’டிண்டர்’ செயலி காலத்திலும் பிரபலமாகத் திகழும் ’பாரத் மேட்ரிமோனி’
3.72 மில்லியன் செயல்படும் உறுப்பினர்களை கொண்டுள்ளதோடு, ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்ள உதவுவதன் மூலம், BharatMatrimony இந்தியாவின் மிகப்பெரிய திருமண பொருத்த தளமாக விளங்குகிறது.
இந்தியாவின் முதல் திருமண பொருத்த இணையதள சேவையான, பாரத்மேட்ரிமோனி, 1997 ல் மாதம் 10 டாலரில் துவக்கப்பட்டு, இன்று, பட்டியலிடப்பட்ட நிறுவனமாக, 2018 ல் ரூ.350 கோடி உத்தேச வருவாயை பெற்றுள்ளது.
வேகமாக மாறிவரும் சமூகத்தில், ஸ்மார்ட்போன்களில் அதிவேக டேட்டாவை சார்ந்திருப்பதாக வளர்ந்திருக்கும் சமூகத்தில் பொருத்தமானதாக தொடர்வது என்பது மிகவும் சவலானது தான். பாரத்மேட்ரிமோனி போன்ற திருமண பொருத்த தளங்களின் காலம் முடிந்துவிட்டது என பலர் நினைக்கலாம். டேட்டிங் செயலிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இளசுகள் தங்களுக்கான துணையை தேடத்துவங்கியிருக்கும் காலம் இது அல்லவா!
ஆனால், எண்ணிக்கை வேறுவிதமாக இருக்கின்றன தெரியுமா? 60 சதவீத சந்தை பங்கு மற்றும் இந்தியா முழுவதும் 135 மையங்களுடன் பாரத்மேட்ரிமோனி, இந்தியாவில் திருமண பொருத்த வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கிறது. ஷாதி.காம், ஜீவன்சாத்தி.காம் போன்ற தளங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
பாரத்மேட்ரிமோனி தளத்தில் 3.72 லட்சம் செயல்படும் கணக்குகள் உள்ளன. ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்தத் தளம் வாயிலாக திருமணம் செய்து கொள்கின்றனர்.
நிறுவனம், இப்போது, மேட்ரிமோனி மைன்மேப்ஸ் ( திருமண மண்டபப் பதிவு சேவை), மேட்ரிமோனி போட்டோகிராபி, மேட்ரிமோனி பஸார் (திருமணம் சார்ந்த சேவைகள்), மேட்ரிமோனி டைரக்டரி போன்ற சேவைகள் மூலம், இந்தியாவின் 56 பில்லியன் டாலர் திருமணச் சேவை சந்தையை குறி வைத்துள்ளது.
சொர்கத்தில் நிச்சயம்
இந்தியா போன்ற நாட்டில், சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் இதற்குக் கைகொடுக்கிறது. இந்த உண்மையை, 1997 ல் முருகவேல் ஜானகிராமன் பரிசோதித்து பார்க்கத் தீர்மானித்தார்.
1990 களில் அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், தமிழ் சமூகத்திற்கான இணைய மேடை ஒன்றை துவக்க விரும்பினார். தமிழ் நாட்காட்டி, பண்டிகைகள், இந்தியாவுக்கான பயண விவரங்கள் போன்ற தகவல்களை அது அளித்தது. திருமண பொருத்த சேவையையும் வழங்கியது.
காலப்போக்கில், திருமண பொருத்த சேவைக்கே அதிக பார்வையாளர்கள் இருப்பதை பார்த்தவர், அதைக் கட்டணச் சேவையாக மாற்ற தீர்மானித்தார். அதன் வெற்றிக் கதைகளில் ஒன்றாக, 1999ல் அவரது திருமணமும், இணையதளம் வாயிலாக நடைபெற்றது.
எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசி, 46 வயதான முருகவேல் ஜானகிராமன், தனது மாமானார் இணையதளத்தில் பதிவு செய்திருந்ததையையும், தன்னை கேள்விகளால் துளைத்தெடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
“அவர்கள் அகமதாபாத்தில் வசித்தனர். அவர் எனது ஜாதகத்தை அனுப்பக் கோரினார். அது தீபா (இப்போது அவர் மனைவி) ஜாதகத்துடன் பொருந்தியது. நான் அப்போது அமெரிக்காவில் வசித்தேன். ஓரளவு தகவல் தொடர்பு நிகழ்ந்தது. பின்னர் நான் சென்னை வந்த போது திருமணம் நடைபெற்றது,” என்கிறார் அவர்.
முருகவேல் திருமணம் போலவே, அவரது திருமண பொருத்த வரத்தகமும் வெற்றிகரமாக தொடர்கிறது.
