியூப் மூலமாக மாதத்துக்கு 1000-க்கும் மேற்பட்ட விசாரணைகள் எங்களுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் சந்தேகம் கேட்பதற்குதான் என்றாலும் எங்களின் பிராண்ட் குறித்த பலருக்கும் தெரிய அந்த சேனல் தான் உதவுகிறது.
வீடுகட்டித்தருவதை விட சிலருக்கு வீட்டுக்கான ‘டிராயிங்’ மட்டும் கேட்பார்கள். அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வரைபடத்தை வழங்குகிறோம். இப்போதைக்கு,
ஆண்டுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான கட்டுமானத் திட்டங்களைக் கையாளுகிறோம். யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட கிடைக்கும் வாடிக்கையாளர்களையே பெரிது என நினைக்கிறோம்,” என்றார் ஹனி செந்தில்.
அடுத்தகட்டம்?
வீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஆனால் நம்மிடம் ஓரளவுக்கு பணம் இருந்தாலே வீடு குறித்து யோசிக்கலாம்.
வீட்டுக்கான கடனும் எளிதாகக் கிடைக்கிறது. அதனால் பலரும் பல நகரங்களில் இருந்து வீடு கட்டித்தர முடியுமா எனக் கேட்கிறார்கள். வாடிக்கையாளர்களில் இல்லாத இரண்டு விஷயங்கள் எங்களிடம் உண்டு. எங்களுக்கு கட்டுமானம் தான் தொழில் என்பதால் எங்களிடம் நேரம் மற்றும் லேட்டஸ்ட் அப்டேட் எங்களுக்கு தெரியும். வாடிக்கையாளரிடம் நேரமும் இருக்காது, தொழிலும் தெரியாது என்பதால் அந்த இடத்தைதான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
இந்தத் தொழிலை பிரான்ஸைசி அடிப்படையில் கொண்டு செல்வதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கி இருக்கிறேன். வாடிக்கையாளர்களிடம் பணம் இருக்கிறது. அந்த பணத்தை நம்மிடம் கொடுக்கிறார். இந்த இடத்தில்தான் பிரச்சினை உருவாகிறது. எவ்வளவு பணம் நமக்கு, எவ்வளவு பணம் பொருட்களுக்கு செலவாகிறது என்பதில் வாடிக்கையாளருக்கு திருப்தியின்மை ஏற்படுகிறது.
பணத்தை நம்மிடம் கொடுக்காமல் சம்பந்தபட்ட நபர்களிடம், (சிமெண்ட், ஜல்லி, பணியாளர்கள், ஸ்டீல்) கொடுக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான சிக்கலும் இருக்காது. நாமும் கன்சல்டண்ட் கட்டணம் போல வாங்கிக்கொள்ளலாம். இதற்கான ஆரம்பகட்ட வேலையை தொடங்கி இருக்கிறோம்.
இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் தமிழகம் முழுமவதும் பிரான்ஸைசி அடிப்படையில் பலரை ஹனி பில்டருடன் இணைக்க முடியும். ஒவ்வொரு நகரங்களில் சிறு சிறு கட்டுமான நிறுவனங்கள் / தனிநபர்கள் உள்ளனர். அவர்களுடன் பேசி வருகிறோம். எங்களுக்கு பல ஊர்களில் இருந்தும் விசாரணைகள் தொடர்ந்து வருவதால் இவை இரண்டையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
இதன் மூலம் ஹனி பில்டரும் தமிழ்நாடு முழுவதும் வளர முடியும். சிறு ஊர்களில் இருப்பவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை உருவாக்க முடியும் என செந்தில் கூறினார்.