”திருமணம் மூலம் மேம்பட்ட பாரதத்தை உருவாக்குவோம்,” எனக் கூறும் அளவுக்கு அவருக்கு திருமணம் எனும் அமைப்பு மீதான நம்பிக்கை வலுவாக இருக்கிறது.
மேம்பட்ட திருமணங்களை உருவாக்குவதற்காக, நிறுவனம், வலைப்பதிவு மற்றும் கட்டுரை வாயிலாக ஆலோசனையும் வழங்கி வருகிறது.
டேட்டிங் செயலிகள்
“மனித குலத்திற்கு தீமைகளை விட நன்மைகளை அதிகம் செய்யும் வெகு சில சமூக வலைப்பின்னகளில் ஒன்றாக, பாரத்மேட்ரிமோனி திகழ்கிறது. இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை தக்க வைக்கவும், குடும்பத்தை விரிவாக்கவும் அவர்கள் சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளனர். மேட்ரிமோனி தளத்தின் உறுப்பினர் பக்கம் அத்தனை மதிப்பு மிக்கதாக இல்லாமல் போகலாம், ஆனால், அதன் பயனாளிகளுக்கு அது வாழ்நாள் முழுவதும் பயனளிக்கக் கூடியது. இது அருமையானது,” என்கிறார் டேட்டிங் செயலியான ஐசல் (Aisle ) நிறுவனர் அபே ஜோசப்.
பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண கருத்தாக்கம் இல்லாத மேற்கத்திய நாடுகளின் கருத்தாக்கமாக டேட்டிங் செயலிகள் அமைந்தாலும், அவரது நிறுவனத்தைபோன்ற ஸ்டார்ட் அப்கள், மாறி வரும் சூழலை சாதகமாக்கிக் கொண்டு, மேற்கத்திய பாணியை காதலை பெறுவதற்கான சேவைகளை அளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“ஏறகனவே ஆன்லைன் டேட்டிங்கிற்கு ஆதாரவாக மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பாரம்பரிய திருமண பொருத்தத் தளங்கள், இளம் தலைமுறையை இந்த மாற்றத்தில் இருந்து ஈர்ப்பது கடிமமானது,” என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், ஆன்லைன் டேட்டிங்கை முருகவேல் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. அவர் பாரம்பரியத்தை நம்புகிறார். இந்தியாவில் பாரம்பரியமே கோலோச்சுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை பாரத்மேட்ரிமோனி இயக்குனர் குழுமத்தில் இருந்த, முருகவேல் மீது மிகுந்த மதிப்புவைத்திருக்கும், தொழில்முனைவரும், முதலீட்டாளருமான, அலோக் மிட்டல்,
“முருகவேல் திருமண பொருத்தத்தை ஒரு பரிவர்த்தனையாக மட்டும் பார்ப்பதில்லை, எனவே, இந்த சேவையில் பல புதுமைகள் நம்பிக்கை சார்ந்து அமைகிறது,“ என்கிறார்.
சமூகம் சார்ந்த திருமண பொருத்தத்தில் கவனம் செலுத்துவதே நிறுவனத்தின் பலம் என அவர் கருதுகிறார். “ஒரு சில சமூகங்களில் இது மிகவும் ஆழமாக இருக்கிறது. மற்ற சமூகங்கள், சமூகங்களுக்கு இடையிலான திருமணத்தை ஏற்றுக்கொள்கின்றன,” என்கிறார் அவர்.
சமூக பொருளாதார மாற்றங்களை சுட்டிக்காட்டுபவர், பிள்ளைகள் சார்பில் பெற்றோர்கள் பங்கேற்பதில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் குறிப்பிடுகிறார். இதற்கு முன், 70:30 எனும் விதத்தில் பெற்றோர் முன்னிலை வகித்தனர் என்றால், இப்போது இது 30:70 என மாறியிருக்கிறது என்கிறார்.
“டிண்டர் தலைமுறையை பார்க்கும் போது சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், திருமணம் என்று வரும் போது, டேட்டிங்கை விட பல பழைய மதிப்பீடு சார்ந்த அமைப்புகள் வலுவாக இருப்பது தான். இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்நாள் துணையை தேடும் நிலையில், அதை அடுத்த டேட்டை கண்டறிவதில் இருந்து மாறுபட்ட செயலாக பார்க்கின்றனர். இது அந்த அளவு ஆழமாக உள்ளது, எத்தனை வேகமாக மாறும் என்பது காலம் தீர்மானிக்கும்,” என்கிறார் அவர்.
அன்பின் வழி
இண்டிபி டெக்னாலஜிஸ் (Indifi Technologies) இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒவாவான அலோக், மாறிவரும் சூழலில் பாரத்மேட்ரிமோனி பொருத்தமாக நீடிக்க வேண்டும் எனில், பழக்க வழங்கங்களில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை கவனித்து அதற்கேற்ப தங்கள் சேவையில் இந்த மாற்றங்களை பொருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கிறார்.
“பிராண்ட் சவாலும் இருக்கிறது. இதை ஏற்பாடு செய்யும் திருமணத்திற்கான பிராண்டாக இளம் தலைமுறையினர் பார்க்கத்துவங்கினால், அதன் சேவைகளை மீறி இந்த உணர்வே பிரதானமாக இருக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.
பாரத்மேட்ரிமோனி வலுவான பிராண்டாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த கெனான் பாட்னர்ஸ் நிறுவனத்தில் அலோக் அங்கம் வகித்தார். 20 ஆண்டுகளுக்கு முன் திருமண பொருத்த வர்த்தகம் அச்சில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருந்தது. இந்தத் துறையில் வாய்ப்பை கண்டறிந்த முருகவேலின் அர்ப்பணிப்பு முதலீட்டாளர்களை கவர்ந்தது.
மேலும் அவர் முதலீட்டாளர்களை அணுகிய போது, நல்ல வர்த்தகமும், பிராண்ட் மதிப்பும் உண்டாகியிருந்தது.
“இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சென்று வந்து கொண்டிருந்தேன். 2004 ல் இந்தியா திரும்பினேன். 2006 ல் இது 4 மில்லியன் டாலர் வர்த்தகமாக இருந்தது. அப்போது யாஹு மற்றும் கேனான் பாட்னர்ஸ் மூலம் 8.61 மில்லியன் டாலர் திரட்டினோம். 2008 ல் யாஹு, கேனான் பாட்னர்ஸ், மேஸ்பீல்டு மூலம் 12 மில்லியன் டாலர் திரட்டினோம். மனைகள், வேலைவாய்ப்பு, ஆட்டோமொபைல், மொபைல் போன்ற பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்தோம்,” என்கிறார் முருகவேல்.
2008 ல் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டதால், முருகவேல் தனது வர்த்தக உத்தியை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. “எங்களிடம் குறைவான ரொக்கம் இருந்தது, சர்வதேச பொருளாதாரம் மோசமாக இருந்தது. ரொக்கத்தை மிச்சம் பிடிக்க வேண்டிய நிலை. மைய வர்த்தகம் சாராத பிரிவுகளில் செலவுகளை குறைக்க இயக்குனர் குழு நிர்பந்தித்தது. எனவே துணை பிரிவுகளை மூடிவிட்டு, திருமண பொருத்தம் மற்றும் மனைகளில் மட்டும் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் அவர்.
”ஆறு மாத கலாத்தில் லாபத்திற்கு மாறினோம். தொழில் முனைவர் என்பதில் இருந்து நான் சி.இ.ஓ.வாக மாறினேன். நிதி, மார்க்கெட்டிங் மற்றும் பெரிய நிறுவனத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் அவர்.
இன்று, திருமன சேவை வர்த்தகத்தில் நுழைந்திருப்பதோடு, பாரத்மேட்ரிமோனி 15 மொழிகளில் சேவை வழங்குகிறது. பணக்காரர்களுக்கான எலைட் மேட்ரிமோனி சேவை உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள், நட்சத்திரங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.10 லட்சம் வரை இருக்கிறது.
எளிய துவக்கம்
முருகவேல் 21 ஆண்டுகளுக்கு முன் வர்த்தகத்தை துவக்கிய போது, அவர் நிறைய சவால்களை எதிர்கொண்டார். இனைய வசதி பரவலாகாதது மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனை இல்லாதது ஆகியவை அதில் பிரதானமானவை. அவர் சமுதாய மேலாளர்களை நியமித்து, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று சேவை அளித்தார்.
இன்று பாரத்மேட்ரிமோனி, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் செயல்படுகிறது. சென்னை துறைமுகத்தில் தொழிலாளி ஒருவரின் மகனான, முருகவேல், கல்வி விஷயங்களில் தனக்கு ஆலோசனை சொல்ல யாரும் இல்லை என்கிறார். பி.எஸ்.சி.ரசாயனம் படித்தால் ஆய்வுக்கூட உதவியாளர் ஆகலாம் என அவரது மாமா கூறியிருக்கிறார். ஆனால் அவர் பி.எஸ்.சி புள்ளியியல் படித்து பின்னர் எம்.சி.ஏ படித்தார்.
“எம்.சி.ஏ பட்டம் என் வாழ்க்கையை மாற்றியது,” என்கிறார் அவர். அதன் மூலம் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அங்கிருந்து அவரது வெற்றிக்கதை ஆரம்பமாகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: சைபர்சிம்மன்